Sunday, April 23, 2023

*மாற்றுக் கருத்தின் மகத்துவம்.*🙏🌹

 எதிர் கருத்து உடையவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல

நமக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அனைவரையுமே நல்லவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது
இந்த வாழ்வு சற்று விசித்திரமானது. நாம் சொல்லும் கருத்துக்கும் நாம் வாழும் வாழ்வுக்கும் யார் துணை நிற்கிறார்களோ அவர்களையே நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறோம். அதிலிருந்து மாறுபட்டு நினைப்பவர்கள் பெரும்பாலும் நமக்கு எதிரியாகவே தெரிகிறார். மாறுபாடு உள்ள கருத்துடையவர்கள் எல்லோரும் நம்மீது அன்பு செலுத்தாதவர்கள் என்று சொல்ல இயலாது. நமக்கு மிகப் பிடித்தவர்கள் நிச்சயமாக நம்மைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்ல மாட்டார்கள். அந்தவகையில் நாம் செல்லும் பாதையில் தவறு என்றால் அதை சுட்டிக் காட்டுபவர்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.நண்பர்களை விட நாம் எதிரியாக கருதும் நபர்கள் அதை மிகச்சரியாக செய்வார்கள்.ஒருமுறை நாம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் போதே நாம் நல்லவர்களிடமிருந்து விலகி வந்து விடுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்ற மனோபாவமே நமது ஒவ்வொரு தவறுக்கும் காரணமாகிவிடுகிறது. அதுவே நமது அடுத்தடுத்த தவறுகளுக்கும் அஸ்திவாரம் போட்டு விடுகிறது.
அனைவரோடும் இணைந்து வாழும் வாழ்வு தான் நமக்கு எப்போதும் இனிய நினைவுகளையும் இனிய நிகழ்வுகளையும் தரும். அந்த வாழ்வு சாத்தியமாக வேண்டும் என்றால் நமது எதிரிகளாக நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களையும் நாம் ஏற்க வேண்டும். மிகப்பெரிய அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் எல்லா துறையில் இருக்கக்கூடிய ஜாம்பவான்கள் அனைவரும் முதலில் தனது நிலை குறித்து எதிரிகள் என்ன நினைக்கிறார்கள் என்று அறியவே ஆசைப்படுவார்கள். அதற்காகவே பல்வேறு காலகட்டங்களில் இந்த மண்ணில் வாழ்ந்த மாபெரும் தலைவர்களும் மன்னர்களும் தனக்கு அருகிலேயே தன் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டும் அமைச்சர்களையும் அமைச்சர்கள் வடிவிலிருந்த நல்ல நண்பர்களை வைத்திருந்தார்கள்.
*இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்*
என்பார் வள்ளுவப் பெருந்தகை.
மாற்றுக் கருத்துக்கு மதிப்பு கொடுக்காதவர்கள் இந்த உலகிலே மிகப்பெரியதாக சாதித்ததாக வரலாறுகள் இல்லை. மாறாக அவர்களின் உயரத்திலிருந்து சரிந்து விழுந்து இருக்கிறார்கள். நல்லவற்றை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் வந்தால் மட்டுமே நாம் மனிதர்களாக இருக்க முடியும். அதன் வழியாகவே இந்த சமூகத்தை வழிநடத்தும் தலைவராக முடியும்.
ஆதரவாகப் பேசும் அனைவரையுமே நண்பர்கள் என்று நாம் எண்ணிவிடக் கூடாது. நிச்சயமாக அவர்களில் நல்ல நண்பர்களும் இருப்பார்கள். ஆனால் அவர்களில் பலர் நாம் வகிக்கும் பதவிக்காகவும், நாம் வைத்திருக்கும் பணத்திற்காகவும் மட்டுமே இருந்தார்கள் என்று சொன்னால் நிச்சயமாக அவர்களை நண்பர்கள் என்ற வட்டத்திற்குள் நாம் கொண்டு வர இயலாது. அவர்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்தான். துரோகிகள் என்று அழைக்கப்பட வேண்டும். அவர்களின் பேச்சை நாம் கேட்கத் தேவையில்லை.
ரத்தம் வருகிறது என்று சொன்னால் காலில் குத்திய முள் வெளியேறிவிட்டது என்று சொல்வார்கள் கிராமங்களில். அதுபோலவே நமது கருத்து உடைகிறது என்று சொன்னால் அந்தக் கருத்தில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அந்த தவறுகளை திருத்திக் கொண்டு நாம் மீண்டும் சொல்லும் போது நிச்சயமாக அந்த சொல்லுக்கு மிகப்பெரிய வலிமை இருக்கும். அந்தச் சொல்லே பகைவர்களையும் நேசிக்க வைக்கும்.
வெல்லும் சொல்லைச் சொல்வோம்.🙏🌹

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...