Tuesday, July 12, 2022

*நினைவுகள்:

 இப்படித்தான் சினிமா படம் பார்த்தோம், அப்போது!!

1. அப்போது சைக்கிளில் ஒரு எவர் சில்வர் வாளியில் பேப்பரை ஒட்டும் பசையுடன் நோட்டீஸ் ஒட்ட ஒரு அண்ணன் வருவார்.
அவர் ஒட்டிய பிறகே தெரியவந்தது அருகில் உள்ள டூரிங் டாக்கீஸில் என்ன படம் என்று.
அதிலும் அவர் ஒட்டும் மெகா சைஸ் கலர் போஸ்டரை பார்ப்பதற்கே ஒரு சிறுவர் கூட்டம் அலைமோதும்.
ஏனென்றால் அவர்களுக்கு படம் பார்ப்பதே, அந்த கலர் போஸ்டரை பார்ப்பதுதான்.
2. அப்போதெல்லாம்
வேலையில்லாத சமயம் பார்த்து தான்,
மாலை 6 மணிக்கு மேல்தான் டூரிங் டாக்கிஸிற்கு படம் பார்க்கப் போனார்கள்.
மொத்தமே ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள்தான் ஓடின.
அதுவும் மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகள் மட்டுமே.
3. அதிகப்பட்சம் சைக்கிளிலேயே டூரிங் டாக்கிஸிற்கு சென்றார்கள். சைக்கிளிலேயே திரும்ப வீட்டுக்கு வந்தார்கள்.
இன்னும் சிலர் செருப்பு இல்லாமல் நடந்தே சென்று படத்தைப் பார்த்துவிட்டும் வந்தார்கள்.
4. படம் தொடங்குவதற்கு முன்பு,
டூரிங் டாக்கிஸின் முகப்பு கட்டிடத்தின் உச்சியில் ரேடியோ கட்டப்பட்டு, பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும்.
அரங்கம் திறக்கப்பட்டது என்ற சிக்னல் தான் அந்தப் பாடல்.
5. சினிமாப் படத்திற்கான டிக்கெட்டை டூரிங் டாக்கிஸிற்கு சென்று, வரிசையில் நின்று, கவுண்ட்டரில்தான் வாங்கினோம். கண்டிப்பாக ஒருமுறை கூட பிளாக்கில் டிக்கெட் வாங்கிய ஞாபகமே இல்லை.
6. தியேட்டருக்கு முன்னால் பல பிரபலங்களின் படங்களுக்கு கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும்,
பல லிட்டர் பசும் பாலும்,
பல வண்ண மலர்களின் வாசனகள் வீணாக்கப்படவே இல்லை.
7. டூரிங் டாக்கிஸிற்குள் குறைந்தபட்சம் மணல் மேட்டை கூப்பி அதில் உட்கார்ந்து படம் பார்த்துதான் பழக்கம்.
அதில் இடையிடையில் சூடாக வறுத்த கடலை,பட்டாணியை விற்க சீமத் தண்ணி (kerosene) ஊற்றிய விளக்குடன் ஒரு அண்ணன் விற்றுக் கொண்டே வருவார்.
படத்தின் காட்சிகளும் ஓடிக்கொண்டேயிருக்கும்.
அவர் அங்குமிங்குமாக அவ்வப்போது எழுவார், உட்காருவார்.
ஆனாலும் அவருடைய வியாபாரம் இடையூறாக இருந்ததே இல்லை.
8. அந்த டூரிங் டாக்கிஸிற்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு காம்பவுண்டு சுவர் இருந்தது.
இரு பாலரும் தனித்தனியாகவே அமர்ந்து படம் பார்த்தனர்.
9. அப்போதெல்லாம், டூரிங் டாக்கீஸ் ஊரின் ஒதுக்குப் புறமாய் இருந்தது. சுற்றிலும் புங்கை மரங்களும், மா மரங்களும் இருக்கும்.
அதனால் இரு புறமும் காற்று தென்றலாக ஓடிவந்து வியர்வைத் துளிகளையெல்லாம் குடித்துவிட்டு தன் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். ஏசி என்ற ஒன்று தேவை இருந்ததே இல்லை.
10.படத்தின் சுவாரஸ்யமான காட்சிகள் வரும்போது, ஆக்ரோசத்துடன் எழுந்து ஆடி, பாடாமல் உட்கார்ந்த இடத்திலேயே கைதட்டியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்கள்.
11. மிகச் சில டூரிங் டாக்கீஸில் தான் ஜெனரேட்டர் வசதி இருக்கும்.
அந்த வசதி இல்லாத டூரிங் டாக்கீஸில்,படம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் மின்சாரம் தடைபட்ட போது அப்படியாக ஒன்றும் கோபப்படவில்லை.
மின்சாரம் திரும்ப வரும்வரை காத்திருந்தோம்.
12. படத்தின் இடைவேளையில் அதிகபட்சம் கண்ணன் சோடாவும், கலரும் குடித்ததே இன்னும் நாவில் தேன் போல தித்திக்கிறது.
13. படத்தில் சண்டைக் காட்சிகளில் வரும் பிஜிஎம் இசையும், பாடலில் ஒவ்வொரு சரணத்திற்கும் இடையில் வரும் இசையும் மட்டுமே ஸ்பீக்கரில் ஒலிபரப்புவார்கள்.
இதை சைட் ஸ்பீக்கர் என்றும் செல்லமாக அழைப்பதுண்டு.
அதுவே அந்தக் காலத்து டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆக இருந்தது. படத்தின் மற்ற வசனங்கள், இசையெல்லாம் அங்குள்ள ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது.
14. பாடல்களின் வரிகளும், இசையும் இரண்டும் தனித்தனியாக, ஒன்றாக அழகாக புரிந்தது.
பாடல் வெகுஜன மக்களிடையே போய் சேர்ந்தது.
படம் முடிந்த பின்னர் படத்தின் பாடல்களை அப்படியே பிழையில்லாமல் பாடிய சாதனையாளர்களும் இருந்தார்கள்.
15. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு படத்திலும் இடம்பெறும் பாடல்களை நாயகனோ,நாயகியோ தான் பாடுவார்கள் என்று ஒரு பெரிய விவாதமும் நடந்ததுண்டு. பின்னணிப் பாடகர்கள் என்ற ஒரு பிரிவு என்பதே தெரியாத காலம் அது.
16. தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தே இந்த டூரிங் டாக்கீஸில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த மாதிரியான பண்டிகை காலங்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் உடனுக்குடன் மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே அப்போது ரிலீஸாகிக் கொண்டிருந்தது.
அந்த மிகப் பெரிய நட்சத்திரங்களின் படங்களின் ரீல் பெட்டியை பஸ்சின் டாப்பில் வைத்துக் கட்டிக்கொண்டு வருவார்கள் . அதைப் பார்ப்பதற்கே ஒரு கூட்டம் இருக்கும்.
இந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பார்ப்பதே ஒரு பெரிய கொடுப்பினை தான்.
17. படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னர், மறு நாள் காட்டில் வேலை செய்யும்போது, அந்தப் படத்தை அச்சு அசலாக தோஸ்துகளுடன் அதை முதலில் இருந்து கடைசி வரை கதை சொல்லும் அனுபவமும் அற்புதமோ அற்புதம்.
அதைக் கேட்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்தது.
18. ஒரு குடும்பமே படம் பார்க்கச் சென்றாலும், அதிகபட்சம் 10 ரூபாய் செலவாகும்.
வீட்டில் கிளம்பியது முதல் படம் பார்ர்த்துவிட்டு வீடு திரும்பும்வரை ஒரு திருவிழாவாகத் தான் இருக்கும். படம் பார்ப்பதை சாக்காக வைத்துக்கொண்டு ஹோட்டலில் சாப்பிட்ட பழக்கம் அறவே இல்லை. இரவு படம் பார்த்து முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்தவுடன் அன்று சாயந்திரம் வடுச்ச சோறையும், குழம்பையும் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டுத் தூங்கினார்கள்.
இறக்கும் வரை இந்த இனிய நினைவுகள்
என்றும் நம் மனதில் பசுமையாக இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...