நேற்று நண்பனுடன் உங்களின் கா.க.போ சென்றிருந்தேன்.நல்ல பொழுதுபோக்குப் படம் நிறைவாக இருந்தது.விஜய் சேதுபதியின் உடல் மொழி, மடோனாவின் இயல்பான நடிப்பு மற்றும் வசனம் எல்லாமே அருமை.
ஆனால், படம் எப்படி இருக்கு? என்று கேட்போரிடம் நன்றாக இருக்கிறது சென்று பாருங்கள் என்று என்னால் முழுமனதுடன் சொல்ல இயலவில்லை. காரணம் கதைக்கு தேவையே இல்லாமல் திணிக்கப்பட்ட கதாநாயகி மது அருந்தும் காட்சி.
கதையின் கரு என்ன? குறிக்கோளே இல்லாத ஆணும் ஒர் குறிக்கோளோடு அதுவும் யார் துணையும் இன்றி சுயமாக தான் விரும்பும் துறையில் சாதிக்க விரும்பும் பெண்ணும் சந்திக்கும் நிகழ்வே படம்.இதில் எதற்கு வேலை கிடைக்காத விரக்தியில் அந்தப் பெண் மது அருந்தும் காட்சி.அதை நியாயபடுத்தி வசனம் வேறு.தனது முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்களத்தில் படம் எடுக்க உங்களிடம் இருந்த துணிச்சல் மது அருந்தும் காட்சிகளே இல்லாமல் படம் எடுக்கும் துணிவு ஏன்? இல்லை.
ஆணோ, பெண்ணோ மது அருந்துவது என்பது எத்தகைய தீங்கு.அதை உங்களைப் போன்ற நம்பகமான இயக்குனர்கள் ஆதரிக்கலாமா. ஒரு காட்சி தானே இதில் என்ன வந்துவிடப் போகிறது என நீங்கள் எண்ணலாம்.அந்த காட்சிக்கு திரையரங்கில் எத்தனை வரவேற்பு தெரியுமா? அது எத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடும்.
ஆண் குடிக்கும் போது பெண் குடித்தால் என்ன? என்று பெண்ணும்,பெண்ணே குடிக்கும் போது ஆண் குடித்தால் என்ன? என்று ஆணும் நினைத்தால் என்ன ஆகும் மேலும் தோல்விக்கு சிறந்த மருந்து மதுதான் என்ற எண்ணமும் தோன்றாதா? இப்போது 90 விழுக்காடு ஆணும், பெண்ணும் வீட்டை விட்டு வந்து சென்னையில் தங்கிதான் வேலை தேடுகிறார்கள், வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு இது போன்ற காட்சிகள் எத்தனை பாதிப்பை உண்டு பண்ணும் யோசித்திருக்க வேண்டாமா?
இந்தப் பதிவு உங்களை குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. உங்கள் மேல் அதிக நம்பிக்கை கொண்ட இரசிகன் என்ற முறையில் எழுதினேன்.மேலும் இப்போது வரும் திரைப்படங்கள் அனைத்தும் (எ.கா- ஆறாவது சினம், போக்கிரி ராஜா) மது வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக தோல்விகளுக்கு தேவையான ஒன்றாக சித்தரிக்கப்படுவதின் வருத்தத்தில் பதிகிறேன்.
எட்டு அல்லது பத்து பேர் லைக் செய்யப்போகும் இந்தப்பதிவால் உங்கள் படத்தின் வசூல் பாதிக்கப்படப் போவதில்லை, இனி வரும் திரைப்படங்களில் ஆணும், பெண்ணும் மது அருந்தும் காட்சி இல்லாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் ஏதோ ஒரு வகையில் இந்தப் பதிவு உங்களை வந்தடைந்தாலோ அல்லது இந்தப் பதிவை பார்க்கும் வருங்கால இயக்குனர் மது அருந்தும், மது அருந்துவதை ஆதரிக்கும் காட்சிகள் இல்லாமல் எடுக்க மாட்டாரா என்ற நப்பாசையில் பதிவிடுகிறேன். நன்றி!
குறிப்பு: இது நலனுக்கு மட்டுமானவல்ல நல்ல படமெடுக்கும் நம்பிக்கையான எல்லா இயக்குனர்களுக்கும்.
மதுவும் கடந்து போகட்டும்...................
No comments:
Post a Comment