தமிழகத்தில், யாரும் எதிர்பாராத வண்ணம் உள்ளாட்சித் தேர்தல், மிக அமைதியாக நடந்ததை பார்வையிட்ட, வெளிமாநில தேர்தல் கமிஷனர்கள் வியப்படைந்தனர். கடந்த 2006ல், நடந்த தேர்தலை மனதில் கொண்டு, மாநிலத் தேர்தல் கமிஷன், அ.தி.மு.க,,வுக்கு ஆதரவாக செயல்படும் என்ற பிரசாரமும் பல்வேறு கட்சிகளால், மிக வேகமாக பரப்பப்பட்டது. அரசியல்கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில், இதனால் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, தேர்தல் முறையாக நடக்குமா என்ற சந்தேகமும் அவர்கள் மனதில் எழுந்தது.
முதல்கட்ட தேர்தலின்போது நடந்த சிறு வன்முறை சம்பவங்கள் கூட, இரண்டாம் கட்டத் தேர்தலில் அதிகளவு நடக்கவில்லை. மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் போலீசார், உள்ளாட்சித் தேர்தல் பணியை மிகுந்த கெடுபிடிகளுடன் வெற்றிகரமாக செய்துள்ளனர். இரண்டு கட்டமாக நடந்த இந்த தேர்தலை பார்வையிடுவதற்காக, ஒடிசா மாநில தேர்தல் கமிஷனர் அஜித்குமார் திரிபாதி, கேரளா மாநில தேர்தல் கமிஷனர் சசிதரன் நாயர், மத்திய பிரதேச தேர்தல் கமிஷனர் அஜித் ரைசாட்டா, கர்நாடகா மாநில தேர்தல் கமிஷனர் சிக்கமாத், கோவா மாநில தேர்தல் கமிஷனர் மொடாசீர், ஆந்திரா மாநில தேர்தல் கமிஷனர் ராமகாந்த் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல் கமிஷனர்கள் வந்திருந்தனர்.
போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி சீட்டு தயாரிக்கப்பட்ட விதங்கள் குறித்து, தமிழக தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் இவர்கள் கேட்டு அறிந்துக் கொண்டனர். பல்வேறு இடங்களுக்குச் சென்று ஓட்டுப்பதிவையும் மாநில தேர்தல் கமிஷனர்கள் பார்வையிட்டனர். முன்னதாக, இவர்களுக்கு கடந்த 2006ல், நடந்த உள்ளாட்சித் தேர்தல் கலவரம் தொடர்பான வீடியோ சி.டி.,க்கள் வழங்கப்பட்டு இருந்தது. அதை "டிவி'யில் போட்டு பார்த்த, மாநில தேர்தல் கமிஷனர்கள், இம்முறை வன்முறைகள் ஏதுமின்றி உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்ததை பார்த்து, மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். தேர்தலை பார்வையிடுவதற்காக சென்ற இடங்களில் வேட்பாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகளுடன், தங்கள் கருத்துக்களை, மாநில தேர்தல் கமிஷனர்கள் பகிர்ந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment