Saturday, April 22, 2023

மீண்டும் உயர்ந்த மனிதன் படம்பார்த்தது போல் இருந்தது!

 

🌹உயர்ந்த மனிதன்.’ 1968-ம் ஆண்டு, நவம்பர் 29-ம் தேதி, வெளியானது
சிவாஜிக்கு இது 125-வது படம். மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்து மகுடம் சூட்டியது சிவாஜிக்கு!
🌹மதுரையைச் சேர்ந்த மிகப்பெரிய செல்வந்தர் சங்கரலிங்கம் பிள்ளை (எஸ்.வி.ராமதாஸ்).
இவரின் ஒரே மகன் ராஜலிங்கம்
(சிவாஜிகணேசன் )
ராஜலிங்கம் என்கிற ராஜூவின் பால்ய சிநேகிதன் சுந்தரம்
(மேஜர் சுந்தர்ராஜன்), அவர்கள் வீட்டிலே பரம்பரை பரம்பரையாக வேலை செய்கிறார். இன்னொரு நண்பர்
டாக்டர் கோபால் (எஸ்.ஏ.அசோகன்).
🌹படிப்பெல்லாம் முடித்திருந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள எஸ்டேட்டைச் சுற்றிப்பார்க்க தன் நண்பர்கள் டாக்டர் கோபாலுடனும் சுந்தரத்துடனும் செல்கிறார் ராஜூ. அங்கே பார்வதியை (வாணிஸ்ரீ) பார்க்கிறார்.
பார்வதியைக் கோபாலும் பார்க்கிறார். ராஜூவுக்கும் அவள் மீது காதல்.
🌹 கோபாலுக்கும் அவள் மீது விருப்பம். பார்வதியின் அப்பா ராஜூவின் எஸ்டேட்டில் வேலை பார்க்கிறார்.
ஒருகட்டத்தில் ராஜூவும் பார்வதியும் விரும்புகிறார்கள். தன் அப்பா, பணமும் செல்வமும் இருக்கிற பகட்டுக்குச் சொந்தக்காரர் என்பதால்,
திருமணம் முடிந்த பிறகு சொல்லி சமாதானம் செய்துவிடலாம் என்று நம்பி, பார்வதியைத் திருமணம் செய்துகொள்கிறார் ராஜூ.
🌹பார்வதியும் கர்ப்பமாகிறார்.இருவரும் எஸ்டேட் பங்களாவில் ஒன்றாக வாழ்கிறார்கள். இந்த விஷயமெல்லாம் சங்கரலிங்கம் பிள்ளைக்குத் தெரியவர, கொடைக்கானலுக்கு வருகிறார். அப்போது பார்வதி, தன் வீட்டுக்குச் சென்றிருக்க, இங்கே அப்பாவுக்கும் மகனுக்கும் கடும் வாக்குவாதம்; சண்டை.
அன்றிரவு, பார்வதியின் குடிசைக்கு தீவைக்கிறார் சங்கரலிங்கம். இதைக் கண்டு அப்பாவை எதிர்க்க முடியாமலும் பார்வதியைக் காப்பாற்ற முடியாமலும் கலங்கிக் கதறி மயங்கிச் சரிகிறார் ராஜூ.
🌹மதுரைக்கு வந்த பிறகும் பார்வதியின் மரணத்தை ராஜூவால் ஏற்கவே முடியவில்லை. இந்த நிலையில், உறவுக்கார முறைப்பெண் விமலாவை (செளகார் ஜானகி) திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார் சங்கரலிங்கம்.
முடியாது என ராஜூ மறுக்கிறார். அதட்டி, உருட்டி, மிரட்டி, ‘தற்கொலை செய்துகொள்கிறேன்’ என அட்டூழிய ‘பிளாக்மெயில்’ செய்து, மகனைத் திருமணத்துக்குச் சம்மதிக்கவைக்கிறார்.
🌹ராஜூவும் மனைவி விமலாவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும் ஒட்டுதல் இல்லாமல்தான் வாழ்கிறார் ராஜூ. அவர்களுக்குக் குழந்தையும் இல்லை. இந்த சமயத்தில், வி.எஸ்.ராகவனால் வளர்க்கப்படுகிற சத்யன் (சிவகுமார்), படிப்பில்லாமல் இருக்கிறார். சரியான வேலையும் இல்லை.
அவரை டாக்டர் கோபால் சந்திக்கிறார். ராஜூவிடம் அழைத்துச் சென்று, சத்யனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார்.
🌹சத்யன் பேருக்கேற்ற மாதிரியே சத்யன். கடுகளவும் பொய் பேசாதவன். ‘சாகும் வரை நான் பொய் பேசவே மாட்டேன் அம்மா’ என்று அம்மாவின் படத்தில் ஒட்டி வைத்திருக்கிற அளவுக்கு நல்லவன்.
கொடைக்கானல் போககாரில் ஏறுவார் ராஜு அசோகனும் ஏறிக்கொள்வார். பால்ய நண்பன் மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி வீட்டில் வேலை செய்பவரல்லவா... அவர்தான் காரோட்டி.
🌹அப்போது அப்பாவைப் பற்றிப் புலம்பிக்கொண்டே ‘ப்ளடி ஃபூல்’ என்று ‘ப்ளடி’க்கு ஒரு அழுத்தம் கொடுத்துச் சொல்லியபடி, விரக்தியுடன் சிகரெட்டைப் பற்றவைப்பார். அசோகனுக்குத் தருவார். மேஜருக்கும் தருவார்.
‘வேணாம் முதலாளி’ என்பார் மேஜர். “டேய்... வீட்ல இருக்கறவரைக்கும்தான் இந்த முதலாளி தொழிலாளியெல்லாம்.
வெளியே வந்துட்டா நாம நண்பர்கள்தான். சிகரெட்டை எடுடா’’ என்று தோழமையும் செல்லக் கோபமும் கலந்து சிவாஜி சொல்வார். நமக்குக் கண்கள் கலங்கிவிடும்.
🌹 ஒருகட்டத்தில், சத்யன் பார்வதி - ராஜூ இருவருக்கும் பிறந்த மகன் என்பதும் அப்பாவின் வீட்டிலேயே பையன், ஒரு வேலைக்காரனைப் போல் இருக்கிறான் என்பதும் டாக்டர் கோபாலுக்குத் தெரியவருகிறது. அதைத் தன் நண்பனிடம் சொல்ல முற்படும் தருணத்தில், டாக்டர் இறந்துவிடுகிறார்.
🌹சிவாஜியின் உடல் ஆரோக்கியத்தைக் காரணம் காட்டி, உப்புச் உறைப்பில்லாத உணவாகச் சமைத்து அனுப்புவார் செளகார் ஜானகி. அதை வேண்டாவெறுப்பாக சாப்பிடுவார் சிவாஜி. இதையெல்லாம் பார்த்துவிட்டு, சிவகுமார், “நல்லா சுள்ளுன்னு சமைச்சு எடுத்து வரட்டுமா முதலாளி?” என்று கேட்பார். அப்போது சிவாஜியைப் பார்க்க வேண்டுமே... சிவகுமாரை ஒரு பார்வை பார்ப்பார். லேசாக புன்னகைத்தபடி, சரியென்று தலையாட்டுவார்.
🌹காரஞ்சாரமாக உணவு வரும். கண்களில் நீர் வழிய சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டே, “என் அம்மா கையில சாப்பிட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வருது. இன்னும் கொஞ்சம் ரசம் ஊத்து’’ என்று சொல்லியபடி வாங்கிக் குடிப்பார்.
🌹சாப்பிடும்போது ஒரு எக்ஸ்பிரஷன். கையலம்பும்போது ஒரு மேனரிஸம். துண்டால் கைதுடைக்கும் போது தனி பாணி. நடந்து வரும்போது, பல் குத்தும் போது பல் குத்தும் குச்சியைக் கொண்டும் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டிருப்பதை எடுக்கும் பாவனையில் ஒரு ஸ்டைல்...
நடிகர் திலகத்தின் நடிப்பு காட்சிக்குக் காட்சி உயர்ந்துகொண்டே இருக்கும்.
🌹காதலியாக வந்து சிவாஜியின் மனதில் இடம்பிடிக்கும் வாணிஸ்ரீ, தன் நடிப்பால் அசத்தியிருப்பார். அவர் சிவாஜிக்காக தயாரித்துக் கொடுத்த ஸ்வெட்டர் படத்தில் வரும்போதெல்லாம் நம் கண்ணுக்கு முன்னேயும் மனசுக்குள்ளேயும் ‘பார்வதி’யாகவே வந்துசெல்வார் வாணிஸ்ரீ.
🌹சிவாஜியின் பால்ய நண்பனாக மேஜர் சுந்தர்ராஜனும் பின்னர் நண்பராகும் டாக்டரான அசோகனும் இருதரப்பட்ட நட்பை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார்கள். மேஜர் சுந்தர்ராஜனின் நட்பில் அந்நியோன்யம் கலந்த அடக்கம் இருக்கும். அசோகனின் நட்பில், நெருக்கத்துடன் கூடிய அலட்டல் இருக்கும்.இருவருமே
அசத்தியிருப்பார்கள்.
🌹அதிலும் படத்தில், விழா ஒன்றில், அசோகன் முழு போதையுடன் உண்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவதும் பிறகு அவரை தனியறைக்கு சிவாஜி அழைத்துச் செல்லுவதும்
அப்போது அசோகனிடம், “டேய் ராஜி (ராஜலிங்கம் என்கிற ராஜூவை
ராஜி என்று கொச்சையாக, நம்மூரில் நாம் அழைப்பது போல் அசோகன் கூப்பிடும் அழகே அந்த நட்பின் பலத்தைக் காட்டிவிடும்),
🌹நெருப்புல எரிஞ்சதைத்தான் நீ பாத்தே. நான் விளைஞ்சதையே பாத்தேன்’’ என்று சொல்லிவிட்டு இறக்கிற காட்சி மொத்தமும் அசோகன், தன் நடிப்பால் அப்ளாஸ் வாங்கியிருப்பார்.
சிவகுமாரும் அப்படித்தான். அவரின் ஆரம்பகாலப் படங்களில் மிக முக்கியமான படம் இது. சத்யன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அப்பா என்றே தெரியாமல் சிவாஜியை அவர் ரசித்தும் மதித்தும் பார்ப்பது அழகு. வேலைக்காரரான வி.கே.ராமசாமி கொடுக்கும் தொந்தரவால், வேலையை விட்டுச் செல்லும்போது, சிவாஜி தடுப்பார்.
🌹 ‘’உன் அப்பா ஸ்தானத்துல இருந்து சொல்றேன். போ... போய் வேலையைப்பாரு’’ என்பார். பிறகு சிவாஜிக்கும் செளகார் ஜானகிக்கும் சின்னதான சண்டை பெரிதாக வெடிக்கும் தருணத்தில், சிவாஜி விருட்டென்று கிளம்பி வெளியே செல்வார்.
அப்போது சிவாஜியின் காலை சிவகுமார் பிடித்துக்கொண்டு,
🌹 ‘’அன்னிக்கி அப்பா ஸ்தானத்திலேருந்து சொல்றேன். வீட்டுக்குள்ளே போடான்னு சொன்னீங்க. அதேபோல, நானும் இன்னிக்கு
உங்க பையன் ஸ்தானத்திலேருந்து சொல்றேன்... தயவு செஞ்சு வீட்டுக்குள்ளே போங்க முதலாளி’’ என்று சொல்ல, மனமிரங்கி சிவாஜி உள்ளே செல்ல... பார்த்துக்கொண்டிருக்கிற நமக்குத்தான் துக்கம் தொண்டையை அடைத்துக்கொள்ளும்.
🌹செளகாரின் வைர நெக்லஸை, சிவகுமாரின் பெட்டிக்குள் வி.கே.ராமசாமியும் மனோரமாவும் மறைத்து வைக்க, சிவகுமார்தான் திருடன் என சிவாஜியும் நம்ப, சிவகுமாரை விளாசித்தள்ளுவதைப் பார்க்கும்போதே நமக்கே வலிக்கும்.
🌹 போதாக்குறைக்கு பிரம்பால் அடித்து முடித்துவிட்டும், ஆவேசம் அடங்காமல், எட்டி ஒரு உதைவிடுவார் சிவாஜி. நடுங்கிப்போய் அலறுவது சிவகுமார் மட்டுமா? நாமும்தான்!
🌹மேஜரின் மகளாக, சிவகுமாரின் காதலியாக பாரதி நடித்தார். அவருக்குக் கொடுத்த பணியைச் செம்மையாகவே செய்திருப்பார். ஒவ்வொரு முறையும் சிவகுமாருக்குப் பரிந்து பேசுவதும், நியாயங்களை முதலாளியிடம் எடுத்துரைப்பதும் அழகான கட்டமைப்பு; அசத்தலான நடிப்பு.
🌹செளகார் ஜானகியைத் தவிர வேறு எவரும் இத்தனை அழகுடனும் பணக்கார மிடுக்குடனும் ஆங்கில ஞானம் கொண்ட லேசான செருக்குடன் நடிக்கவே முடியாது.
லேடீஸ் கிளப்பில், ஜி.சகுந்தலாவும் அவரும் பேசிக்கொள்கிற ஒவ்வொரு வசனமும் சரசத்தையும் ஊடலையும் சொல்லும் ரசமானவை!
🌹‘’இதுக்கு மேலே என்ன நடந்துச்சுன்னு சொன்னா, நான் அசடு; கேட்டாக்க நீ பைத்தியம்’’ என்பார் சகுந்தலா.
🌹‘’என் புருஷன் ’ஊட்டிக்கு வேலை விஷயமா போறேன்... நீயும் வா’ன்னு கூப்பிட்டார். பிரிஞ்சிருந்தாத்தான் புருஷாளுக்கு பொண்டாட்டியோட அருமை தெரியும். ஒருவாரம் பிரிஞ்சிருந்தார்.
🌹 ஊட்டிலேருந்து குளுகுளுன்னு வந்தார்.கொழுகொழுன்னு பையன் பொறந்தான்’’ என்பார் சகுந்தலா.
இப்படி படம் முழுக்க வசனங்களால், நம் செவிகளையும் சிந்தனைகளையும் நிறைந்து ஜொலித்து ஜெயித்திருப்பார் ஜாவர் சீதாராமன்.
🌹கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு சிவாஜி நடித்த படங்கள் ஏராளம். ஆனால், கோட் சூட்டைப் பார்த்தே,
‘இது, வசந்தமாளிகை, இது, கெளரவம், இது, பாசமலர், இது, தெய்வமகன், இது, சொர்க்கம், இது, பார்த்தால் பசி தீரும் என்றெல்லாம் சொல்லிவிடுவோம்.
இந்தப் படத்தில்
சிவாஜியின் ’விக்’கும் அழகு. அவர் கோட்சூட் அணிந்திருப்பதும் கொள்ளை அழகு. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘’நம்ம கண்ணே பட்ரும் போல இருக்கு.
🌹 அன்னிக்கி சிவாஜியோட மனைவி கமலாம்மா எத்தனை முறை திருஷ்டி சுத்திப் போட்ருப்பாங்களோ’’

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...