அ.தி.மு.க.,வில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த விவகாரத்தில், 'மாஜி' வேலுமணியை அடுத்து காமராஜும் சிக்கி உள்ளார்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள அவரது வீடு, மகன்கள் நடத்தும் மருத்துவமனை மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு,அலுவலகம் என, 52 இடங்களில் நேற்று தொடர் சோதனை நடத்தப்பட்டது.
படுக்கை அறை, சொகுசு கார் என ஒரு இடம் விடாமல்,லஞ்ச ஒழிப்புத் துறையினர் சல்லடை போட்டு தேடியதில், பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, சோதிரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ், 62. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், தற்போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.இவர், அ.தி.மு.க., ஆட்சியில் உணவு துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2015 ஜனவரியில் இருந்து, 2016 மே மாதம் வரை, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சராக, கூடுதல் பொறுப்பு வகித்தார்.சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் காமராஜ்; மனைவி லதா மகேஷ்வரி. இவர்களுக்கு இன்பன், 30, இனியன், 32, என, இரு மகன்கள் உள்ளனர்; இருவரும் டாக்டர்கள்.
இவர்கள், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், 'வாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர்' என்ற மருத்துவமனையை நடத்தி வருகின்றனர்; அதன் இயக்குனர்களாகவும் உள்ளனர்.காமராஜ் அமைச்சராக இருந்தபோது, மகன்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. விசாரணையில் காமராஜ், 2007ல் நண்பர்கள் வாயிலாக, சட்ட விரோதமாக தஞ்சாவூரில், 'என்.ஏ.ஆர்.சி.,ஹோட்டல்' என்ற சொத்தை வாங்கி உள்ளார்.
அதில், கட்டுமான நிறுவனம் நடத்தி, முறைகேடாக சொத்து குவித்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதே போல, மகன்கள் நடத்தி வரும் மருத்துவமனையையும் முறைகேடாக வாங்கியதும், போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணையில், அமைச்சராக இருந்த 2015, ஏப்., 1ல் இருந்து, 2021 மார்ச் 31 வரையிலான கால கட்டத்தில், காமராஜ், தன் மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் பெயரில், முறைகேடாக, 58 கோடியே, 44 லட்சத்து, 38 ஆயிரத்து, 252 ரூபாய்க்கு சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, காமராஜ், மகன்கள், நண்பர்கள் சந்திரசேகரன், 62, கிருஷ்ணமூர்த்தி, 51, உதயகுமார், 60, என, ஆறு பேர் மீது, லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
52 இடங்களில் ரெய்டு
இந்நிலையில், நேற்று காலை, 5:00 மணியில் இருந்து, மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள, காமராஜ் வீடு; அதே பகுதியில் உள்ள காமராஜ் மனைவி லதா மகேஸ்வரியின் தங்கை ஆண்டாள் மற்றும் இனியன், இன்பன் வீடுகள்; இவர்கள் நடத்தி வரும் மருத்துவமனை ஆகியவற்றில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
சொகுசு கார், படுக்கை அறை என, ஒரு இடம் கூட விடாமல், சல்லடை போட்டு தேடினர்.
காமராஜ் நண்பர்களான, மன்னார்குடி அ.தி.மு.க., நகர செயலரும், அவரது அக்கா மகனுமான ஆர்.ஜி.குமார், வழக்கறிஞர் உதயகுமார், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பைங்காநாடு ராதாகிருஷ்ணன், காமராஜ் அண்ணன் மகன் குட்டி என்கிற ராஜகோபால், பாஸ்கர், தியாகு, முன்னாள் கவுன்சிலர் கோபி, உதவியாளர்கள் சத்தியமூர்த்தி, கிருஷ்ணகுமார், ஹரி, பாமினி சந்திரசேகர், தேசபந்து ஆகிய, 14 பேர் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பூக்கார வஸ்தா தெருவில், காமராஜின் சம்பந்தி டாக்டர் மோகன் வீடு, தஞ்சாவூர் எலிசா நகரில் காமராஜ் மகன்களான இனியன், இன்பன் ஆகியோரால் கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் உள்ள மருத்துவமனையிலும் சோதனை நடத்தினர்.
சென்னை, பனையூரில், வசந்த மாளிகை போல காமராஜ் கட்டியுள்ள சொகுசு பங்களா, அண்ணா நகரில் உள்ள பினாமி தேசபந்துவின் வீடு, அடையாறு சாஸ்திரி நகரில் உறவினர் முத்துலட்சுமி வீடு, ராயப்பேட்டை, நீலாங்கரை, போயஸ் கார்டனில் காமராஜ் பினாமிகள் நடத்தி வரும் நிறுவனங்கள் என, சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், ௫௨ இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, ஏற்கனவே முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் சிக்கி உள்ளனர். வேலுமணி வீடு மற்றும் பினாமி சந்திரசேகர் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அந்த வரிசையில், காமராஜும் சிக்கி உள்ளார்.
கைப்பற்றியது என்ன?
காமராஜ், நண்பர்கள், உறவினர்கள், பினாமிகள் வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில், 7 கிலோ தங்கம், 41 லட்சம் ரூபாய் ரொக்கம், 23 ஆயிரத்து, 960 கிராம் வெள்ளி, ஐபோன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்கள், 15.50 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ள வங்கி பெட்டக சாவி உள்ளிட்ட பொருட்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் காமராஜ்வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைநடத்தியதற்கு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க.,வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத தி.மு.க., அரசு, முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும், அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என, தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment