Wednesday, April 26, 2023

அது ஏன் ❓ அவர்களை தனியாக பார்க்க வேண்டும், கூட அமர்ந்து கொண்டு இவரும் பார்த்து இருக்கலாம் அல்லவா.

 சினிமா பற்றிய நல்ல அபிப்ராயம் ஏற்படுத்த தனது தாயாரை கற்பகம் திரைப்படத்துக்கு அழைத்துச் சென்ற அனுபவத்தைக் கூறுகிறார் திரையுலக மார்க்கண்டேயர் சிவகுமார். ....

"கொங்கு தேன்" என்ற நூலில் இருந்து.
---------------------------------------------------------------------
சினிமா 1950-கள்ளே எல்லா ஜனங்களால ஏத்துக்கொள்ள படலே. பீடி, சிகரெட்டு, தண்ணி மாதிரி ஆளை கெடுக்கற விஷயமாத்தான் எங்கம்மாவும் நெனைச்சாங்க.
சினிமாவுல நல்ல விஷயமும் இருக்குது. ஒரேயடியா அதை குத்தஞ் சொல்லக்கூடாதுன்னு எங்கம்மா வாயிலிருந்தே வார்த்தையை வரவழைக்கணும்னு ஒரு ஐடியா பண்ணினேன். டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கிராமியப் படங்கள், குடும்ப சென்டிமென்ட் படங்கள் எடுக்கறதுல கில்லாடி.
கே.எஸ். கோபால கிருஷ்ணன்
‘கற்பகம்’- படம் சூலூருக்கு வந்திச்சு. நல்ல குடும்பக் கதை படம்.
‘‘ஏம்மா நீ எப்பவாவது சினிமா பாத்திருக்கியா?’’
‘‘ஆமா! உங்கய்யன் ஒரு படத்துக்கு கூட்டிட்டு போனாரு. அது ஊமைப் படம்!’’
அப்படின்னா அது 1931-க்கு முன்னாடி.
‘‘சரி. இப்பல்லாம் சினிமா பேசும். ‘கற்பகம்’னு ஒரு படம். சூலூர்ல ஓடுது. பாக்கலாமா?’’
‘‘சரி சரி பாத்தாப் போகுது!’’
அம்மா ரெடி.
மூஞ்சியைக் கழுவி, பொடவைய மாத்தி - மத்தியான சோறு முடிச்சிட்டு சைக்கிள்ல டபுள்ஸ் போட்டு தியேட்டருக்கு கூட்டிட்டுப் போனேன். 2 1/2 மணி ஆகுது. தியேட்டர் ‘விரோச்சு’ன்னு இருக்குது. காக்கா, குருவியைக் காணோம். கிட்ட போனேன். மெயின் கேட்'ல ஒரு தட்டி. ‘பாரதப் பிரதமர் நேருஜி இறந்ததை முன்னிட்டு இன்று தியேட்டர் விடுமுறை!’.
‘அட. ஏன் நிக்கறே? போயி டிக்கெட்டு வாங்கிட்டு வா!’’
‘‘எங்க வாங்குறது, நேரு செத்துப் போயிட்டாராம். அதான் மூடிட்டாங்க...!’’
‘‘விடியா மூஞ்சி படம் பாக்க வந்தா தியேட்டரையும் மூடுவாங்க; குண்டு கூட போடுவாங்க. வா, போலாம்!’’
சைக்கிளில வீடு வந்தோம். ராத்திரி சோறு எறங்கலே. அம்மாவை எப்படியாவது நாளைக்கு கூட்டிட்டுப் போயிடணும்.
‘‘எனக்காக இந்த ஒரு தடவை வா. சரியில்லேன்னா இனி எப்பவுமே நீ சினிமா பக்கம் போக வேண்டாம்!’’
மறுநாள் போய் - டிக்கெட் வாங்கி அம்மா கையில குடுத்து பெஞ்ச்ல உட்கார வச்சுட்டு, ‘‘படம் பார்த்திட்டு, உங்க சின்னம்மிணி (தங்கை) ராமாத்தா ஊட்ல, சூலூர்லயே படுத்துக்கோ, கார்த்தால வந்து கூட்டீட்டுப் போறேன்!’’
ஊர்த் திரும்பும் வழியில் அடைமழை. ஆத்தில தண்ணி தொடை அளவுக்கு. தலைக்கு மேல சைக்கிளை தூக்கி ஆத்தை தாண்டி ஊட்டுக்கு போனேன். மழையா கொட்டு கொட்டுனு கொட்டுது. வேற வழியில்ல. தாவாரத்திலருந்து மழைச்சாரல் தெறிச்சு பாதி திண்ணை ஓதமடிச்சிருந்தது. அந்த பாதித் திண்ணையில பாயை போட்டு துப்புட்டுப் போத்தி படுத்தா குளிரு தாங்க முடியல. வேற வழியில்லாம சாக்குப் பைய எடுத்து -அந்த சாக்குப்பைக்குள்ளே காலை இடுப்பு வரைக்கும் உட்டு அப்பிடியே படுத்துத் தூங்கினேன். விடியக்காலை சூலூர் போயி - சின்னம்மா ஊட்ல இருந்த அம்மாவ பார்த்தேன். நான் பேசறதுக்குள்ளேயே அவங்க ஆரம்பிச்சுட்டாங்க.
‘‘நான் அப்பவே சொன்னே. இந்த சினிமா கினிமா எல்லாம் நமக்கு செரிப்பட்டு வராதுன்னு. கேக்கறியா நீயி?’’
‘‘ என்னாச்சு? டிக்கெட் வாங்கி தியேட்டர்க்குள்ள உட்கார வச்சுட்டுதானே நான் வந்தேன்?’’
‘‘ஆமா நீ உக்கார வச்சுட்டு போயிட்டே. இடைவேளைக்கப்புறம் கே.ஆர்.விசயாளை மாடு முட்டுனப்போ போன கரண்ட்டு ‘இதா வருது, அதா வருது!’ன்னாங்க. விடிஞ்சு வாசல்ல சாணி கூட தொளிச்சுட்டாங்க. கரண்ட் வரவே இல்லை!’’
என்னால இந்த ஏமாற்றத்த தாங்க முடியல. அன்னிக்கு சாயங்காலம் கால்ல விழுந்து, ‘இனிமே எந்த சினிமாவையும் நீ பாருன்னு நான் கேக்கவே மாட்டேன். இதை மட்டும் முழுசா பாத்துடுன்னு கூட்டிட்டு போனேன்.
அம்மா ‘உம்’முன்னு இருந்தாங்க. ஒரு வார்த்தை பேசல. தியேட்டர்ல உட்கார வச்சிட்டு - பயந்திட்டே ஊருக்கு வந்தேன்.
மறுநாள் சூலூர் போனேன்.
‘‘ஏங்கண்ணு! சினிமா நல்லாத்தானே இருக்கு. அப்புறம் ஏன் சனங்க சினிமா பார்த்தா புள்ளைங்க கெட்டு போயிடும்னு சொல்றாங்க?’’ன்னாங்க.
அடாடா! அதைக் கேட்டு நான் எப்படி சந்தோஷப்பட்டேன்னு வார்த்தையில சொல்ல முடியாது. பிற்காலத்துல சினிமாவுல நான் நடிக்க போறேன்னதும் அம்மா மறுப்பு ஏதும் சொல்லாதற்கு ‘கற்பகம்’ - படமும் ஒரு காரணம்.
(பதிவிட்டுள்ள புகைப் படத்தில் சிவகுமார் அவர்களின் தாயார்)
May be an image of 1 person
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...