Wednesday, October 26, 2011

கனிமொழியின் தோற்றத்தைப் பார்த்து அழுத கருணாநிதி

ழுகை, வருத்தம், கெஞ்சல், ஆறுதல் என உணர்ச்சிகரமாக நடந்து முடிந்துள்ளது கருணாநிதி-கனிமொழியின் மூன்றாவது சிறைச் சந்திப்பு. இந்தமுறை கொஞ்சம் பிடிவாதமாக, மகளுடன்தான் சென்னை திரும்புவேன் என டெல்லியிலேயே தங்கியிருக்கிறார் கருணாநிதி.


உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்தித்த இறுகிய முகத்துடன், கடந்த 21-ம் தேதி மாலை கனிமொழியை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி. அவருடன் து ணைவி ராஜாத்தி அம்மாளும், பேரன் ஆதித்யாவும் சென்றனர். வழக்கமாக தங்கும் ‘லீலா பேலஸ்’ நட்சத்திர விடுதியில்தான் தங்கினார். டெல்லி சென்றாலே மீடியாக்களை சந்திக்கும் கருணாநிதி அன்று விமான நிலையத்தில் மீடியாக்களிடம் பேசவேயில்லை. 2ஜி விவகாரத்திற்குப் பிறகு டெல்லி சென்றாலே, துரத்தித் துரத்தி கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களும் அன்று கருணாநிதியைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், அழகிரி ஆகியோர் விமான நிலையத்திற்குள் வந்து கருணாநிதியை அழைத்துச் செல்வார்கள் என தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், அழகிரி விமான நிலையத்திற்கு வரவேயில்லை. மற்ற இருவரும் வந்து கருணாநிதியை அழைத்துச் சென்றனர்.


இருமுறை டெல்லி சென்றபோதும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையோ, பிரதமர் மன்மோகன் சிங்கையோ சந்திக்காத கருணாநிதி இந்தமுறை இருவரையும் சந் திக்க அனுமதி கேட்டிருந்தார். மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷீத் ஆகியோர் கருணாநிதியை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து சந்தித்தனர். கனிமொழி ஐந்து மாதங்களுக்கும் மேலாய் சிறையில் இருப்பது பற்றி அவர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார் கருணாநிதி. பதிலுக்கு, ‘‘2ஜி வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க கட்டாயம் ஏற்பாடு செய்கிறோம்’’ என அமைச்சர்கள் இருவரும் ஆறுதல் சொல் லியிருக்கிறார்கள்.

மேலும், ‘‘சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்போதுதான் குணமாகி வருகிறார். அதனால் 2ஜி விவகாரம் குறித்தெல்லாம் அவரிடம் அதிக நேரம் பேச வேண்டாம்’’ என இரு அமைச்சர்களும் கருணாநிதியிடம் தெரிவித்திருக்கிறார்கள். 2ஜி வழக்கில் தயாநிதி மாறனின் பெயரும் இருப்பதால் சோனியாவையும், பிரதமரையும் சந்திக்கும்போது அவரை உடன் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் கருணாநிதியிடம் தெரிவித்திருக்கிறார்கள். அதையும் கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.

மறுநாள் சனிக்கிழமை காலை மனைவி ராஜாத்தி அம்மாள், டி.ஆர்.பாலு ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் கருணாநிதி சந்தித்தார். சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு முழுவதும் உணர்ச்சிகரமான காட்சிகளால் நிறைந்திருந்தது.

சோனியாவின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த கருணாநிதி, அடுத்துப் பேசியது முழுக்க தன் மகள் குறித்தும், 2ஜி வழக்கு குறித்தும்தான். கனிமொழி சிறையில் படும் துன்பங்களை சோனியா காந்தியிடம் சொன்ன ராஜாத்தி அம்மாள் தாங்க முடியாமல் அழுது விட்டாராம். அவருக்கு ஆறுதல் சொன்ன சோனியா காந்தி, ‘வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். அவர் தரப்பில் ஜாமீன் குறித்தும் உறுதிமொழி எதுவும் கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

கருணாநிதியின் வருகைக்காக சோனியா வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் காத்திருக்க, வீட்டின் பின்வாசல் வழியாக வெளியேறினார் கருணாநிதி. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், சில ரகசிய சந்திப்புகளுக்கும் மட்டுமே இந்த வாசல் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி மீதான வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்ததால், சோனியா காந்தியின் வீட்டில் இருந்து நேராக நீதிமன்றத்திற்குச் சென்றார் கருணாநிதி. ஆனால் அவரது தள்ளு வண்டி உள்ளே செல்வதற்கான சரியான வசதிகள் நீதிமன்றத்தில் இல்லையென்பதை தி.மு.க. அமைச்சர்கள் கருணாநிதியிடம் தெரிவிக்க, ராஜாத்தி அம்மாளை நீதிமன்றத்தில் விட்டு விட்டு ஹோட்டலுக்குச் சென்றார் கருணாநிதி.

மகளுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு நீதிமன்றம் சென்ற ராஜாத்தி அம்மாளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நீதிபதி ஓ.பி.சைனி. ஆயுள் தண்டனை வழங்க வகை செய்யும் நம்பிக்கை மோசடிக்கான பிரிவு 409-யை ஆ.ராசா, சித்தார்த் பெஹுரா மற்றும் ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் மீது சேர்த்த தோடு, மீதமுள்ள அத்தனை குற்றவாளிகளுக்கும் பொது ஊழி யர்கள் நம்பிக்கை மோசடி செய்ய ஏதுவாக கூட்டுச் சதியில் ஈடு பட்டனர் என்ற பிரிவையும் சேர்திருந்தார்.

409-ஐச் சேர்த்துள்ளதாக ஓ.பி.சைனி அறிவித்ததைக் கேட்ட கனிமொழியும், அவர் தாயார் ராசாத்தி அம்மாளும் கண் கலங்கினர். ஆனால் அமைதியாக இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆ.ராசா மட்டும், தன் மனைவியிடம் புன்னகை மாறாமல், “போராட வேண்டும், இறுதி வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டும்’’ என்று சொன்னார்.

குற்றச்சாட்டுகள் பதிவில், மேலும் ஒரு திருப்பமாக டி.பி. ரியாலிட்டீசின் ஷாகித் பல்வா, குசேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜீவ் அகர்வால், ஆசீப் பல்வா, சினியுக் ஃபிலிம்ஸின் இயக்குநர் கரீம் மொரானி, மற்றும் கலைஞர் டி.வி.யின் சரத்ரெட்டி மீது போலி சாட்சியங்களை தயாரித்தற்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 193 சேர்க்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.க்கு கொடுத்த 200 கோடி லஞ்சப் பணத்தை கடன் போல சித்திரிக்க முயற்சி செய்ததற்காக இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் ஆணை 467 பக்கங்களைக் கொண்டிருந்ததால், குற்றவாளிகள் அனைவருக்கும் ‘சிடி’ யில் கொடுக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு குற்றவாளியிடமும், ‘நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா’ இல்லையா என்ற கேள்வி கேட்கப்பட்டு, அவர்கள் பதில் பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பிறகு நவம்பர் 11 முதல் விசாரணை தொடங்கும் என்று உத்தரவிட்டார் ஓ.பி.சைனி.

2ஜி ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கியது ஆ.ராசாதான் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் ஓ.பி.சைனி. “ராசா 2007, மே 16-ல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதலே சதித்திட்டம் தொடங்கியது. இச்சதித் திட்டம் அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முழு வடிவம் பெற்று, கலைஞர் டி.வி.க்கு 2009 ஆகஸ்ட் 7 அன்று இறுதி தவணையாக 50 கோடி லஞ்சம் கொடுத்தது வரை இச்சதித்திட்டம் தொடர்ந்தது. எளிமையாக மக்களுக்கு செல்போன் கிடைக்கச் செய்ததைக் காரணம் காட்டி, பொது ஊழியர்கள் தங்கள் பாக்கெட்டுகளை லஞ்சப் பணத்தால் நிரப்பிக் கொள்வதை அனுமதிக்க முடியாது’’ என்று சொன்ன நீதிபதி, ரிலையன்ஸ் நிறுவனத்தையும் ஒரு பிடி பிடித்தார்.

‘‘ஸ்வான் டெலிகாமுக்கான மொத்த முதலீடும் ரிலையன்ஸ் நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகமூடியாகவே ஸ்வான் டெலிகாம் செயல்பட் டுள்ளது’’ என்றும் குற்றம் சாட்டினார் நீதிபதி ஷைனி.

ஹோட்டல் அறையில் டி.வி.யில் வழக்கு விசாரணைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதி, 409 பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தாராம். மாலையில் கனிமொழியை சந்திக்க திகார் சிறைக்குச் சென்றார் கருணாநிதி. ஆ.ராசா, சரத்ரெட்டி, கனிமொழி ஆகியோரிடம் சுமார் பதினைந்து நிமிடங்கள் பேசிய கரு ணாநிதி, கனிமொழியிடம் தனியாக நாற்பது நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்த கனிமொழியின் தோற்றத்தைப் பார்த்து உடைந்து அழுதிருக்கிறார் கருணாநிதி. கடந்த முறை பார்த்ததை விட கனிமொழி மிக மெலிந்து போயிருந்ததுதான் காரணம். கருணாநிதி அழுவதைப் பார்த்த ராஜாத்தி அம்மாளும் உடைந்து அழ, அந்த இடமே உருக்கமாகப் மாறிப்போனது.

உனக்கு ஜாமீன் கிடைக்கிற வரைக்கும் நான் டெல்லியிலேயே இருக்கிறேன் என கருணாநிதி உருக, ‘‘நான் சமாளிச்சுக்குவேன். நீங்க கவலைப்படாதீங்க. இங்க டெல்லியில் குளிர் அதிகம், உங்களுக்கு ஒத்துக்காது’’ என ஆறுதல் சொல்லியிருக்கிறார் கனிமொழி. மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் கரு ணாநிதியுடன் சிறைக்குச் சென்று கனிமொழியை சந்திக்கச் சென்றார்கள். ஆனால் முன் அனுமதி பெறாததைச் சுட்டிக்காட்டி, அனுமதி மறுத்தது சிறை நிர்வாகம்.

தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது வீட்டில் சந்தித்தார் கருணாநிதி. டி.ஆர். பாலுவும், மத்திய அமைச்சர் நாராயண சாமியும் அப்போது உடனிருந்தனர். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவர்கள் பேசியதாகச் சொல்லப்பட்டாலும் பிரதமரிடமும் கனிமொழி ஜாமீன் குறித்தே அவர் பேசியதாக சொல்கிறார்கள்.

கனிமொழி கைதுக்குப் பிறகு பிரதமரையோ, சோனியா காந்தியையோ சந்திக்காத கருணாநிதி, இந்தமுறை சந்தித்தற்கு ராஜாத்தி அம்மாள்தான் காரணமாம். கனிமொழி கைதின்போது, ஒரு மாதத்தில் ஜாமீனில் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கும் இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை போய்விட, ‘‘என் மகளை நீங்கள் கைவி ட்டு விட்டீர்கள்’’ என ராஜாத்தி அம்மாளும் புலம்பிய நிலையில்தான் இந்த சந்திப்புகள் நடந்து முடிந்துள்ளன.

மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கனிமொழி மற்றும் சரத்ரெட்டி ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்த பிறகு அந்த நீதிமன்றத்திலேயே ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிடப் பட்டிருந்தது. தற்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் பணி முடிவடைந்து விட்டதால், கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 409 கனிமொழியின் ஜாமீனுக்கு சிக்கலை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கிறது.

கனிமொழிக்கு 409 பிரிவால் சிக்கல் என்றால், சரத்ரெட்டிக்கு சேர்க்கப்பட்டிருக்கும் 193 பிரிவும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். பொய்யான சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டுக்கு அவர் உள்ளாகியிருப்பதால், ஜாமீனில் வெளியே சென்றால், இதேபோல வேறு பொய்யான சாட்சிகளை உருவாக்கக்கூடும் என்று சி.பி.ஐ வாதிடுமேயானால், அவருடைய ஜாமீனும் நிராகரிக்கப்படக் கூடும்.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், மகளோடு தான் சென்னை திரும்புவேன் என டெல்லியில் காத்திருக்கிறார் கருணாநிதி. காத்திருப்பு பலனளிக்குமா எனத் தெரியவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...