நடிக்க வந்தவர்கள் எல்லோரும் சிவாஜியிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட வந்தவர்கள் எல்லோரும் எஸ்.பி.பி யிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டைரக்டர்கள் எல்லோரும் பாலச்சந்தரிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத வந்தவர்கள் எல்லாரும் சுஜாதாவிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை?
நாடே பேசும் அந்தத் தலைவர், முதலமைச்சராகவும், அகில இந்தியத் தலைவராகவும் பல வருஷங்கள் இருந்தவர். இறந்து போகிற போது வாடகை வீட்டில்தான் இருந்தார். ஐந்து வருஷம் மந்திரியாக இருந்தவர்கள் எத்தனை வீடு (ஐ மீன் ஹெளஸ்) வைத்திருக்கிறார்கள்?
இறக்கும் போது இருநூற்றுச் சொச்சம் ரூபாய்தான் வைத்திருந்தார். மந்திரியான முதல் வருஷமே வெள்ளையிலேயே சில கோடிகள் சேர்த்துவிடுகிறார்கள் மஹானுபாவன்கள். கறுப்பில் எவ்வளவோ! காமராஜர் ஆள்தான் கறுப்பே ஒழிய பணம் வெளுப்பில் கூட அவரிடம் இருந்ததில்லை!
சீனியர்கள் கட்சிப் பணிக்கு வரவேண்டும் என்று நேரு (அவரே அதைச் செய்யாத போதும்) சொன்னதும் படாரென்று ராஜினாமா செய்தாரே? இன்றைக்கு உதைத்து உருட்டி விட்டாலும் ஓடி வந்து நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொல்கிறார்கள்.
எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் கர்வம் வந்தால் அம்பேல். நாங்கள் படுத்துக் கொண்டே ஜெயிப்போம் என்று முதன்முதலில் கர்வமாக அவர் பேசிய போது டாக்டர் மத்தியாஸ் ஜெயித்தார்.
அட இதையாவது கற்றுக் கொண்டார்களா? ம்ம்ஹூம், என்ன ஆணவம், என்ன பேச்சு…..
ரிப்பீட் ஆகிற விஷயங்களைத்தான் விஞ்ஞானம் ஏற்கிறது. அப்படி ஆகாததெல்லாம் ஒண்டர். அந்த வகையில் பார்த்தால் காமராஜர் ஒரு அதிசயம். அடுத்த முறை தாஜ்மஹாலுக்கு பதில் காமராஜரை நாம் சிபாரிசு செய்யலாம்.
No comments:
Post a Comment