Tuesday, October 11, 2011

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்

அரசு பள்ளிகளில் 2,682 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 5,790 பட்டதாரி ஆசிரியர்கள், 5738 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்
இது தவிர, முதல்- அமைச்சர் ஜெயலலிதா சட்டசபை விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்தபோது, தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் 4,087 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், 13,300 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
 
இதன் மூலம் அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட மொத்த ஆசிரியர் பணி இடங்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 597 ஆகும். இவை தவிர, நடப்பு கல்வி ஆண்டில் (2011-2012) ஏற்படும் காலி இடங்கள் தனி. அதிகப்படியான எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
 
ஆசிரியர் நியமனங்கள் பற்றி சட்டசபையில் அறிவிக்கப்பட்டதால் உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டு நியமன பணிகள் தொடங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.
 
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றிருப்பதால் போட்டித்தேர்வு உறுதி என்ற கணிப்பில் பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கு இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டன. ஆனால், சட்டசபையில் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நியமனம் பற்றி அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
 
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. எனவே, ஆசிரியர் நியமனம் குறித்து இப்போது ஏதும் அறிவிப்பு வெளியிட இயலாது.
 
உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். ஆசிரியர் நியமனம் பற்றிய அறிவிப்பு ஒருபுறம் இருந்தாலும் தேர்வு முறை அதாவது பதிவுமூப்பா? அல்லது போட்டித்தேர்வா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
 
தற்போது, ஆசிரியர் நியமனத்தில் மாநில அளவிலான பதிவுமூப்பு முறை (சீனியாரிட்டி) பின்பற்றப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்படுவது வழக்கம். இதனால், ஆசிரியர் நியமனம் எப்படி இருக்குமோ? என்று பி.எட். பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
 
இதற்கிடையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இலவச கட்டாய கல்வி சட்டத்தில் ஆசிரியர்களை நியமிக்க தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. எனவே, அதுபோன்று தகுதித்தேர்வை நடத்த வேண்டிய சூழலுக்கு பள்ளி கல்வித்துறை தள்ளப்பட்டு உள்ளது.
 
அப்படி தகுதித்தேர்வு நடத்தினாலும் அதன்பிறகு பதிவுமூப்பு பார்க்கப்படுமா? அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தனியாக ஒரு தேர்வு வைக்கப்படுமா? என்பதும் தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரசு வெளியிடும் அறிவிப்பில் இதற்கு எல்லாம் விடை கிடைத்துவிடும்.   

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...