Wednesday, April 26, 2023

இரட்டைப் பிள்ளையார்.

 நமக்குப் பிள்ளையார் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்தான் பரிச்சயம்.தமிழ்நாட்டில் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்ம வர்மர் பல்லவன் காலத்தில் வடக்கே வாதாபியை வென்று அங்கிருந்து கொண்டு வந்த பின்தான் தமிழர்கள் பிள்ளையாரை வணங்கத் தொடங்கினர்.

பன்னிரு திருமுறைகளில் , காலத்தில் முந்தைய காரைக்கால் அம்மையார் , திருமூலர் தேவ நாயனார் இருவரும் தங்கள் நூல்களில் விநாயகர் துதி செய்ய வில்லை.
ஐந்துகரத்தனை... என திருமந்திரத்தில் வருவதாக சொல்லப்படும் பாடல் திருமூலர் தேவ நாயனார் பாடியது அல்ல..அது பிற்சேர்க்கை என ஆய்வாளர்கள் பதிவு செய்து உள்ளார்கள்.ஆயினும அப்பாடலும் ஒரு அருளாளஎர் பாடியதாகத்தான் இருக்க வேண்டும்.அற்புதமான பாடல்.
திருஞானசம்பந்தர் காலத்திற்குப் பின் யாரொருவர் நூல் எழுதினாலும் விநாயகர் வணங்கிப் பாடல் எழுதிய பின்னரே நூலைத் தொடங்குவர்.
ஆனால் நாம் எழுதத் தொடங்குவதற்கு முன் ' உ ' எழுதுகிறோம் அல்லவா..அது பிள்ளையார் சுழி அல்ல.அது நாத விந்து தத்துவத்தைக் குறிக்கும் குறியீடு.ஒரு சுழி அதன் கீழ் சிறு கோடு அதன் வடிவம் மாறி '.உ ' ஆனது.
நாட்டுக் கோட்டைப் பக்கம் நூறு என்பதை பிள்ளையார் எனச் சொல்வது வழக்கம்.நூறு எனில் ஒரு பிள்ளையார்.இருநூறு எனில் இரட்டைப் பிள்ளையார்.
தமிழில் இரட்டைப் பிள்ளையார் திருப்புகழ் ஒன்று மிகப் பிரபலம்...தமிழர் அனைவரிடமும் மனப்பாடமாக அந்த திருப்புகழைச் சேர்த்தவர் நமது அருள் கடல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
'கைத்தல நிறைகனி ..'எனத்தொடங்கும் திருப்புகழ் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.
முத்தைதரு..திருப் புகழ் பாடியபின் அமைதியான அருணகிரிநாதர் சுவாமிகளை வயலூர் வந்து என்னை தரிசிக்கவும்...என முருகன் உத்திரவு கொடுத்ததும் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு வயலூர் வந்து அத்திருக்கோயில குளத்தில் நீராடி அக்கோயிலில் உள்ள விநாயகர் முன் பாடிய திருப்புகழ் தான் இப்பாடல்.
இப்பாடலின் உயிர் எழுத்துக்களை நீங்கள் பொறுமையாக எண்ணுங்கள்.. சரியாக 200 இருக்கும்.( மெய் எழுத்துக்கள் கணக்கில் வாராது...)அதனால் இந்த திருப்புகழ் இரட்டைப் பிள்ளையார் திருப்புகழ் என்று அழைக்கப்படும்.
இப்பொழுது பாடலைச் சிந்திப்போம் :
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
இப்பொழுது கூட நீங்கள் எண்ணிப் பார்க்கலாம்.சரியாக இருக்கும்.
ஆனால் அவர்கள் எழுத்துக்களை எண்ணிப் பாடல் செய்ய மாட்டார்கள்.
யாப்பு இலக்கணம் , சந்தம் ..முதலிய அத்தனை இலக்கணக் கட்டுக்களுடன் இறைசிந்தனையோடு ஆன்மார்த்தமாக வரும் நிலையில் அது இயற்கையாகவே அமைந்து விடும்.அதனால்தான் அது மந்திரமாகி விடுகிறது.பாடும் நமக்குப் பல நன்மைகளைச் செய்கிறது.
அருணகிரிநாதர் பாடிய பாடல்களில் மிக மிக எளிமையான பாடல்.அத்தனைக் குழந்தைகளும் படித்துப் பயன் பட வேண்டும் என்னும் திரு உள்ளத்துடன் சுவாமிகள் பாடியது.
முதல் யாப்பு என்ன சொல்கிறது ..பாருங்கள். அப்பம் , அவல் ,பொறி , கனி என விரும்பி உண்ணும் யானையின் முகம் கொண்ட விநாயகப் பெருமானை நினைந்துத் தொடங்கும் எந்த ஒரு கல்வியும் அவர்கள் புத்தியில் உறையும் என்கிறார்.
கந்தபுராணம் வள்ளித் தாயார் திருமணத்தின் கண் நிறைவு பெறுவது போல தமது இஷ்ட க்கடவுள் முருகனின் வள்ளித்திருமணத்தை நினைவில் கொணர்ந்து இப்பாடலை முடிக்கிறார்.
கண்களை மூடி.." கைத்தல நிறைகனி.." எனத் தொடங்கிப் பாருங்கள்..வாரியார் சுவாமிகள் ராகத்துடன் பாடும் அந்த இரட்டைப் பிள்ளையார் திருப்புகழ் நம் முன் காட்சியாய்த் தோன்றும்.

All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...