திமுகவின் சார்பில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது பதவிக்காலத்தில், அதிகாரத்தைப் பயன்படுத்தி முந்நூறுக்கும் மேற்பட்ட தொலைத் தொடர்பு இணைப்புகளை தனது வீட்டிற்குப் பெற்றதாகவும், அவை வெளிநாடுகளிலிருந்து செய்திகளையும் படங்களையும் தருவிக்க சன் டிவிக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் முறையீடுகள் வந்தன. இவை குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை தீவிரமாக ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்திடம் இருந்து, தேவையான ஆவணங்களைப் பெற்று அவற்றை தற்போது மத்தியப் புலனாய்வுத் துறை பரிசீலித்து வருகிறது. இந்த ஆய்வு நடவடிக்கைகள் இரண்டு மாதங்கள் வரை தொடரும். அதன் பின்னரே முறையான வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று ம.பு.து தெரிவித்துள்ளது.
தயாநிதி மாறன் வீட்டிற்கு அதிக அளவில் பன்னாட்டுத் தொலைபேசி இணைப்புகள் எப்படி வழங்கப்பட்டன என்றும் அவை எப்படி 'சன் டிவி'க்கு இணைக்கப்பட்டன என்ற விவரங்களைத் தருமாறு தகவல் தொடர்புத் துறையை மத்தியப் புலனாய்வுத் துறை கோரியுள்ளது. இந்த அத்துமீறலால், BSNL நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு என்பது குறித்தும் மத்தியப் புலனாய்வுத் துறை ஆய்வு செய்கிறது.
நான்காண்டுகளுக்கு முன்பே 2007ல் இந்த முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி தகவல் தொடர்புத் துறையின் செயலருக்குச் சொல்லப்பட்டும், எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ம.பு.து தன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment