Wednesday, April 19, 2023

'சனாதன தர்மம்' என்றால் என்ன?

 

இதை நான் புரிந்து கொண்ட வரையில், எளிய தமிழில் தர முயற்சித்திருக்கிறேன். நான் எழுதியதில் பிழை ஏதேனும் இருப்பின், தாராளமாக சுட்டிக் காட்டலாம்.

'சனாதன தர்மம்' என்பதன் பொருள், 'தோற்றமும், முடிவும் இல்லாத அறநெறி' ஆகும். அது, தொன்று தொட்டு வருகின்றது. ஆதலால், அதை ஆங்கிலத்தில் 'The Eternal Truth' என்கிறார்கள்.

'அறம்' என்பதன் அர்த்தம், 'நன்மையையும், தீமையையும் விரிவாக எடுத்துரைத்து, அவற்றில் நன்மை தரும் செயல்களைப் புரியத் தூண்டுவது'. 'நெறி' என்றால், 'பாதை' அல்லது 'வழி'. ஆகவே, 'அறநெறி' என்பதை எளிமையாக 'நல்வழி' என்று சொல்லலாம். அவ்வழியில் செல்வது ஒருவனை உயர்த்தும். அவனால் பிற உயிர்களுக்கும் மேன்மை உண்டாகும்.

முன்னேகும் பாதையைத் தூய தமிழில் 'ஆறு' என்றும் சொல்வதுண்டு. 'அறத்தாறு இதுவெனல் வேண்டா' என்னும் திருக்குறள் உங்கள் நினைவுக்கு வருகிறதா?

ஒவ்வோர் உயிர்க்கும் ஓர் அறம் இருக்கிறது. இருந்தாலும், நாம் எப்போதும் மானுடர்களைப் பற்றி மட்டும் சிந்திக்கிறோம்; பேசுகிறோம். (மனம் உடையவன், 'மானுடன்' அல்லது 'மனிதன்' என அழைக்கப்பட்டான்). பிற உயிர்களுக்கு, 'மனம் என்பது கிடையாதா?' என்கிற கேள்வி இப்போது உங்கள் உள்ளத்தில் எழுகிறதா? பிற உயிர்களுக்கும் - மரம், செடி, கொடிகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் ஒவ்வொன்றுக்கும் - சிந்திக்கும் திறம் இருக்கிறது என இன்றைய விஞ்ஞானமே ஒப்புக் கொள்கிறது. ஆயினும், அவற்றின் சிந்தனையின் வீச்சும், பரப்பும் ஓர் எல்லைக்குள் அடங்குபவை. மனித மனம் போல, அவற்றின் மனம் பிரபஞ்சம் தழுவியதன்று.

சரி, இந்த தர்மத்தை நாம் 3 ஆகப் பிரிக்கலாம். அவை, எண்ணம் (Thought), சொல் (Word) மற்றும் செயல் (Deed) ஆகும். இம்மூன்றும் முறையே மனம், பேச்சு, செயல் அல்லது நடத்தை (Conduct/Behaviour) ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டவை. எண்ணமே, பேச்சாகவும், எழுத்தாகவும் வெளிப்படுகிறது. எண்ணமும், பேச்சுமே ஒருவனுடைய செயல் அல்லது நடத்தையைத் தீர்மானிக்கின்றன. ஆகவே, இந்த மூன்றிலும் ஒருவன் அறநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

முன்னொரு காலத்தில் அதாவது ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த அறநெறியே உலகம் முழுவதும் பரவி நிலைகொண்டிருந்தது. அப்போது, ஏனைய மதங்கள் ஒன்று கூட உலகின் எப்பகுதியிலும் இல்லை. அதனால், அப்போது சனாதன தர்மத்துக்குத் தனியாகப் பெயர் யாரும் வைக்கவில்லை.

பிற்காலத்தில் பாரதத்துக்கு வந்த வெளிநாட்டவர்கள் - குறிப்பாக பாரசீக நாடுகள், ஐரோப்பியக் கண்டம் ஆகியவற்றில் இருந்து இங்கே வந்தவர்கள், அதற்கு 'இந்து மதம்' என்ற பெயரைக் கொடுத்தார்கள். அதாவது, சிந்து நதி ஓடும் பிரதேசத்தை ஒட்டி வாழ்பவர்களை, அவர்கள் இந்துக்கள் என அழைத்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையும், 'இந்து மதம்' என வழங்கப்படலாயிற்று. அதுவே இன்றும் புழக்கத்தில் இருக்கிறது.

வேதங்களை நாம் எல்லாவற்றுக்கும் அடிப்படையாகச் சொல்கிறோம். ஆனால், சனாதன தர்மம், வேதங்களுக்கும் முற்பட்டது. வேதங்கள் என்பவை, தெய்வ வாக்குகள் (verbal manifestation). தெய்வ அருள் பெற்ற நிலையில், பல முனிவர்கள் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகளின் தொகுப்பே வேதங்கள் ஆனது. நாம் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்கு பெரும் பகுப்புகளாக அவற்றைப் பிரித்து வைத்திருக்கிறோம். இந்நான்கும் ஒன்றுக்கொன்று முரணானவையோ, மாறுபட்டவையோ அல்ல. ஒன்றோடொன்று தொடர்புடையவை தாம்.

இவற்றில் ரிக் வேதத்தை இருப்பதற்குள் பழைமையானது என்று சொல்கிறார்கள். இதன் காலம் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பார்கள். அது சர்சைக்குரியதே. அது இன்னும் பழைமையானது என்று நன்கு கற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அது பெரிய விஷயம் இல்லை.

வேதங்களுக்கு என்று தனி மொழி கிடையாது. அவற்றுக்கு எழுத்தும் (Script/Lipi) கிடையாது. அவை ஒலிகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. பிற்காலத்தில் தோன்றிய சமஸ்கிருதத்துக்கும், வேத பாஷைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. வேதங்கள், செவி வழியாகவே ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அதனால் அதற்கு, 'சுருதி' (Shruti) என்றும், தூய தமிழில் 'எழுதாக் கிளவி' என்றும் பெயர். அதன் காரணமாக, அவற்றில் ஒரு சில திரிபுகளும், மாற்றங்களும் உண்டாகி இருக்கின்றன. பூகோள ரீதியிலும், அந்த வேற்றுமைகள் தென்படுகின்றன. இருப்பினும், அது பற்றிய ஆராய்ச்சி இப்போது நமக்குத் தேவை இல்லை.

வேதங்களின் 4 கூறுகள், சம்ஹிதைகள், ஆரண்யகங்கள், ப்ராம்மணங்கள், உபநிடதங்கள் ஆகியவை. சம்ஹிதைகள், மந்திரங்களையும், அவை ஒவ்வொன்றின் பலன்களை எடுத்துரைப்பவை. ஆரண்யகங்கள், தனி மனிதன் அல்லது குடும்பத்துக்கான ஹோமம், தினசரிக் கடன்கள் (நித்திய அனுஷ்டானங்கள்), பொது நலனுக்காகச் செய்யப்படும் வேள்வி முதலான பிற சடங்குகள் ஆகியவற்றையும், அவற்றில் நாம் நீர் வார்த்து அல்லது நெருப்பு (அக்னி) மூட்டி, கொடுக்கும் பொருள்கள் ஆகியவற்றைச் சொல்பவை.

வேதங்களின் கடைசி அங்கமாக எழுந்தவை, உபநிடதங்கள் (Upanishads). அதனாலேயே அவை 'வேதாந்தம்' என அழைக்கப்பட்டன. உபநிடதம் என்பதன் அர்த்தம், 'அருகமர்ந்து கற்பது' ஆகும். உபநிடதங்கள், ஓர் ஆசிரியனுக்கும், மாணவனுக்கும் இடையே நிகழும் சொற் பரிமாற்றத்தை, உரையாடல்களாகவும், கேள்வி-பதில் வடிவிலும் எடுத்துரைக்கின்றன.

மொத்தம் 200-க்கும் மேற்பட்ட உபநிடதங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், குறைந்தது 108 உபநிடதங்கள் உள்ளன என்பதை அனைவரும் ஏற்கிறார்கள். உபநிடதங்கள், உயர்ந்த தத்துவத்தைச் சுருக்கமாக எடுத்துரைப்பவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் அடிப்படைச் சந்தேகங்களைத் தீர்ப்பவை. 'உயிர்கள் எவ்வாறு தோன்றின?', 'உயிர்களையும், இந்தப் பேரண்டத்தையும் படைத்தவன் யார்? அவன் எங்கே இருக்கிறான்?', 'வாழ்க்கையின் நோக்கம் என்ன?', 'இறைவனை அடையும் வழிகள் யாவை?' என்பன போன்ற பல சிக்கலான கேள்விகளுக்கு உபநிடதங்கள் அருமையாக விடையளிக்கின்றன.

நாம் அடிக்கடி உபயோகிக்கும் 'அஹம் பிரும்மாஸ்மி' (நான் பிரும்மமாய் இருக்கிறேன்) என்னும் மஹாவாக்கியம், பிரஹதாரண்ய உபநிஷத்தில் வருகிறது. 'தத்வமஸி' (நீ அதுவாக இருக்கிறாய்) என்னும் மஹாவாக்கியம், சாந்தோக்ய உபநிஷத்தில் வருகிறது. இவை இரண்டும், அத்வைத தத்துவத்தை விளக்கும் அற்புதமான சொற்றொடர்கள் ஆகும்.

உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகிய மூன்றும் சேர்ந்து, 'பிரஸ்தானத் த்ரயம்' என அழைக்கப்படுகின்றன. இவை மூன்றும், சனாதன தர்மத்தின் 'உயிர்நாடி' ஆகும். இவற்றைப் படித்துப் புரிந்து கொண்டவன், சனாதன தர்மத்தை முழுவதும் அறிந்தவன் ஆகிறான்.

அடுத்ததாக, புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை வருகின்றன. புராணங்கள், வெவ்வேறு வடிவத்தில் விளங்கும் இறைவனின் பெருமையையும், திருவிளையாடல்களையும் கதை வடிவில் விவரிக்கின்றன. இதிகாசங்கள், மண்ணில் மானிட உருவெடுத்து வந்த இறைவனின் அவதாரங்கள், தீமையை அழித்து, நன்மையைக் காத்து, நீதியை நிலைநாட்டியதை நீண்ட செய்யுள் (காவிய) வடிவில் விவரிக்கின்றன. அவை உண்மை வரலாறும், கற்பனையும் கலந்து புனையப்பட்ட கதைகள். அவற்றில் பல நீதிகளும், அறிவுரைகளும், ஒழுக்கமும், நன்னெறிகளும் விளக்கப்படுகின்றன; நமக்குப் பாடங்கள் புகட்டப்படுகின்றன.

இறைவனை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை, கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் ஆகியவை.

'கர்ம யோகம்' என்பது, 'நீ பாட்டுக்கு உன் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டே இரு. அதன் பலனை ஆண்டவனிடம் விட்டு விடு' என்பதை எடுத்துச் சொல்வது. இதன் பெருமை, பகவத் கீதையில் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

'கர்மா' என்பதற்கு 'வினை புரிதல்' என்று பொருள். ஒருவனுடைய கர்மாவைப் பொறுத்து, அவனுக்குப் பிறவிகள் அமைகின்றன என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மறுபிறவிக்கான அல்லது பிறவிச் சுழற்சிக்கான முழுமையான விளக்கத்தை, இந்து மதத்தைத் தவிர வேறெங்கும் காண இயலாது.

'பக்தி யோகம்' என்பது இறைவனிடம் செலுத்தும் அன்பையும், பல்வேறு பெயர்களில் விளங்கும் அவனை ஓயாமல், ஒழியாமல் மனதால் சிந்தித்து, வாயால் பேசி மகிழ்வதும், அவன் பெருமையைப் பல்வேறாகப் பாடிப் பரவுவதும், பல புண்ணியத் தலங்களுக்குப் போய் ஆண்டவனை தரிசிப்பதும், இறுதியில் அவன் திருவடியை அடைய விரும்புவதும் ஆகும். இதில் முக்கியமானது, 'எதுவும் எனதில்லை; நீயன்றி நானில்லை' என இறைவனிடம் பூரண சரணாகதி அடைவதாகும். பக்தி யோகத்தை, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதமும், மத்வாச்சாரியாரின் த்வைதமும் வலியுறுத்திப் பேசுகின்றன. இவ்விரண்டு கோட்பாடுகளிலும், "ஜீவாத்மா வேறு; பரமாத்மா என்பது வேறு. ஆனால், ஜீவாத்மாவின் நோக்கம் பரம்பொருளின் திருவடியை அடைவதே" என்பது தீர்க்கமாக வலியுறுத்தப்படுகிறது.

'ஞான யோகம்' என்பதில், ஆழ்நிலைத் தியானம், தவம் ஆகியவை அடங்கும். இதில், வெளியே இருப்பதாகக் கருதும் இறைவனை நமக்குள்ளே தேடுவதும், கண்டறிவதும், அவ்வாறு அறிந்தபின், அவனோடு ஒன்றாகிக் கலந்து விடுவதும் அடங்கும். இதை, ஆதிசங்கரர் அத்வைதம் (இரண்டற்றது) என்கிற கொள்கையின் வாயிலாக 'ஜீவாத்மாவும், பரமாத்மாவின் ஒரு வடிவமே' என்று நிலைநாட்டுகிறார்.

மனிதனின் வாழ்க்கை நிலையை, 4 கட்டங்களாகப் பிரித்தார்கள். அவை, திருமணத்துக்கு முந்தைய பருவமான பிரம்மச்சரியம், இல்லற வாழ்க்கையான கிருஹஸ்தம், இல்லற வாழ்வில் இருந்து கொண்டே பற்றற்ற நிலையை எய்துதல் என்கிற கட்டத்தைச் சொல்லும் வானப்பிரஸ்தம், ஆசைகள், இன்பங்கள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கடந்த துறவு நிலையை விவரிக்கும் சந்நியாசம் ஆகியவை. இவை, அதே வரிசையில் அமைபவை.

அவற்றுக்கேற்ப, வாழ்க்கையை 4 பகுதிகளாகப் பிரித்தார்கள். 'புருஷார்த்தங்கள்' என்று சொல்லப்படும் அவை, தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகியவை ஆகும். தமிழிலே சொல்ல வேண்டுமாயின், அறம், பொருள், இன்பம், வீடு என்று 4 பிரிவுகளாக வாழ்க்கையின் நோக்கத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது, ஒவ்வொரு மனிதனும், அறம் செய்து, அதன் மூலம் பொருளை ஈட்டி, இல்வாழ்க்கை வாழ்ந்து இன்பங்களை அனுபவித்து, கடைசியில் வீடுபேறு என்னும் மறுபிறப்பற்ற நிலையை எய்த வேண்டும் என்பதை உணர்த்துவதே இந்நான்கும் ஆகும். பிறவித் தளையில் இருந்து விடுதலை அடைந்த ஆன்மா, இறைவனுடன் ஒன்று கலக்கிறது என்பதே இவை தெரிவிக்கும் செய்தி ஆகும்.

உலகம் முழுவதையும் ​'வசுதெய்வ குடும்பகம்'​ என்று சனாதன தர்மம் போற்றுகிறது. அதையே கணியன் பூங்குன்றனார், 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்று தன் புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண்: 192) குறிப்பிடுகிறார்.

சனாதன தர்மம் என்பது எல்லை இல்லாதது. அதை முழுவதும் விவரிப்பதும், சரியாகப் புரிந்து கொள்வதும் மிகப் பெரிய சவால் ஆகும். ஏதோ, என் சிற்றறிவுக்கு எட்டிய வரை முயன்று பார்த்திருக்கிறேன்.

'மனுதர்மம்' என்பதைப் பற்றி, விரிவாக வேறு பதிவிடுகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...