நடிகர் திலகத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த
புதிய பறவை வெளியான போது, எம்.ஜி.ஆர் தேவர் பிலிம்சின் தொழிலாளி படத்திலே நடித்துக் கொண்டிருந்தார்.
புதிய பறவையை எல்லாரும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அவர் தியேட்டருக்குப் போய் அந்தப் படத்தைப் பார்க்க அவர் முடிவு செய்தார்.
புதிய பறவை கதாசிரியர் ஆரூர்தாசை அழைத்த சின்னப்பா தேவர்,
”இன்று எம்.ஜி.ஆர் நீ வசனம் எழுதியிருக்கிற புதிய பறவை படத்தை பார்க்கப் போகிறார்.
நீ இங்கேயிருந்தால் உன்னைக் கூட வைச்சிக்கிட்டு எப்படிப் படம் பார்க்கறதுன்னு அவர் யோசிப்பாரு. அதனாலே படப்பிடிப்பு முடிவதற்கு முன்னாலேயே நீ கிளம்பிவிடு” என்று சொல்ல,
நீங்கள் சொல்வது சரிதான். நான் உங்கள் கூட இருந்தால் உங்களால் படத்தைப் பற்றி மனம் திறந்து பேச முடியாது. அதனால் நான் இப்போதே கிளம்புகிறேன்” என்று அன்று மதியமே படப்பிடிப்பு தளத்திலிருந்து
ஆரூர்தாஸ் கிளம்பிவிட்டார்
மறுநாள் காலை படப்பிடிப்பிலே ஆரூர்தாஸ் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது
வாழ்த்துகள்
என்று சொல்லியபடியே அவரை எம்.ஜி.ஆர் வரவேற்றார். அவர் எதற்காக வாழ்த்துகிறார் என்று தெரிந்த போதிலும்,
‘எதுக்காக அண்ணே வாழ்த்து?” என்று ஆரூர்தாஸ் கேட்டபோது,
‘நேத்து ராத்திரி நானும் அம்மாவும் புதிய பறவை படம் பார்த்தோம். தம்பி சிவாஜி ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்.
விசுவோட இசை,
கண்ணதாசனோட பாட்டு எல்லாமே நல்லாயிருக்கு” என்று சொன்ன எம்.ஜி.ஆர், படத்தில் உங்க ஹீரோயின் ரொம்ப அழகாக இருக்கிறார்” என்றார்.
சரோஜாதேவி நடித்த பல படங்களுக்கு ஆரூர்தாஸ் தான் வசனம் என்பதால் சரோஜாதேவியைப் பற்றி அவரிடம் குறிப்பிடும் போதெல்லாம்
‘உங்க ஹீரோயின்’ என்று சொல்வது எம்.ஜி.ஆரின் வழக்கம்.
அதற்குப் பிறகு சவுகார் ஜானகியின் நடிப்பைப் பாராட்டிய அவர்,
“அவங்க நடிப்பிலே ஒரு ஸ்டைல் இருக்கு. அவங்களுடைய அறிமுகப் பாடலும், பின்னர் அதே பாடலை அவர்கள் திரும்பப் பாடும் கட்டமும் நன்றாக அமைந்திருக்கு” என்று கூறியிருக்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வெகுவாக பாராட்டிய எம்.ஜி.ஆர்,
“படத்தின் கிளைமாக்ஸ் இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி ரொம்ப வித்தியாசமாக இருந்தது.
கிளைமாக்சில் அந்த சஸ்பென்ஸ் உடைகின்ற காட்சியில் உங்களது வசனம் ரொம்பவும் பிரமாதமாக இருந்தது“ என்று எம்.ஜி.ஆர் சொன்னவுடன்,
அவரது காலில் விழுந்து வணங்கிய ஆரூர்தாஸ் அப்போது மானசீகமாக சிவாஜிக்கு தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஒரு கதாசிரியரின் சொல்லுக்காக மீண்டும் அத்தனை நட்சத்திரங்களையும் செட்டுக்கு வரச்சொல்லி அழைத்து அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து கொடுத்த சிவாஜியின் பெருந்தன்மையை நினைத்துப் பார்த்தபோது ஆரூர்தாசின் கண்களில் அவரையும் அறியாமல் ஈரம் கசிந்ததது.
No comments:
Post a Comment