Sunday, October 23, 2011

கட்சிகளும் காட்சிகளும் - தேர்தல் முடிவுகள் குறித்த ஓர்

அ.தி.மு.க.
  • உள்ளாட்சி தேர்தல் முடிந்து அம்மாவின் கட்சி அறுதிப் பெரும்பான்பை பெற்று தனித்து நின்றாலும் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இது குறுகிய காலத்தில் அவரின் அரசுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கடந்த அரசை மைனாரிட்டி அரசு என்று மாத்திரமே விளித்து வந்த அம்மா யாரும் மறந்தும் கூட அந்த வார்த்தையைப் பிரயோகிக்க முடியாத படி வெற்றியைப் பறித்திருக்கிறார். இதனால் அவருக்கு கூடுதலான பொறுப்புணர்வு சேர்ந்திருக்கிறது. இதைச் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு அவர் சொல்லியிருப்பது போலவே அனைத்து மாநிலங்களிலும் முதன்மையான மாநிலமாக இதை மாற்றிவதிலே கவனம் செலுத்த வேண்டும். முன்பு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த்திருந்த போது அவரின் பேச்சுகளில் இருந்த ஆணவம் இப்போது முற்றிலும் இல்லை என்று சொல்லுவது கடினம் என்றாலும் கொஞ்சம் குறைந்தே காணப் படுவது கவனிக்கப்பட வேண்டியிருகிறது. மரணம் எதிர் நோக்கியிருக்கிற தமிழர்களுக்கான தீர்மானம், மற்றும் அணு உலைக்காக அவர் மக்கள் பக்கம் சார்ந்த்திருக்கிற அணுகுமுறை என்று சிலவற்றைச் சொல்லலாம். ஆனால் அவைகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு மக்களைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கான சாணக்கியத் தனம் என்று  சிலர் கூறும் குற்றச் சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கும் வண்ணம் அவரின் முடிவுகள் இருப்பதில்தான் இந்தக் குற்றச் சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று மெய்ப்பிக்க இயலும். "வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வீதி வீதியாகச் சென்று நன்றி சொல்ல வேண்டும்" என்ற அவரது அறிக்கை அதற்கான முதல் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம். [ஆனால் சமச்சீர் கல்வி மற்றும் சட்டமன்ற இட மாற்றம் தொடர்பான சில விஷயங்கள் அவரின் அணுகுமுறை மாற வில்லை என்று சொன்னாலும் மக்கள் சார்பான மேற்சொன்ன இரண்டு விஷயங்கள் முன்பு அவை அடிபட்டுப் போய்விடுகின்றன]. இந்த வெற்றி காங்கிரசுக்கு மற்றும் கலைஞரின் கட்சிக்கு எதிரான மக்களின் கோபம் இன்னும் தீர வில்லை என்பதோடு அ. தி. மு.வுக்கான ஆதரவையும் அதிகமாக சேர்த்திருக்கிறது என்பதில் மெஜாரிட்டி ஆட்சி என்பது மக்களும் மேம்பாட்டுக்கான உழைப்பில் இறங்குவதற்கான உத்திரவாதம் என்பதால் மக்களின் வெறுப்புக்குள்ளாகாமல் இருக்க வேண்டியது அவசியம் - அப்படி வெறுப்புக்குள்ளானால் என்ன ஆகும் என்பதை கலைஞரின் கண்ணீரைப் பார்த்திருக்கும் அம்மா மறக்க மாட்டார் என்றே கருதுகிறேன். அதை மறக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதை அவர் நன்கு அறிவார்.

தி.மு.க.
  • கலைஞர் வெறும் வாயிலே அம்பெய்துவார் - அதாவது வாய்ச்சொல்லில் வீரர் என்கிறேன். சில சமயங்களில் பேசிக் கெடுப்பார், பல சமயங்களில் பேசாமல் கெடுவார். இத்தனைக்குப் பிறகும் கடந்த தேர்தலில் தி.மு.க தொண்டர்களால்தான் தி.மு.க. தோற்றது என்று கலைஞர் பேசியதன் விளைவோ என்னவோ ஒரு மாநகராட்சியைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. தமிழ் மக்களுக்கு இன்னல்கள் நடந்த போது பேசாமல் இருந்ததன் விளைவு இப்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  தான் ஆட்சியில் இருந்த போதெல்லாம் இத்தகைய போராட்டங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது அ.தி.மு.க அரசு இவைகளைக் கண்டு கொள்வதில்லை என்ற அவர் வைக்கிற குற்றச் சாட்டை பாமர மக்கள் கூட நம்ப வில்லை என்பதையே இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஆளும் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எப்போதும் நடப்பதுதான் என்று அறிக்கை வேறு. அது எந்த அளவுக்கு என்றால் - மு. க. அழகிரி வார்டிலேயே தி. மு.க. நான்காவது இடத்திற்குத் தள்ளப் பட்டிருக்கின்றது என்பதிலிருந்து நாம் புரிந்தது கொள்ளலாம். மத்தியில் இன்னும் பதவியில் அமர்ந்திருக்கும் அவர் மக்கள் பிரச்சனைக்காக தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டு வெறும் அறிக்கையில் இல்லாமல் - இறங்கி வேலை செய்தால் ஒழிய அவரால் ஒன்றும் பேச முடியாது - ஏனெனில் வெறும் பேச்சைக் கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை அவர் அறிவார் - வரிசையாகத் தோற்றுக் கொண்டிருந்த கால கட்டங்களிலேயே அவர் சொல்லுவார் - பேச்சைக் கேட்க இங்கே வருகிறீர்கள் ஆனால் வாக்கை மட்டும் அவருக்குப் போட்டு விடுகிறீர்கள் என்று - இருந்தாலும் அதுதான் அவரைக் காப்பாற்றிக் கொண்டும் வந்திருக்கிறது. ஆனால் இனியும் அந்த நிலை நீடிக்காது என்றே கருதுகிறேன். இருந்தும் அவர் பேசுவதை யாரும் தடுத்து விட முடியாது என்கிற விஷயமும் எட்டிப் பார்க்கின்றது.
காங்கிரஸ்
  • அதைப் பற்றி எழுத வேண்டுமா என்ன? பதினைந்து மாநகராட்சி உறுப்பினர்களைக் கொண்டு மாநகராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இதில் அ.தி,மு.க - முன்னூற்றி ஐம்பது உறுப்பினர்களையும், தி.மு.க. நூற்றி ஒன்று உறுப்பினர்களையும் [மொய்] பெற்றிருக்கிறது. அவைகளோடு ஒப்பிடும் போது இந்தப் பதினைந்து பெற்றதற்கு ஒன்று வாங்கிய பா.ம. க. வே மேல். இத்தனை ஆண்டு கால வரலாறு உள்ள கட்சி தமிழர்களை அழித்தொழிக்க ஆவன செய்துவிட்டு அவர்களிடமே ஆட்சி பீடத்திற்கு அனுமதி கேட்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மமதை இனியாவது மாற வேண்டும். ராகுல் காந்தி அமெரிக்கப் பெண்ணை மணக்க இருப்பதாக வரும் வதந்திகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் - [தனி நபர் சொந்த விஷயங்களை உள்ளிழுப்பதற்கு மன்னிக்கவும் - வாக்குக்காக கிராமங்களுக்குச் சென்று மதியம் கஞ்சி குடித்துவிட்டு மாலையில் அரண்மனையில் படுத்துறங்கும் நடிப்பே இப்படிப் பேச வைக்கிறது] - இலங்கைக்கு ஆயுதம் வழங்கி தமிழரை கொன்றது உறுதிப் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் - தமிழ் மீனவர்களை கொன்றொழிக்கப் படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் - தமிழக முதல்வரின் கூடங்குளம் பற்றிய கடிதத்தைக் கூட பிரதமரிடம் சேர்க்காத நிலையில் - எந்தத் தைரியத்தில் இங்கே வந்து இன்னும் போட்டி போடுகிறார்கள் [அவர்களுக்குள் நடக்கும் போட்டியல்ல]. இனிமேலாவது மிச்சமிருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதே வேண்டுகோள்.
பா.ஜ.க.
  • ஒரு கட்சியின் மேல் இருக்கும் வெறுப்பும் கோபமும் அதனுடைய எதிர் கட்சியின் வெற்றிக்கு நிச்சயம் வலுச் சேர்க்கும் - அ.தி.மு.க. வின் வலு கூடியது போல. எனவே காங்கிரசின் மேல் இருக்கும் கோபம் எட்டுத் திக்கும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த ஒன்றே அடுத்த முறை பா. ஜ.கவை ஆட்சி பீடத்தில் அமர்த்தும். [ஆருடம்] - எனவே அத்வானி அவர்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம். உள்ளாட்சித் தேர்தலில் இது எதிர்க் கட்சி என்கிற நிலையில் இல்லாமல் இருப்பதால் பா.ஜ.க. எப்போதும் தோற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இரண்டு நகராட்சித் தலைவர் பதவியைத் தட்டிப் பறித்திருக்கிறது. ஒன்று கோவை மாவட்டத்தில் மற்றொன்று நாகர் கோவிலில். இரண்டிலும் மதக் கலவரங்களை மையப் படுத்தி அதைக் கூர்மைப் படுத்தி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டது. இது இன்னும் தனது செல்வாக்கைப் பயன் படுத்த இந்த வெற்றிக்குப் பிறகு இதே ஆயுதத்தை மீண்டும் எடுக்கலாம் என்பதால் தமிழ் மக்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
தே.தி.மு.க
  • விஜயகாந்த் கட்சி சில படிப்பினைகளுக்குப் பிறகு - இந்தத் தேர்தலில் ஐந்து மாநகராட்சி உறுப்பினர்களையும் இரண்டு நகராட்சித் தலைவர்களையும் பெற்றிருக்கிறது என்பது அவருக்கென்று இருக்கிற வாக்கு வங்கியையும் அதோடு சேர்த்து மிகப் பெரிய கொள்கை ஒன்றும் இல்லையென்றாலும் சினிமா தருகிற புகழை வைத்துக் கொண்டே வெற்றி பெற முடியும் என்பதற்கே அவர் உதாரணம். மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்று மில்லை. விஜய் தாராளமாய் தேர்தலில் குதிக்க அவரது அப்பா அவருக்கு அனுமதி அளிக்கலாம்.
ம.தி.மு.க. 
  • சட்டமன்றத் தேர்தலில் தனித்து விடப்பட்ட கட்சி - தன்மானத்தோடு ஒதுங்கி நின்ற வை. கோ வின் புகழ் சற்றே கூடியிருக்கிறது... மாநகராட்சியில் எட்டு கவுன்சிலர்களை பெற்றிருக்கிறார்கள். ஒரு நகராட்சித் தலைவர் பதவியையும் பெற்றிருக்கிறார்கள். இது தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளையும் தமிழர்கள் சார்பாக அவர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்கான வெற்றியாகக் கருதுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பா.ம.க
  • தனித்துப் போட்டியிட்டதற்காக அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு மாநகராட்சி உறுப்பினரைப் பெற்று மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள். இனிமேலும் தனித்துப் போட்டி போடுவார்களா - மன்னிக்கவும் போட்டியிடுவார்களா?
ம.ம.க.
  • நேற்றையக் கட்டுரையில் பிரபாகரனின் வருத்தத்தைப் போக்கும் விதமாக மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு வெற்றி - கோவை மாவட்ட என்பத்தி ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. எந்த மாவட்டம் என்பதைக் கவனிக்க.

எனவே
தனித்து நின்று தங்கள் கட்சிகளின் பலத்தை அறிந்து கொள்ளவே என்று எல்லாராலும் சொல்லப் பட்டாலும் நடந்த முடிவுகள் வெறும் கட்சியைச் சார்ந்ததாகத் தெரியவில்லை. கட்சி சார்பு என்பதையும் தாண்டி - ஒரு கட்சியின் மீதான வெறுப்பு, ஒருவரின் அணுகுமுறை மாற்றம் - மத்திய அரசின் தமிழர்களின் மீதான வெறுப்பு - போன்ற பல்வேறு காரணிகள் இந்தத் தேர்தலில் அடித் தளமாய் இருந்திருக்கின்றன. 

இனிமேலாவது மக்களின் உணர்வுகளை - கொள்கைகளை முன்னிறுத்த வேண்டிய கட்சிகளே தேவை என்பதையே இது உணர்த்துகிறது. 
இதுவே உண்மைஎன்றால் வாழ்க ஜன நாயகம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...