Thursday, October 20, 2011

“கச்சதீவை, ஸ்ரீலங்காவுக்கு காவு கொடுத்தவர் கருணாநிதி!”


ஸ்ரீலங்கா விவகாரங்களை நன்றாகவே பற்றிக் கொண்டிருக்கிறார், தமிழக முதல்வர் ஜெயலலிதா. தான் ஆட்சிக்கு வந்தபின், அவ்வப்போது சென்சிட்டிவ்வான ஸ்ரீலங்கா விவகாரங்கள் பற்றிப் பேசியும் வருகின்றார்.
அந்த வரிசையில் இப்போது அவர் கையில் எடுத்திருப்பது, கச்சதீவு விவகாரம்.
“உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? ஸ்ரீலங்காவுக்கு கச்சத்தீவை கொடுப்பதற்கு, இந்திய – ஸ்ரீலங்கா உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், செயலில் இறங்கியிருக்க வேண்டும்” என்று தமிழக சட்டசபையில் பேசுகையில், ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது கையில் எடுத்திருக்கும் இந்த விவகாரத்தைப் பலர் இப்போது மறந்திருக்கலாம். எனவே அதன் பின்னணி பற்றியும் கொஞ்சம் சொல்லி விடலாம்.
1974ம் ஆண்டுவரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு, ஸ்ரீலங்கா – இந்திய உடன்பாடு ஒன்றின்படி ஸ்ரீலங்காவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இது நடைபெற்ற காலப்பகுதியில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. முதல்வராக இருந்தவரும் கருணாநிதிதான்.

இந்திய மத்திய அரசால் செய்யப்பட்ட இந்த உடன்படிக்கை பற்றி, அன்றைய தமிழக அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சும்மா ஒப்புக்குச் சப்பாணியாக ஒரு எதிர்ப்பை மாத்திரம் தெரிவித்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டது.
இது நடைபெற்ற காலப்பகுதிக்குப் பின்னர்தான், ஸ்ரீலங்காவில் 1983ம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டு, பெருமளவு தமிழ் மக்கள் தமிழகத்தை நோக்கி வரத் தொடங்கினர். தமிழக அரசியலில் ஸ்ரீலங்கா விவகாரம் முதன்மை நிலைக்கு வந்தது. கச்சதீவு விவகாரமும் விவாதங்களில் அடிபடத் தொடங்கியது.
அதன்பின் ஓய்ந்து போயிருந்தது. இப்போது மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கின்றது கச்சதீவு விவகாரம்.
ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா, தற்போதுதான் திடீரென கச்சதீவு விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் என்றில்லை. அவர் அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே, இதுபற்றிப் பேசிவருகிறார். “கச்சதீவை இந்தியா, ஸ்ரீலங்காவிடமிருந்து மீட்க வேண்டும்” என்று கோரிவருகிறார்.
இப்போது, ஸ்ரீலங்கா அரசியல் சர்வதேச அளவில் பேசப்படும் நிலையில் இருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில், தமிழக முதல்வர் என்ற அந்தஸ்துடன் கச்சதீவு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் ஜெயலலிதா. அதனாலேயே இந்த விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இப்போது தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா, இதுபற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.
“மத்திய அரசு, ஸ்ரீலங்காவுடன் கச்சதீவு உடன்பாட்டைச் செய்துகொண்டபோது, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அதற்கு எதிராக சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண் துடைப்பு நாடகமாக ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி” என்று, குற்றம் சாட்டியிருக்கிறார்.
கச்சத்தீவு, ஸ்ரீலங்காவுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, 2008ம் ஆண்டில் ஜெயலலிதா, அ.தி.மு.க., பொதுச் செயலர் என்ற முறையில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்னமும் முடிவடையவில்லை. அந்த வழக்குக்கு வலு சேர்க்கும் விதமாகதமிழக அரசு செயற்படவுள்ளதாக அவர் இப்போது சட்டசபையில் அறிவித்துள்ளார்.
“தமிழக அரசின் வருவாய்த் துறை, கச்சதீவு பற்றி வைத்திருக்கும் அனைத்து ஆவணங்களையும், இந்த வழக்குக்கு வலுச் சேர்க்கும் விதமாக வழங்கப்பட வேண்டும்”என்ற தீர்மானம் ஒன்றை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார்.
சட்டசபையில் இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது பேசிய ஜெயலலிதா, “தமிழ் வாழ்ந்தால் தான் தமிழர் வாழ முடியும்; தமிழர் வாழ்ந்தால் தான் தமிழ் சமுதாயம் வாழ முடியும் என்று கூறியவர் அண்ணாதுரை. தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை; தன் குடும்பம் வாழ்ந்தால் போதும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர், கருணாநிதி.
அப்படிப்பட்ட கருணாநிதி, கச்சதீவை ஸ்ரீலங்காவுக்குகாவு கொடுத்தபோது மௌனமாக இருந்தார். ஆனால் எமது அரசு, கச்சத்தீவு குறித்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளிக்க வகை செய்யும் வகையில் செயல்படவுள்ளது” என்றும் கூறியிரு க்கிறார்.
கச்சதீவு விவகாரம், மீண்டும் தமிழக அரசியலில் அடிபடப்போகும் காலம் வந்திருக்கிறது!

“ஸ்ரீலங்காவில் யுத்தம் நடைபெற்ற சமயத்தில் என்ன நடந்தது என்பது கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். இந்தியா, செய்திருந்த ராணுவ உதவிகள் பற்றியும் மிக நன்றாகத் தெரியும். தெரிந்தும் தெரியாததுபோல நடத்து, தமிழர்களை ஸ்ரீலங்கா ராணுவத்திடம் காட்டிக்கொடுத்தார்” தமிழக சட்டசபையில் இவ்வாறு கூறியிருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா.
“2008ம் ஆண்டின் ஆரம்பத்தில், ஸ்ரீலங்கா ராணுவத்தினர் 100 பேருக்கு, அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம், ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்த விடயம், செய்தியாக வெளியாகியது. அதன்பின், ஸ்ரீலங்கா ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கிய விடயமும் வெளியாகியது. இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர், ஸ்ரீலங்கா சென்று வந்ததாகவும் அப்போது செய்திகள் வெளிவந்தன.
அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதிக்கு, இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.
இந்தியாவிடம் இருந்து, தனக்குத் தேவையான ராணுவ உதவிகளை பெற்றுக்கொண்ட பின்னர்தான் ஸ்ரீலங்கா ராணுவம், 2008ம் ஆண்டு இறுதியிலும், 2009ம் ஆண்டு தொடக்கத்திலும், யுத்தத்தில் கடுமையாக தாக்க ஆரம்பித்தது.
அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஸ்ரீலங்கா அரசை, மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என நான் கூறியிருந்தேன். அப்போதும், தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டிருந்தது. போர்நிறுத்தம் பற்றி மத்திய அரசை தி.மு.க., வலியுறுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொண்டேன்.
தி.மு.க.வின் கோரிக்கைக்கு காங்கிரஸ் செவிசாய்க்கவில்லையெனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க., திரும்பப்பெற வேண்டும் என்றும், நான் பல முறை வலியுறுத்தினேன்.
ஆனால், கருணாநிதி அதை செய்யவில்லை.
மாறாக என்ன செய்தார்? அனைத்துக்கட்சிக் கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம்,என்று கூட்டங்கள் நடாத்தினார். மனிதச் சங்கிலி போராட்டம் என்றார். இதோ பிரதமருக்கு தந்தி கொடுக்கிறேன் என்றார். மத்திய அரசிலிருந்து தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா என்றொரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின், ராஜினாமா கடிதங்களை தானே வாபஸ் பெற்றும் கொண்டார்.
திடீரென ஒருநாள், “இறுதி எச்சரிக்கை” என்று ஒரு அறிவிப்பும் செய்தார்.
இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென, “போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்’ என்று அறிவித்தார். அதன்படி, கடற்கரையில் உண்ணாவிரதமும் இருந்தார். மதிய உணவு வேளை வந்ததும், 12 மணிக்கு, “விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை, ஸ்ரீலங்கா அரசு முடித்துக்கொண்டு விட்டது” என்று அறிவித்துவிட்டு, தன் உண்ணாவிரதத்தையும் முடித்துக்கொண்டார்.
“போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது” என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி, தமிழர்களை, ஸ்ரீலங்கா ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தது, கருணாநிதிதான். ‘தமிழினப் பாதுகாவலர்’ என்று தன்னைத்தானே பெயர் சூட்டிக்கொண்டு, தமிழின படுகொலைக்கு துணை போயிருப்பவரும் அவர்தான்” என்று தமிழக சட்டசபையில் விரிவாகக் குற்றம்சாட்டியுள்ளர் ஜெயலலிதா.
தமிழக அரசியலில் மீண்டும் ஒருமுறை, ஸ்ரீலங்கா விவகாரம் களைகட்டத் தொடங்குகின்றது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...