ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார்.
பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன.
“பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே;
எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும்,
எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும்,
“எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமரமுடியாது.” என்றும் எள்ளி நகையாடின.
(ஆபரணங்கள் பேசுமா என்று நினைக்கவேண்டாம். பகவானின் ஆயுதங்கள், மற்றும் அணிகலன்கள் ஒவ்வொன்றுக்கும் ஜீவன் உண்டு.
திருமாலின் கதாயுதமே பன்னிரு ஆழ்வார்களில் பூதத்தாழ்வாராக பிறந்தது.
சங்கு எனப்படும் பாஞ்ச சன்னியமே பொய்கையாழ்வாராக அவதரித்தது.
திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சமே பேயாழ்வாராக அவதரித்தது.
சக்கராயுதமே திருமழிசை ஆழ்வாராக அவதரித்தது.
பெரியாழ்வார் கருடனின் அம்சமாக அவதரித்தார்.
பரந்தாமனின் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்.
திருமாலின் ஸ்ரீவத்சத்தின் (மரு) அம்சமாக பிறந்தவர் திருப்பாணாழ்வார்.
கௌஸ்துவ மணியின் அம்சமாக பிறந்தவரே குலசேகராழ்வார்.)
கதைக்கு வருவோம்….
பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன.
அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்ப்பேன்.
உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.
சொன்னதை போல, இராமனாக பரம்பொருள் திரு அவதாரம் செய்த பின்பு, பரதன் முடி சூட வேண்டி கைகேயி செய்த சதியால் வனவாசம் சென்றுவிட, விஷயம் தெரிந்த பரதன், இராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.
தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான்.
மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார்.
“உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் நிறுத்தி, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்.” என்று வேண்ட, மனமிறங்கிய அண்ணல், அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீ இராமரின் பாதரக்ஷைகளை சங்கு-சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கி எடுத்துச் சென்று அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தனர்.
இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளுங்கள்.
இதன் நினைவாகவே இன்றும் பெருமாள் கோவில்களில் கிரீடத்தின் மேல் பாதுகைகள் உள்ள ‘சடாரி’
ஸ்ரீவைஷ்ணவர்களின் தோள்களில் முத்திரையாகப் பதித்திருக்கும் சங்கு-சக்கரங்களுக்கும், தலை மீதும் சாத்தப்படுகிறது.
மேலும் பகவானின் கால் பட்டல்ல, அவன் பாதுகை பட்டதாலேயே கல்லாக இருந்த அகலிகையும் சாபவிமோசனம் பெற்று எழுந்தாள்.
இறைவனின் பாதுகைகள் அத்தனை மகத்துவம் மிக்கது. கோவிலுக்கு சென்றால் பகவானின் திருவடிகளையே முதலில் பார்க்கவேண்டும்.
காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.
இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம்.
அதை உணர்ந்து எப்போதும் அடக்கத்துடன் வாழ்ந்து, இந்த வாழ்க்கை அவன் போட்ட பிச்சை என்கிற எண்ணத்துடன் வாழ்ந்து வரவேண்டும்.


No comments:
Post a Comment