பங்குனி உத்திர திருநாள். 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் என்ன?
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் வருகிறது. பங்குனி மாதத்தில் பூமியானது மீன ராசியில் இருக்கும். அப்போது சந்திரன், உத்திர நட்சத்திரத்தோடு கன்னி ராசியில் இருந்து பரிபூரண ஒளிபெற்று, பூமிக்கு தனது ஒளியை கொடுப்பதாலும் பங்குனி உத்திர தினம் விசேஷத்திற்கு உரியதாகிறது. இது குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவதுடன், தமிழ் கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் ‘பங்குனி உத்திரம்’ தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை சம்ஹாரம் செய்ததற்கான பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத்தந்த நாள் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் இத்திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் தனித்தன்மை பெற்றதாக அமைகின்றது. ஸ்ரீவள்ளி அவதரித்த தினம்.
ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்க மன்னரை கரம்பிடித்ததும், ராமர், சீதாதேவியை மணம் செய்ததும், ரதியின் வேண்டுதலுக்கு இணங்கி மன்மதனை சிவபெருமான் எழுப்பித்தந்ததும் ஆகிய அனைத்துமே பங்குனி உத்திரநாளில் தான் நடந்துள்ளது.
அத்துடன் இந்தநாளில் மஹாபாரத அர்ச்சுனன் பிறந்த தினம் என்பதுடன், அர்ச்சுனனுக்காக அவன் மூலம் உலகுக்கு கீதை கிடைத்ததை போற்றும் நாளாகவும் பங்குனி உத்திரம் சிறப்பு பெறுகின்றது.
சிவன், சக்திதேவியை கரம் பிடித்த நாள் பங்குனி உத்திர நன்னாள் என ஆகமங்கள் தெரிவிக்கின்றது. எனவே பல சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவங்கள் சிவன் பார்வதிக்கு நடத்தப்படும் உற்சவங்களாக அமைகின்றது.
கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.
பங்குனி உத்திர விரத மகிமையால், அழகு மிக்க 27 கன்னியரை சந்திரன் மனைவியாகக் கொண்டதாகச் சொல்வர். இந்த நாளில் விரதம் மேற்கொண்ட மகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.
சபரிமலை சாஸ்தா அய்யப்பன் அவதார தினம் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆராட்டு விழா என்னும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.
வடநாட்டில், ஹோலிப் பண்டிகை கொண்டாடுவது, வசந்த காலம் துவங்குவது என்று பங்குனி உத்திரத்துக்கு பல பெருமைகள் உண்டு.
அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும். பங்குனி உத்திரம் நன்னாளில் இறைவனின் திருமணத்தை கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு வெகுவிரைவில் திருமண வரம் கிடைப்பதாக நம்பிக்கை. திருமணமானவர்கள் வாழ்வில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியான நிலை பெற பங்குனி உத்திரநாளில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.
No comments:
Post a Comment