Thursday, July 14, 2022

*பாங்கும் ராகமும்*

 தொழுகைக்காக அழைப்புவிடும் பாங்கோசை அனுதினமும் ஐவேளை நாம் கேட்கிறோம். அதில் ராகம் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இருக்கிறது.

பாங்கு சப்தத்தை ஒலித்தல் என்று சொல்வதா, அல்லது இசைத்தல் என்று சொல்வதா என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை.
பாங்கினை ஒலிப்பவர் இந்தச் சுருதியில்தான் தொடங்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர் ஒலிக்கத் தொடங்குவது ஏதோ ஒரு குறிப்பிட்ட சுருதியில் என்பது மட்டும் நமக்கு நன்றாக புரிகிறது.
ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக்க விரும்புகிறேன். பாங்கினை யாரும் இந்த ராகம், அந்த ராகம் என்று நினைத்துக் கொண்டு ஓதுவதில்லை. அதேசமயம் பாங்கில் ஏதோ ஒரு ராகம் ஒளிந்திருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
பாவ மன்னிப்பு படத்தில் “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாட்டிற்கிடையில் பாங்கு சப்தம் ஒலிக்கும். பொதுவாக சிவரஞ்சனி, சிந்துபைரவி அல்லது கீரவாணி ராகத்தில் ஒலிக்கப்படும் பாங்கோசையை சற்றே மாற்றி மாய மாளவ கெளளை ராகத்தில் நாகூர் ஹனிபாவை எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கச் செய்திருப்பார். அப்போதே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அதெப்படி பாங்கினை வழக்கத்திற்கு மாறாக வேறு ராகத்தில் நீட்டி முழக்கலாம் என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
திருநெல்வேலியில் ஒரு முஅத்தின் அதிகாலை நேரத்து பாங்கினை பூபாள ராகத்தில் ஓதுவதாக இசையறிஞர் நண்பர் ஹாஜி பால் கூறுகிறார். இவர் பண்டைய காலத்து தமிழ்க் கலாச்சாரங்களில் காணப்படும் வெவ்வேறு தாள வகைகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
நைஜீரியாவில் திருமறையை ஒருவர் மோகன ராகத்தில்
இனிமையாக
ஓதுவதை அண்மையில் காணொளி ஒன்றில் கண்டேன். இன்னொரு காணொளியில் ஒரு மலையாளி சகோதரர் ஒருவர் ஒரே திருமறை அத்தியாயத்தை பல ராகங்களில் பெயர் குறிப்பிட்டு ஓதுவதைக் கேட்டுக் களித்தேன்,
பாங்கோசையில் ஆரோகணமும் உண்டு அவரோகணமும் உண்டு. ஏற்ற இறக்கம் கொண்டதுதானே பாங்கோசை? அரபு வாக்கியங்களை உச்சரிக்கையில் எந்த இடத்தில் நீட்டி முழக்க வேண்டும் எந்த இடத்தில் தாழ்த்தி உச்சரிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உண்டு.
பாங்கு என்றாலே தமிழில் பக்குவம் அல்லது நயம் என்றுதானே பொருள்? “ராக ஆலாபனை பாங்காக இருந்தது” என்று சொன்னால் நயமாக இருந்தது, தன்மையாக இருந்தது என்றுதானே பொருள்?
ராகத்தின் பெயர்கள் மட்டுமே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் *ராகம் என்பது இறைவனால் கண்டுபிடிக்கப்பட்டது* என்பது என் கருத்து.
*ஒரு குறிப்பிட்ட சுருதிகளின் சேர்க்கைதான் ராகம் என்பது. அது ஏற்ற இறக்கம் கொண்டது.*
அப்படி பார்த்தால் காலையில் எழுந்ததும் நம் காதுகளில் ஒலிக்கும் சேவலின் கூவல் முதற்கொண்டு, பகலில் வண்டுகள் முழக்கும் ரீங்காரம் முதற்கொண்டு, இரவில் நீர்க்குட்டைகளில் தவளைகள் எழுப்பும் சப்தங்கள் வரை எல்லாமே ராகம்தான்.
காலை, நன்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு பொழுதுகளுக்கும் ஏற்றவாறு இராகங்கள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.
அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் பூபாளம் என்றும்
அந்தி மாலையில் கேட்க வேண்டிய ராகம் சக்கரவாகம் என்றும் சொல்கிறார்கள்.
இன்னும் துல்லியமாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில்
காலை 5-6 மணிக்கு பூபாளம்,
6-7 மணிக்கு பிலஹரி,
7-8 மணிக்கு தன்யாசி,
8-10 மணிக்கு ஆரபி, சாவேரி,
10-11 மணிக்கு மத்யமாவதி,
11-12 மணிக்கு மனிரங்கு
12-1 மதிய நேரத்தில் ஸ்ரீராகம்,
1-2 மணிக்கு மாண்டு,
2-3 மணிக்கு பைரவி/ கரகரப்பிரியா
3-4 மணிக்கு கல்யாணி/ யமுனா,
மாலை 4-5 மணிக்கு காம்போதி/ மோகனம்,/ ஆனந்த பைரவி/ நீலாம்பரி, மலையமாருதம்/ பியாகடை/ மலையமாருதம்
என பகுத்தறிந்து வைத்திருக்கிறார்கள்.
மழை வேண்டி இசைப்பது அமிர்தவர்ஷினி,
கல் நெஞ்சத்தையும் கரைய வைக்க அரிகாம் போதி,
டென்ஷனைப் போக்க ஆனந்த பைரவி/ ஸ்ரீ ரஞ்சனி/ கமாஸ், நாயகி/ சகானா/ நீலாம்பரி,
மன அழுத்தத்தைக் களைய போக்க அம்சத்வனி/ பீம்பிளாஸ்
என்று வகை வகையாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.
அக்பர் அவையில் சங்கீதச் சக்கரவர்த்தி தான்சேன் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்த நிகழ்வை படித்த ஞாபகம்.
அசுனம் என்ற ஒரு பறவையைப் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, அப்பறவை இசையை வெகுவாக ரசிக்கும். அதே சமயத்தில் கொடிய இசையை கேட்க நேரிட்டால் உயிரை விட்டுவிடும்
“விழுந்த மாரிப் பெருந்தன் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயம்வரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஒர்க்கும்”
நற்றிணை (244 வது பாடல்) – கூற்றங் குமரனார் எழுதியது.
பாங்கோசையிலும், திருமறை ஓதுதலின் போதும் *ராகம் முக்கியம்* என்பது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
*இனிமையான ராகத்தில் ஓதப்படுபவை மனதை சாந்தப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...