'2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்' என்று விடாப்பிடியாகப் போர்க் குரல் கொடுத்துவரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரணியன் சுவாமி, சென்னையில் முகாமிட்டிருந்தார்.
அவரை சந்தித்தபோது, ''2008-ம் வருடம் ஏப்ரல் 21-ம் தேதியன்று, நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்,
'நாம் இருவரும் விலை நிர்ணயம் தொடர்பாக ஆய்வு நடத்தி சில முடிவுகளை எடுத்துவிட்டுப் பிறகு அதை பிரதமரிடம் சமர்ப்பிக்கலாம்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதையே, பிரதமரும் கூட ஒரு பிரஸ் மீட்டில், 'இரண்டு அமைச்சர்களும் கூட்டாக வந்து சொன்னார்கள்’ என்று பேசி இருக்கிறார். அப்படியென்றால், இருவரும் கூட்டாக உட்கார்ந்து பேசித்தான் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரே குற்றத்தை செய்த இருவரில்ஆ.ராசா ஜெயிலில் இருக்க... ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? இவரையும் சி.பி.ஐ. விசாரித்தால் கண்டிப்பாகப் பல உண்மைகள் வெளிவரும்...'' என்றவரிடம்,
''சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஃபைலில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் என்று புகார் கிளம்பி யுள்ளதே?''
''அதற்கு முழுப் பொறுப்பையும் சிதம்பரம் சார்ந்த துறையினர்தான் ஏற்க வேண்டும். ஏதோ சந்தேகத் தின் பேரில் நீதிமன்றம் அந்த ஃபைல்களைக் கேட்டு வாங்கிப் பார்த்தபோது, சில பக்கங்கள் மிஸ்ஸிங். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் விலை நிர்ணயம் தொடர்பாக நான்கு முறை மீட்டிங் நடத்தி இருக்கிறார்கள். அந்த மீட்டிங்குகளின் பேச்சுகள் அனைத்தும் மினிட்ஸ் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மூன்று மீட்டிங்கின் விவரங்கள் மாயமாக மறைந்துவிட்டன. ஒரே ஒரு மீட்டிங் தொடர்பான மினிட்ஸ் மட்டும் எனக்குக் கிடைத்தது. அதைத்தான் கோர்ட்டில் நான் சமர்ப்பித்து இருக்கிறேன். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் கூட்டாக விலை நிர்ணயம் செய்தார்கள் என்பதை உறுதி செய்யும் முக்கிய ஆவணம் அது!''
''நிதித் துறையின் துணை செயலாளர் ராவ், 'ஸ்பெக்ட்ரம் ஊழலை சிதம்பரம் நினைத்திருந்தால், அப்போதே தடுத்திருக் கலாம்' என்று எழுதியிருக்கிறாரே? நிதித் துறை அமைச்சர் பிரணாப்புக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லையா?''
''ராவ் பெயரில் வெளியான ஆதாரத்தைக் குறிப்பு, கருத்து, கடிதம், ஆவணம் என்றெல்லாம் குறிப்பிடக் கூடாது. அது, பக்காவான ஆபீஸ் மெமோரண்டம். பிரதமர் செயலர், கேபினெட் செயலர், தொலைத் தொடர்புத் துறை செயலர், நிதி செயலர் என்று பலரும் உட்கார்ந்து தயார் செய்து, கீழ் நிலை அதிகாரியான ராவ் பெயரில் அப்படிப் பதிவாகி இருக்கிறது. இப்படித்தான் அரசு ஃபைல்களில் வழக்க மாகப் பதிவாகும். அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது. பிரணாப் முகர்ஜி தரப்பில்கூட, 'அந்தக் கருத்து என்னுடையது அல்ல. ஆனால், ஆதாரங்கள் என்னுடையது' என்றுதான் சொல்லப்படுகிறது. சிதம்பரம் தடுத்திருக்கலாம் என்பது பல துறைத் தலைவர்களின் கருத்து, அது ராவின் தனிப்பட்ட கருத்து அல்ல.''
''சிதம்பரம் விவகாரத்தில் நீங்கள் மிகவும் தீவிரமாக இருப்பதற்குக் குறிப்பிட்ட, தனிப்பட்ட காரணங்கள் ஏதாவது உண்டா?''
''இதில் என்ன தனிப்பட்ட காரணம் இருந்துவிட முடியும்? ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா குற்றவாளி என்றால், சிதம்பரமும் குற்றவாளி என்கிறேன் நான். உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நான் ஒரு மணி நேரம் வாதம் பண்ணினேன். ஆனால், சிதம்பரம் தரப்பில் 16 மணி நேரம் வாதம் செய்து, மேலும் அவகாசம் கேட் டார்கள். அக்டோபர் 10-ம் தேதியுடன் வாதத்தை முடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். அடுத்து, நான் பதில் கொடுப்பேன். எனக்கு அப்போதும் அரை மணி நேரம் போதும். இதேபோல், பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சக குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்கச் சொல்லி நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கு முடிவைப் பொறுத்து, இந்த வழக்கு விசாரணை நடக்கும்.
இது தவிர, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். 'பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கும், சீன ராணுவத்திடம் இருந்து தளவாடங்களை வாங்கும் பிசினஸில் ஈடுபட் டுள்ள இன்னொரு கம்பெனிக்கும் லைசென்ஸ் தரக் கூடாது’ என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஒரு கடிதத்தை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அனுப்பியிருக்கிறார். ஆ.ராசாவிடமும் இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், இவர்கள் கேட்கவில்லை. இதையும் நான் அடித்துச் சொல்கிறேன். இது தேசத்துரோகம் அல்லவா!''
''ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தைத் தொடர்ந்து வேறு யார் சிக்குவார்கள்?''
''சோனியாவின் மருமகன் வதேரா சிக்கலாம்! அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் நான் தீவிரமாக இருப்பதால், சோனியா பொய் வழக்குகளை என் மீது ஏவப் பார்க்கிறார். கடந்த ஜூலையில் நான் ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை, மத மோதலைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக டெல்லியில் இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொறுத்திருந்து பாருங்கள்! இந்த பொய் வழக்குகளை நான் தவிடு பொடி ஆக்குவேன்!''
No comments:
Post a Comment