எந்த தேர்தலாக இருந்தாலும், என்னதான் தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்டினாலும் அரசியல் கட்சிகளின் 'கொடுபிடி'களை மட்டும் பெரும்பாலும் தடுக்க முடிவதில்லை. இப்படி வாக்களர்களுக்கு கையூட்டு கொடுத்து ஒட்டு வாங்குவதி ஆளுங்கட்சி- எதிர்கட்சி, பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவரவர் சக்திக்குட்பட்டு பணமாகவோ, பொருளாகவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்களர்களுக்கு திணிப்பதில் அதீத கவனம் செலுத்துகின்றனர். அதையும் தாண்டி தேர்தலில் தோற்ற கட்சிகள், ''அதிகாரபலம் படைபலம் பணபலம் ஜெயித்து விட்டது.'' என்ற ஸ்லோகத்தை மறக்காமல் சொல்லிவிட்டு தங்களின் தோல்வியை மறைத்து விடுவர். அதே போல, ''நாங்கள் எந்த அணியில் இருக்கிறோமோ அதுதான் வெற்றி அணி.'' என்று ஒரு மாயை உருவாக்கி தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை வளர்த்துக் கொண்ட கட்சி பாமக., இனி எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து இந்த உள்ளாட்சியில் தனி ஆவர்த்தனம் கண்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதை விட, சுமாரான வெற்றியை மட்டுமே ஈட்டியது. உடனே மருத்துவர் ராமதாஸ், ''திராவிட கட்சிகளின் பண பலம், அதிகார பலம் இவற்றையெல்லாம் தாண்டி பா.ம.க. பெற்றுள்ள இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.'' என்று அறிக்கை வெளியிட்டார். அதாவது இவரது கட்சியை சேர்ந்தவர்கள் வாக்களர்களுக்கு பணமே கொடுக்கவில்லை என்ற ரீதியில் இவரது அறிக்கை சொல்கிறது. இவரது அறிக்கை வெளியான சூடு அடங்குவதற்குல்ளாகவே அவரது கட்சியை சேர்ந்த ஒருவர் வாக்களர்களுக்கு சேலை கொடுத்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர சபைக்கு உட்பட்ட 28 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க. சார்பில் லதாராசாத்தி போட்டியிட்டார். இவர் தன்னை தேர்தலில் வெற்றிபெற செய்யுங்கள் என்று கூறி அந்த வார்டுக்கு உட்பட்ட வாக்காளருக்கு அன்பளிப்பாக புடவை வழங்கி உள்ளார். ஆனால் நேற்று வெளியான தேர்தல் முடிவில் வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமதுஜியாஉதீன் வெற்றி பெற்றார். லதாராசாத்தி தோல்வியை சந்தித்ததை அடுத்து, அவர் வாக்காளர்களை சந்தித்து நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லையே பிறகு எதற்கு நான் வழங்கிய புடவையினை ஏன் வைத்துள்ளீர்கள் என்று கூறி அதனை திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மின்நகரில் உள்ள லதாராசாத்தி வீட்டின் முன்பு கையில் புடவையுடன் திரண்டனர். அந்நேரத்தில் வேட்பாளர் லதாராசாத்தி அங்கு இல்லாத காரணத்தினால், நாங்கள் அவரை சந்தித்து புடவையினை கொடுத்துவிட்டு தான் செல்வோம் என்று கூறினார்கள்.'' என்று செய்திகள் கூறுகின்றன.
பணபலம்-படைபலம்- அதிகார பலத்தால் வெற்றியின் சதவிகிதத்தை சற்று உயர்த்த வாய்ப்புண்டே தவிர, இதைக்கொண்டு முழுமையான வெற்றியை அடைந்துவிட முடியாது என்பதையும், மேலும் வெற்றி பெறுவதற்காக வாக்களர்களை 'கவனிக்கும்' வேட்பாளர்களில் தனது கட்சி வேட்பாளர்களும் விதிவிலக்கல்ல என்பதையும் மருத்துவர் புரிந்து கொள்ளட்டும்.
No comments:
Post a Comment