Sunday, March 13, 2016

திமுக-தேமுதிக நெருங்கிப் பிரிந்த பின்னணி!


‘விஜயகாந்த் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தாரு?’ -திமுக-வில் கருணாநிதி தொடங்கி, இரண்டாம் கட்டத் தலைவர்கள் வரை எல்லோருக்கும் மனதில் இருக்கும் ஒரே கேள்வி இதுதான். தேமுதிக-வில் பிரேமலதாவைத் தவிர, மற்ற எல்லோரும் இதே விஷயத்தைத்தான் விவாதித்தபடி இருக்கிறார்கள்.
அதற்குப் பதிலோடு வந்தது ஃபேஸ்புக்.
‘திமுக-தேமுதிக கூட்டணி அமைய வேண்டும் என முடிவெடுத்ததும் துரைமுருகன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பொன்முடி எனப் பலரும் விஜயகாந்த் தரப்பில் நாங்க பேசுறோம் என முன்வந்தார்கள். ஆனால் ஸ்டாலினோ, ‘நானே பேசி முடிக்கிறேன். யாரும் தலையிட வேண்டாம்’ என சொல்லிவிட்டாராம். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக ஸ்டாலின் முதலில் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனை அவரது வீட்டுக்கே போய் சந்தித்தார். சீனிவாசனும், ‘விஜயகாந்த் நான் சொன்னா கேட்பாரு! அவரைப் பார்த்து பேசுறேன்!’ என்று சொன்னார். சொன்னபடி, விஜயகாந்த் வீட்டுக்கும் அவர் போனார். அந்தப் பேச்சுவார்த்தை சரியாக வரவில்லை. அதன்பிறகுதான் களமிறங்கினார் கலாநிதி மாறன். பிப்ரவரி 29ம் தேதி இரவு விஜயகாந்த்தைச் சந்தித்தார். அப்போது, பிரேமலதாவும் உடன் இருந்திருக்கிறார். அவர் பேச்சுவார்த்தை நடத்தியதை நான் சொல்லியிருந்தேன். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதையும் சொன்னேன். அந்தப் பேச்சுவார்த்தையில்தான் தேமுதிக-வுக்கு 59 சீட் என முடிவானது. உள்ளாட்சித் தேர்தலில் இடம் ஒதுக்குவது தொடர்பாக மட்டும் பேசிவிட்டுச் சொல்வதாக கலாநிதி சொல்லி வந்தார். அதுமட்டும் இழுபறியாக இருந்தது.
கடந்த 8ம் தேதி இரவு திரும்பவும் விஜயகாந்த்தை தொடர்புகொண்ட கலாநிதி நேரில் பேச அழைத்துள்ளார். அந்த நேரத்தில் விஜயகாந்த், கட்சி அலுவலகத்தில் இருந்ததால், டிரைவரை மட்டும் அழைத்துக்கொண்டு கலாநிதி சொன்ன இடத்துக்குப் போயிருக்கிறார். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதுபற்றியும் நான் சொல்லியிருந்தேன். அந்தப் பேச்சுவார்த்தை சுபமாக முடிந்ததால்தான், ’பழம் நழுவி பாலில் விழப்போகிறது’ என, கருணாநிதி சொன்னார். ஒவ்வொருநாளும் ஒவ்வொருவிதமான மாற்றங்கள் நடக்கின்றன. தினமும் நடப்பதை நான் தொடர்ந்து சொல்லிவந்தேன்.
கூட்டணிபற்றி விஜயகாந்த்திடம் அவரது உறவினர்கள் கேட்டபோது, ‘கலாநிதி பேச வந்தபோது 59 சீட் கொடுக்கிறதா சொன்னாங்க. அதுக்குப் பிறகு 55 சீட் கொடுக்கிறதா பேசுறாங்க. ஆரம்பத்துலயே இப்படி மாத்தி மாத்திப் பேசிட்டு இருந்தா, எப்படி சரியா வரும்? உள்ளாட்சித் தேர்தல்ல நாம கேட்ட சீட்டை கொடுக்க யோசிக்கிறாங்க. அதனால, இதெல்லாம் ஒத்துவராது! கலைஞருக்கு நாம கூட்டணியில் சேரணும்னு ஆசைதான். ஸ்டாலின்தான் சீட்டை குறைக்கிறாரு. 55 சீட் கொடுத்தா, நாம 40 சீட் ஜெயிப்போம். அதை வெச்சுக்கிட்டு என்ன பண்றது?’ என்று சொல்லிவருகிறாராம்’’ என்ற தகவலை ஸ்டேட்டஸாகப் போட்டது.
அதைப்படித்து லைக் போட்ட வாட்ஸ் அப், அடுத்த அப்டேட்டுடன் ரெடியாகியிருந்தது. ‘‘வழக்கம்போல மகளிர் அணி மாநாட்டையும் சஸ்பென்ஸுடன் விஜயகாந்த் முடிப்பார் என்றுதான் கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்து வந்தனர். ‘கேப்டன் என்ன பேசிடப் போறாரு?’ என்று, சிலர் கூட்டத்துக்கு வரவும் இல்லை. பிரேமலதா பேச ஆரம்பித்தபோதே, திமுக-வுடன் கூட்டணி இல்லை என்பது மறைமுகமாக கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிய ஆரம்பித்தது. ’திமுக ஊழல் கட்சி’ என்று வெளுத்து வாங்க ஆரம்பித்தார் பிரேமலதா. விஜயகாந்த் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியாக இருந்தார். கடைசியாகப் பேசும்போது, ‘யாருடனும் கூட்டணி இல்லை. தனித்துதான் போட்டி!’ என்று அவர் சொன்னபோது, முன்வரிசையில் உட்கார்ந்திருந்த நிர்வாகிகள் முகத்தில் ஈயாடவில்லை. மகளிர் அணி பக்கம் இருந்தும் கைதட்டல் வரவில்லை.
விஜயகாந்த் அதைப்பற்றி கவலைப்படவில்லை. 234 தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய சுதீஷ் தலைமையில் குழு அமைத்திருப்பதாகச் சொல்ல... அதற்கும் கூட்டத்தில் நோ ரியாக்‌ஷன். கூட்டம் முடிந்து நிர்வாகிகள் உற்சாகம் இல்லாமலே கிளம்பிப் போனார்கள். நேற்று இரவே தேமுதிக எம்எல்ஏ-க்கள் சிலரை, அவர்கள் சார்ந்த திமுக மாவட்டச் செயலாளர் போனில் அழைத்துப் பேசியிருக்கிறார்கள். ‘என்னங்க இப்படி பண்ணிட்டாரு உங்க கேப்டன். நீங்கல்லாம் கூட இருந்தால் நல்லா இருந்திருக்கும். இனி, அங்கே எப்படி உங்களால ஜெயிக்க முடியும். திமுகவுக்கு வந்துடுங்க. தளபதிகிட்ட பேசிடலாம்!’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். தேமுதிக-வில் உள்ள சிட்டிங் எம்எல்ஏ-க்கள் சிலரும் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். திமுக-வின் வேட்பாளர் பட்டியல் வருவதற்குமுன்பு தேமுதிக-வில் இருந்து சிலர் திமுக-வுக்குத் தாவினலும் ஆச்சர்யமில்லை’’ என்ற தகவலை தட்டிவிட்டது.
ஃபேஸ்புக் மறுபடியும் ஸ்டேட்டஸுடன் வந்தது. ‘‘விஜயகாந்த் தனித்துப் போட்டி என அறிவித்ததும் கருணாநிதி அப்செட். ’என்னயா நடக்குது? எல்லாம் பேசி முடிச்சிட்டோம்னு சொல்லிட்டு இருந்தீங்க? என்னாச்சு?’ என ஏகத்துக்கும் டென்ஷன் ஆகிவிட்டாராம். கலாநிதி மாறன் இன்று காலை கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதியை சமாதானப்படுத்தியிருக்கிறார். ஆனால், கருணாநிதி சமாதானம் ஆகவில்லை. அங்கிருந்து கிளம்பிய கலாநிதி உடனடியாக, ஸ்டாலினுக்கு போன் செய்து தாத்தா கோபமாக இருக்கும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.
பிறகுதான் ஸ்டாலின் கோபாலபுரத்துக்கு வந்திருக்கிறார். ‘விஜயகாந்த் வருவதாகத்தான் இருந்தாரு. அவரோட மனைவிதான் தடுத்துட்டாங்க. மனைவி சொல்றதைத்தான் அவரு கேட்குறாரு. சீட் அதிகம் கொடுப்பது முக்கியம் இல்லை. கொடுக்கிறதை ஜெயிக்கணும் இல்லையா? அப்படி ஜெயிக்கலைன்னா அது ஜெயலலிதாவுக்குத்தான் போகும். விஜயகாந்துக்கு கூட்டணிக்கு வர விருப்பம் இல்லைன்னா எப்படி, கலாநிதி கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் பேச்சுவார்த்தைக்கு வருவாரு?’ என்று கருணாநிதியிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஆனாலும் கருணாநிதி சமாதானம் ஆகவே இல்லையாம்’’ என்பதை போஸ்ட் செய்தது.
'விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்று பிரேமலதா சொல்கிறார். அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும், இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தன்னையே அறிவிக்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளாராம். ‘உங்களோட உடல்நிலை சரியில்லாமல் இருக்கு. நீங்க இதுக்குமேல சிரமப்படுவது நல்லா இருக்காது. அதனால நீங்க, தமிழ்நாடு முழுக்க பிரச்சாரத்துக்கு வாங்க. என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிங்க. பேப்பர்ல ஒரு சர்வே போட்டு இருந்தாங்க பார்த்தீங்களா... அதுல தமிழ்நாட்டுல ஆளுமைத்திறன் அதிகம் உள்ள பெண்மணி என்று என்னைத்தான் சொல்லியிருக்காங்க’ என்று அவர் சொல்வதாகச் சொல்கிறார்கள்’’ என்று ட்விட்டர், ட்விட் அடித்தது.
ஆஃப் லைனுக்குப் போவதற்குமுன்பு வாட்ஸ் அப் போட்ட செய்தி. ‘‘விஜயகாந்த் எந்தக் கூட்டணிக்கும் வரமாட்டார். அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்று நாம் அவரோட கூட்டணிக்குப் போகலாம் என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இந்த முடிவுக்கு வைகோ சம்மதித்தால் அடுத்த மூவ் நடக்கும்!’’

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...