எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து நியூஸ் பேப்பரில் இந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்…
‘’விபச்சார அழகிகள் கைது!’’
வாலிப வயதில் இதுபோன்ற செய்திகளை ஒருவித ஆர்வக்கோளாறோடு செய்தியுடனான போட்டாவில் இருக்கும் அழகிகளைப் பார்க்கும் ஆவலில் படித்திருக்கிறேன். ஆனால் ஒரு வயதுக்குப் பின்னர்தான் இந்த செய்திக்குப் பின்னால் இருக்கும் மனக்காயங்களையும், வலிகளையும், வேதனைகளையும் பற்றி யோசிக்கத்தோன்றியிருக்கிறது.
‘விபச்சாரம் குற்றம்’ என்ற சட்டத்தை இயற்றியவர்கள் அதில் சம்பந்தப்படும் பெண் மட்டும் பாதிக்குமாறும், அதுபோன்ற பெண்ணைத் தேடிச்சென்ற ஆணுக்கு எந்த விதமான பங்கமும் வராமல் காக்கும் விதத்திலும் தண்டனைகளை வரையறுத்தது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை. ஒருவேளை கணவனைக் கூடையில் சுமந்து சென்று தாசி வீட்டில் விட்ட மனைவியின் வரலாற்றைக்கொண்ட நாடு என்பதாலா?... இல்லை… சட்டத்தை வரையறுத்த மேதாவிகளிடையே பெண்கள் எவரும் இல்லாது போனதால் விளைந்த ஆணாதிக்கச்சட்டமா இது?... எப்படியிருந்தாலும் எனது கண்ணோட்டத்தில் இது முற்றிலும் தவறான சட்டமே!
ஒரு பெண் தனது உடலை விற்று வாழ்க்கையை நகர்த்தும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் என்றால் வறுமை என்ற ஒற்றைச்சொல்தான் அடிப்படைக்காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வறுமைக்குப் பின்னாலிருக்கும் குற்றவாளிகள் பலவிதமாய் இருக்கக்கூடும்…
அவளுக்கு சரியான வாழ்க்கைப் பாதையை அமைத்துத்தர தவறிய பெற்றோர்களாய் இருக்கலாம்.
அவளுக்கு சரியான வாழ்க்கையை அமைத்துத்தர தவறிய கணவனாய் இருக்கலாம்.
வாலிப பருவத்தில் அவளுக்கு சரியான பாதுகாப்பின்றி அவளைக் கடத்திச்சென்று விபச்சாரத்தில் தள்ளிய வெறிக்கூட்டமாய் இருக்கலாம்.
அவளுக்கு குடும்பத்தையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ளுமளவுக்கு வருமானத்தை அமைத்துத் தராத அரசாங்கமாய் இருக்கலாம்.
பணமும், புகழும் கிடைக்கும் ஆசையில் அவள் சிக்கிச் சீரழிந்து வாழ்க்கையைத் தொலைத்தது சினிமாத்துறையாய் இருக்கலாம்.
ரத்தஉறவுகளை காக்கும் பொறுப்பிலிருக்கும் பெண்ணுக்கு வருமானத்திற்கான ஒரே வழியாய் அவளது உடலையே அர்ப்பணிக்கச் செய்த இந்த சமூகமாய் இருக்கலாம்.
விபச்சாரம் செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் இப்படி பல குற்றவாளிகள் இருப்பது தெரிந்தும் வெறுமனே அந்தப் பெண்ணை மட்டும் முகத்திரையைக் கிழித்து முத்திரையிடும் சட்டத்துக்கும் நம் சமூகத்துக்கும் எப்போதும் வெட்கமில்லையா?...என்னைப் பொறுத்தவரையில் ஒரே வார்த்தைதான்… உடலை விற்றுப் பிழைக்கும் ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்… ஏன் தெரியுமா?... இவர்கள் பங்குச்சந்தை ஊழல் புரிந்து சம்பாதிக்கவில்லை. பத்திரப்பேப்பர் ஊழல் புரிந்து சம்பாதிக்கவில்லை. காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் ஊழல் புரிந்து சம்பாதிக்கவில்லை. 2ஜி ஊழல் புரிந்து சம்பாதிக்கவில்லை. அரசியல் என்ற அடாவடித்தனத்தைக் கொண்டு கறுப்புப்பணமாய் குவித்து சம்பாதிக்கவில்லை. தொட்டவற்றுக்கெல்லாம் பிச்சையெடுக்கும் அரசு அதிகாரிகளைப்போல லஞ்சம் வாங்கியும் சம்பாதிக்கவில்லை. எவன் எப்படிப்போனாலும் சரியென்று கண்டவற்றுக்கெல்லாம் காசு வாங்கிக்கொண்டு விளம்பர மாடலாகியும் சம்பாதிக்கவில்லை.
இவற்றோடெல்லாம் ஒப்பிடும்போது நேர்மையாய் தனது உடலையே மூலதனமாக்கி அதை மட்டுமே விற்று சம்பாதிக்கும் இவர்களை நிச்சயமாய் கையெடுத்து வணங்கலாம்… தவறேயில்லை. அப்படிப்பட்ட ஊழல்வாதிகளை விட நிச்சயம் இவர்கள் எவ்வளவோ மேல்!!!
என்னயிது விபச்சாரிகளை ஆதரிச்சு இப்படி எழுதுறாளே… கலி முத்திடுத்து… அய்யோ ஆண்டவா… நம்ம கலாச்சாரம் என்னாறது? குடும்ப கட்டுப்பாடு என்னாறது?ன்னு கொஞ்ச பேரு குய்யோ முறையோன்னு கூப்பாடு போடலாம். அவாளுக்கெல்லாம் நான் சொல்லிக்க விரும்புறது என்னான்னா… இந்த மாதிரி விபச்சாரிகளை உருவாக்குறதே உருப்படாத ஆண்கள் சமுதாயம்தான்! அப்படி உருப்படாத ஆண்கள் கூட்டத்துல விபச்சாரின்னாலும் ஓரக்கண்ணால ரசிச்சு ஜொள்ளு விடற உங்க வீட்டு ஆம்பளைங்களும் அடக்கம்தான்.
சின்ன வயசுல எனக்கு வாழ்க்கையைக் கத்துக்கொடுத்த பல பேர்ல ஒருத்தர் சொன்னது இன்னமும் எனக்கு நியாபகம் இருக்கு… ‘’வாழ்க்கைல ஆம்பிளைங்க இரண்டே ரகம்தான்… ஒன்னு தப்பு பன்றவனுக, இன்னொன்னு தப்பு பண்ண சான்ஸ் கிடைக்காதவனுக’’…! ஒவ்வொரு ஆம்பிளையும் தன் மனசுல கை வச்சு யோசிச்சான்னா இந்த வரிகள் எவ்வளவு நிஜம்னு அவனவனுக்கேப் புரியும்.
ஒருவனுக்கு ஒருத்தின்றதுக்கு உதாரணமா ராமனைக் காட்டுற இராமாயணம் இருக்குற இதே நாட்டுலயே, பாஞ்சாலிக்கு அஞ்சு புருஷன்னு சொல்ற இலக்கியமும் இருக்கிறது எவ்வளவு வேடிக்கையில்லே?... அதே மாதிரிதான் இன்னமும் சட்டமும் இருக்கு. விபச்சாரம் தப்புன்னு சட்டமிருக்கிற இதே நாட்டுலதான் மும்பை ரெட்லைட் ஏரியாவும், கொல்கத்தா சோனாகட்சும் கொடிகட்டிப்பறந்துட்டு இருக்கு!
எங்கே விபச்சாரம் நடந்தாலும் அது காவல் துறைக்கு தெரியாமல் நடப்பதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. காவல் துறை மூலம் செய்தியாய் வெளிவரும் விபச்சார விஷயங்கள் அனைத்தும் அவர்களுக்கு மாமூல் வராததால் வெளிவந்ததாகவோ, இல்லை… அவ்வப்போது கணக்குக்காக பிடித்த கேஸ்களாகவோதான் இருக்குமேயொழிய… நிச்சயமாய் விபச்சாரத்தை ஒழிக்க காவல் துறை எடுத்த உறுதியான நடவடிக்கை என்று சொல்வதற்கில்லை.
ஒன்னு விபச்சாரத்தை நாடு பூரா ஒழிக்கனும். இல்லையா… பேசாம அதை நாடு முழுவதும் அங்கீகரிச்சு தண்டனையிலிருந்து நீக்கிரலாம். ஒரு விதத்தில பாக்கப்போனா விபச்சாரத்தை நாடு முழுவதும் அங்கீகரிக்கும் பட்சத்தில் கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமென்றே கருதுகிறேன்.
விபச்சாரம் பன்றத சரின்னு சொல்லி ஆதரிச்சு நான் கருத்து சொல்லலை. ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட காரணகர்த்தாக்களையும் அவளோடு விபச்சாரத்தில் ஈடுபடுற ஆம்பிளைகளையும் விட்டுட்டு அவளுக்கு மட்டுமே தண்டனை தர்ற சட்டம் தவறானது. அதை ஏன் மாத்தக்கூடாதுன்னு என் மனசுல எழுந்த கேள்விக்கான ஆதங்கம்தான் இந்தக்கட்டுரையே ஒழிய வேறொன்னும் விஷயமில்லைங்க…
No comments:
Post a Comment