காலை வணக்கம் நண்பர்களே
காமராஜர் போன்ற வெகு சில ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் எளிதில் சந்திக்க முடிந்தது.
காமராஜர் போன்ற வெகு சில ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் எளிதில் சந்திக்க முடிந்தது.
தெக்கன் திருவிதாங்கூர் என்னும் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த புதிது. காமராஜர்தான் அப்போது தமிழக முதலமைச்சர். புதிய மாவட்டத்தின் மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகள் கேட்டார். காமராஜரை யார் வேண்டுமானாலும் நேரடியாகச் சந்திக்கலாம் என்ற செய்திகூட நாளிதழில் வந்தது. திருவிதாங்கூர் அரசருக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகளுக்கு இது புதிய அனுபவம்.
காமராஜர் கரடுமுரடான சாலைகளில் செல்லத் தோதான வருவாய்த் துறை ஜீப்பில் வந்தார். முக்கிய சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு நடந்துவந்த சமயம்தான் எங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தார். 19-ம் நூற்றாண்டுக் கட்டிடம். ஆசிரியர்கள் முன்னே நிற்க, மாணவர்கள் கூடி நின்றோம். திட்டமிடப்படாத வரவேற்பு. யாரும் தடுக்கவில்லை. போலீஸ் கெடுபிடி இல்லை.
எங்களைப் பார்த்ததும் முதலமைச்சர் நின்றார். அவருடன் மிகக் குறைவான போலீஸார்; இரண்டோ மூன்றோ அதிகாரிகள்; அமைச்சர் கக்கனும் மாவட்ட ஆட்சியர் அம்பா சங்கரும் இருந்தனர். யாரும் யாரையும் விலக்கவில்லை. போலீஸ் அதிகாரிகூட அவருக்குப் பாதுகாப்பாக முன்னே வரவில்லை. மூத்த ஆசிரியர் கதர் நூல் மாலையைக் காமராஜர் கழுத்தில் போட்டார். அவர் அதற்கு வாகாகத் தலையைத் தாழ்த்திக்கொடுத்தார். ஆஜானு பாகுவான உருவம்; முழங்கால் வரை எட்டும் தொளதொள சட்டை; சாதாரண செருப்பு; பாதங்கள் தெரியும்படி கட்டப்பட்ட வேட்டி.
நல்லாப் படிக்கணும் காமராஜர் எங்கள் அருகில் வந்தார். சுற்றிலும் பார்த்தார். நாங்கள் இரண்டு கைகளைக் கூப்பியபடி நின்றோம். கூட்டத்தில் கிழிந்த சட்டையுடன் கூடிய மாணவர்கள் நாலைந்து பேர் இருந்தனர். காமராஜர் ஒருவன் தலையைத் தடவிவிட்டார். “என்ன படிக்கிறே” என்றார். அவன் “மூணாப்பு” என்றான்.
எங்களைப் பார்த்துப் பொதுவாகச் சொன்னார்: “நல்லாப் படிக்கணும்; அப்பா, அம்மா சொன்னா கேக்கணும்; நல்ல பேரு வாங்கணும்; உழைச்சு முன்னுக்கு வரணும்.” ஒரு ஆசிரியர், காமராஜர் முன்னே தயங்கித் தயங்கி வந்து நின்றார். “என்ன விஷயம்?” என்று காமராஜர் கேட்டார். “இப்போ 30 குழந்தைகளுக்கு உச்ச நேரம் (நண்பகல்) கஞ்சி ஊத்துறோம். அது பத்தல்ல. 50 பேருக்குக் கஞ்சி ஊத்த திருமனசு தயவு பண்ணணும்” என்றார். பழக்கதோஷம்; ஆசிரியர் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியிலும் இருந்தவர்; திவான் பேஷ்காரிடம் விண்ணப்பம் செய்யும் பாணியில் பேசினார். காம ராஜருக்கு அவரது பேச்சு முழுவதும் புரியவில்லை. என்றாலும் ஆசிரியருடன் பேசினார்; பக்கத்தில் நின்ற அதிகாரிகளுடன் பேசினார்.
“கேட்க நல்லா இருக்கு . உண்மையா நடந்தது ” என்று கேட்டாள். இதுபோன்ற செய்திகள் இன்றைய தலைமுறையினருக்கு சொல்ல வேண்டும்
No comments:
Post a Comment