Thursday, March 10, 2016

2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவதால் என்ன பயன்?

அடுத்த தேர்தலில் திமுக வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டைப் பற்றி சில விளக்கங்கள்.

முதலாவதாக, இந்த தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு புதியதன்று.

திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அரசியல் முழக்கம் எழுந்து பத்து ஆண்டுகள் சென்றுவிட்டன. சுருக்கமாக, 2006, விஜயகாந்த், தேதிமுக, 10% வோட் ஷேர். இந்த நிலைப்பாடு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. விசிக, பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் மதிமுக உருவாக்கியிற மக்கள் நலக் கூட்டணிக்கும் இதுதான் அடிப்படை.

இரண்டாவதாக, திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் உண்டு. அவற்றில் சில பின்வருமாறு:


1. குறிப்பிட்ட எண்ணிக்கை பெரும்பான்மை கொண்ட சாதிகளின் ஆதிக்கக் கூட்டணி. (இவற்றில் 3 சாதிகளுக்கு அரசியல், சமூக, பண வலிமை மிக அதிகம். அச்சாதியினரின் தவறுகளை திமுக, அதிமுக இரண்டுமே அத்தனை கண்டு கொள்வதில்லை, கடுமையான நடவடிக்கை என்பதை எண்ணிப் பார்க்கக் கூட இயலாது)

2. அவர்களின் இலாபத்துக்காகவே வடிவமைக்கப்பட்ட அரசு கொள்கைகளும் செயல்பாடும்.

3. எதிலும், எங்கும் ரேட் போட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்தல்

4. கல்வித் துறையில் அரசின் மெத்தனம்; தனியார் மயமாக்கல்; அரசுப் பள்ளி, கல்லூரிகளின் சீரழிவு; ஏழை, எளியவர்களுக்கு தரமான கல்வி மறுக்கபடுதல்

5. தலித் சாதியினருடன் அதிகாரப் பகிர்வு முற்றாக மறுக்கப்படுதல்; தலித்துகள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுப்பதில் சாதிமயம் ஆக்கபட்டிருக்கும் காவல்துறையின் செயலின்மை

6. சமூகத்தின் மேல்தட்டு மக்களின் மீது வரி சுமத்தாமல் வசதியாக டாஸ்மாக் மூலம் ஏழை எளியவர்களின் வாழ்வைச் சுரண்டுவதை அரசின் நிதி வளங்களுக்கு இன்றியமையாததாக ஆக்குவது

எனவே, தொடரும் இந்த அவலங்களுக்கு, திமுக திரும்பவும் ஆட்சிக்கு வருவதால் தீர்வு கிடைக்காது.

மூன்றாவதாக,

1989இல் தொடங்கி 2011 வரைக்கும் இரு திராவிட கட்சிகளுமே ஒவ்வொரு முறையும் மோசமாக தத்தம் ஆட்சியை நடத்தி மாற்றுக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தன. தேர்தல் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வரும் என்ற நிச்சயப்பாடு இருக்கும்வரை நல்லாட்சியைத் தருவதற்கோ ஊழலை நிறுத்துவதற்கோ இரு கட்சிகளுக்குமே எந்தக் காரணமும் இல்லை. எனவே, முடிவற்றது போலத் தோன்றும் இந்த சுழற்சியை முடிக்கும் விதமாக மக்கள் நலன் விரும்பும் அனைவருக்கும் 2016-இல் திமுகவை எதிர்ப்பதற்கு எல்லாக் காரணங்களும் உண்டு. அதற்கு அதிமுக ஆதரவு என்று அர்த்தமாகாது என்பதை முளையைக் கசக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.

இவ்வளவு இருந்தும் சிலபல திமுக ஆதரவாளர்கள் தாங்கள் ஏதோ முற்போக்காளர்கள் போல் சீன் போடுவதை கட்டவிழ்க்கவே இந்த விளக்கம். இவர்களின் இந்த பக்கச் சார்பு எதனால் விளைந்திருக்க்கூடும் என்பது ஊகத்தின்பாற்பட்டதே. மேற்படி அவலங்களைப் பற்றிய சீரியஸ் விவாதங்களை இவர்கள் தவிர்ப்பதிலிருந்து இவர்களின் சமூகப் பின்னணியை நாம் கண்டுகொள்ளமுடியும்.
திமுக எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சதியாக இவர்கள் ஏன் பார்க்கவேண்டும் என்று தெரியவில்லை. அந்த சாதியினருக்கு தமிழ்நாட்டின் தேர்தல் போக்குகள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எண்ணிக்கை பலமோ அரசியல் பலமோ இல்லை என்பது கண்கூடு. மேலும், இரண்டு கட்சிகளுக்குமே எதிரான பரந்துபட்ட செக்யூலர் அரசியல் உருவாகிக் கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

எனவே, இந்த மாதிரி ”கும்பல்வாத” பூச்சாண்டி காண்பிப்பதை நிறுத்திவிட்டு, சமூகப் பிரச்சினைகளைப் பேசக்கூடிய அரசியல் அறிவையும், நேர்மையையும் வளர்த்துக்கொண்டால் எல்லோருக்கு நல்லது.

No comments:

Post a Comment