Tuesday, October 4, 2011

மோடியா கொக்கா?

வாட்நகர் என்ற சின்னக் கிராமத்தில், மத்தியதரக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் நரேந்திர மோடி. இன்று நாடறிந்த முதலமைச்சர்களில் ஒருவர். பள்ளியில் படிக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் கவரப் பட்டு அதன் மாணவர் அணியில் தீவிர உறுப்பினராக இயங்கி, கல்லூரியில் காலெடுத்து வைக்கும்போது ஆர்.எஸ்.எஸ்.சின் மாநிலக் குழு உறுப்பினரானார். குஜராத் பல்கலைக்கழகத்தில் பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தை விரும்பி எடுத்து அதில் எம்.ஏ. பட்டம் வாங்கியவர்.


1975ல் படிப்பு முடிந்த காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்து எழுந்த போராட்டத்தில் இவர் பல புதிய தொண்டர்களைச் சேர்த்து கட்டுக்கோப்பாக இயக்கிய திறமையைக் கவனித்த ஆர்.எஸ்.எஸ்.சின் மேலிடம், பா.ஜ.க.வின் உறுப்பினராக்கி பொறுப்புக்களை கவனிக்கப் பணித்தது. அப்போது தரப்பட்ட முக்கியப் பணிகளில் ஒன்று, சோம்நாத் திலிருந்து அயோத்திக்கான அத்வானியின் ரதயாத்திரை. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான மற்றொரு ரதயாத்திரை. பயணத் திட்டங்களையும் கூட்டங்களையும் கச்சிதமாகத் திட்டமிட்டு வெற்றியாக்கிக் காட்டியதில் மகிழ்ந்த அத்வானி, 1995ல் இவருக்கு அளித்த பொறுப்பு, கட்சியின் தேசியச் செயலாளர்.

2001ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த கேசுபாய் படேலைப் பதவி விலகச் சொல்லி, புதிய முதலமைச்சராக மோடியை நியமித்தது கட்சித் தலைமை. இவர் பதவியேற்ற நேரத்தில், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையில் இருந்தது குஜராத் மாநிலம். இன்று அது இந்தியா விலேயே பொருளாதார வளர்ச்சியில் (ஆண்டுக்கு 10 விழுக்காடு) முதல் மாநிலம். இந்த மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. மது விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் வருவதில்லை.


இவர் முதலமைச்சராக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் 2002 பிப்ரவரியில் குஜராத்தில் மதக்கலவரம் வெடித்தது. சிறுபான்மை சமூகத்தினர் மிக மோசமாக பாதிப்புக்குள்ளானபோது மோடி அரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது என்றும், அந்தக் கலவரத்தை மறைமுகமாக ஊக்குவித்ததென்றும் மற்ற கட்சிகள் இப்போதும் கூறி வருகின்றன. இதையடுத்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. 182 இடங்கள் உள்ள சட்டப்பேரவையில் 127 இடங்களை மோடி தலைமையில் பா.ஜ.க. கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

இஸ்லாமியரின் எதிரியாகச் சித்தரிக்கப்படும் மோடி, அரசின் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்துக் கோவில்களையும் இடிக்க உத்தரவிட்டவர் என்பது ஊடகங்கள் அதிகம் வெளியிடாத செய்தி. மூன்றே உதவியாளர் களை வைத்துக்கொண்டு பணியாற்றும் கடின உழைப்பாளி. குஜராத்தில் தொடர்ந்து நீண்டகாலம் முதலமைச்சர் பதவியில் இருந்து வருபவர் என்ற பெருமைக்குரியவர் மோடி. இந்த 61 வயது முதலமைச்சர் திருமணம் குறித்து சர்ச்சைகள் நிலவுகின்றன.

குழந்தைப் பருவத்தில் அவருக்கு மணம் செய்து வைக்கப்பட்டது என்றும் ஆனால் அவர் வளர்ந்தபின் மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறார் என்றும் சில தகவல்கள் சொல்கின்றன. வலைப்பூவிலும் (www.narendramodi.com), ஃபேஸ்புக்கிலும் (www.facebook.com/narendramodi), டிவிட்டரிலும் (www.twitter.com/narendramodi) சந்திக்கக் கூடிய ஒரு மாடர்ன் முதலமைச்சர் மோடி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...