Friday, April 21, 2023

"உய்யக்கொண்டார்"

 *இன்று சித்திரையில், கார்த்திகை "உய்யக்கொண்டார்" என்று நாதமுனிகளால் போற்றப்பட்ட, "ஸ்ரீபுண்டரீகாக்ஷரின்" திருநக்ஷத்திரம்!* (22.4.23)

*ஸ்வாமி தனியன்:*
"நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீபாத பங்கஜே!
ந்யஸ்த ஸர்வபராய அஸ்மத்
குலநாதாய தீமதே!"
*(ஸ்ரீமந் நாதமுனிகளின் திருவடிகளில், தம் சர்வபாரமும் விட்டுச் சரணடைந்த நம் குலநாதரான, புண்டரீகாக்ஷரை நமஸ்கரிக்கிறேன்!*)
நாம் நாளும் சேவிக்கும் திருப்பாவைத் தனியன்..
"அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் –இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை,
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
-
"சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல்பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! – நாடி
நீ வேங்கடவற்கு
என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு"
என்னும் இரண்டு தனியன்களை அருளியவர் உய்யக்கொண்டாரே!
*ஆண்டாள்* என்னும் அற்புதமான திருநாமத்தை முதன் முதலாகப் பாடி அழைத்தவர் உய்யக்கொண்டார்தான்!
பெரியாழ்வாரோ, ஆண்டாளோ அவர்களது பாசுரங்களில் எங்கும் 'ஆண்டாள்' என்று குறிப்பிடவில்லை. ஆண்டாளே தம்மை பட்டர்பிரான் கோதை, விட்டுசித்தன் கோதை, என்றே பாடியுள்ளார்!
உய்யக்கொண்டார் அவதார ஸ்தலம் திருவெள்ளறை!
திருவெள்ளறை புண்டரீகாக்ஷப்பெருமாள் திருநாமம் தான், இவருடைய இயற்பெயர்!
நாதமுனிகள், நம்மாழ்வாரிடம் இருந்து நாலாயிர திவ்யபிரபந்தங்களைப் பெற்றபோது, எதிர்வரும் காலத்தில் ஜகதாசார்யராக அவதரிக்கப் போகும், ராமாநுஜர் விக்ரஹத்தையும் *(பவிஷ்யதாசார்யர்*) உடன்‌ பெற்றார். அந்த விக்ரஹத்துக்கு நாதமுனிகள் திருவாராதனம் செய்து வந்தார். தம் அந்திமக் காலத்தில் அந்த விக்ரஹத்தை உய்யக்கொண்டாரிடம் கொடுத்து, தமக்குப் பேரனாகத் தோன்றப்போகும், யமுனைத்துறைவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார்!
உய்யக்கொண்டாரும் தம் காலத்தில், அந்த ராமாநுஜர் விக்ரஹத்திற்கு திருவாராதனம் செய்து வந்தார்!
ஒரு சமயம், உய்யக்கொண்டாரின் ஆசார்யர் நாதமுனிகள், தம் தேவியரை (அரவிந்தப்பாவையார்) அவர்தம் தாய்வீட்டுக்கு கொண்டு விட்டு வருமாறு, சீடர் உய்யக்கொண்டாரைப் பணித்தார். அவ்வாறு சென்ற உய்யக்கொண்டாரின் மேன்மையை அறியாத அங்குள்ளோர், அவரை வீட்டு‌ முற்றத்தில் ஓர் ஓரத்தில் உட்கார வைத்து பழைய சாதமும், நீர்மோரும் கொடுத்தார்களாம். ஆனால் அவர் அதை ஆசார்ய பரிஜனம் அருளிய உன்னத பிரசாதம் என்று மிகப் பரவசத்துடன் ஸ்வீகரித்தாராம்.
"தத் உச்சிஷ்டம் சுகாவஹம்" என்று!
இதை அறிந்த நாதமுனிகள், உய்யக்கொண்டாரின் நிஷ்டையை மெச்சி *என்னை உய்யக் கொண்டீரோ* என்று வியந்து பாராட்டினார், அதுவே அவரது திருநாமம் ஆயிற்று!
இவருக்கு உய்யக்கொண்டார் என்னும் பெயர் வர, வேறொரு வைபவமும் பிரதானமாகச் சொல்லப்படுகிறது - நாதமுனிகள் அஷ்டாங்க யோகத்தில் வல்லவர்! அஷ்டாங்க யோகம் மூலம் ஒருவர் உடல் உபாதைகள் பற்றி யோசிக்காமல், எந்தத் தடையும் இல்லாமல், எம்பெருமானை அனுபவிக்க முடியும். அந்த யோகத்தின் மூலம் அவர் மோட்சமும் அடைய முடியும்!
நாதமுனிகள், உய்யக்கொண்டாரிடம் அஷ்டாங்க யோகம் கற்றுக் கொள்கிறீரா என்று கேட்க, இவர் *"பிணம் கிடக்க மணம் புணரலாமா?"*
(இழவு வீட்டில் திருமணம் நடக்கலாமா) என்றார். இதன் உள்ளுறைப் பொருள்,
*"அறியாமையால், பலரும் இந்த சம்சாரத்தில் இருந்து கஷ்டப்பட, அடியேன் மட்டும் தனியாக எப்படி பகவத் அனுபவம் பண்ண முடியும்?எனவே, அனைவரும் உய்யும் வழிவகை சொல்லுங்கள்"* என்று வேண்டினாராம்!
நாதமுனிகள் அவருடைய பரந்த உள்ளத்தை வியந்து
*நீரே உலகையும், உலகையுடைய ஸ்ரீமந்நாராயணனையும், அவனைச் சொல்லும் அருளிச்செயல்களையும், அவற்றைப் பெற்ற அடியேனையும்,*
*"உய்யக் கொண்டவர்"*
என்று பாராட்டி, அருளிச் செயல்களையும் அதன் அர்த்தத்தையும், ரஹஸ்யார்த்தங்களையும் முழுதும் அருளினார்!
உய்யக்கொண்டார் திருவெள்ளறையில் எழுந்தருளியிருந்த காலத்தில், கோவிலுக்குப் பின்னால் உள்ள பாறையில் அமர்ந்து தம் சீடர்களுக்கு இவற்றை அனுதினமும் உபதேசித்து வந்தார். அந்தப் பாறை, *உய்யக்கொண்டார் பாறை* என்று அழைக்கப் படுகிறது!
🙏🙏
May be an image of temple
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...