பெரியவர் ஜெயராமன் 80 வயதில் காலமாகி 13 நாட்கள் ஆகிவிட்டன ஈமச்சடங்குகள் எல்லாம் அவர்கள் சம்பிரதாயப்படி சிறப்பாக நடந்தன.
அவர் மனைவி லட்சுமிக்கு 70 வயது வருத்தமாக கூடத்தில் அமர்ந்து இருந்தாள்.
சுற்றிலும் இவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் மூன்று பெண்களும் அமர்ந்திருந்தனர் எல்லோரும் அனேகமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். பிள்ளைகள் இருவருக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் மூன்று பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது எல்லோரும் நல்ல நிலைமையில் தான் இருக்கிறார்கள் குறை ஏதுமில்லை.
பெரியவர் உயிருடன் இருந்தபோது தன்னுடைய நிலபுலன்கள் வீடுகள் எல்லாவற்றையும் சரியாக அவரவர் பெயரில் எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்.
அதனால் யாருக்கும் மனஸ்தாபம் எதுவும் இல்லை. மிச்சமிருப்பது அம்மாவின் பட்டுப் புடவைகளும் சமையல் பூஜை பாத்திரங்களும் தான். அம்மா தன்னுடைய பட்டுப் புடவைகளில் நல்லதாக இருப்பவற்றை ஆளுக்கு இரண்டு இரண்டாகப் பிரித்துக் கொடுத்து விட்டாள் மூத்த இரண்டு பெண்களுக்கும் பூஜை பாத்திரங்கள் மேல்தான் கண். ஏனென்றால் அவை அனைத்தும் வெள்ளியில் ஆனவை வெள்ளி குடம் சொம்பு கும்பா உருண்டை சொம்பு கிண்ணங்கள் பெரிய ட்ரெ சின்ன தட்டுகள் கிண்ணங்கள் சந்தன பேலா குங்குமச்சிமிழ் என்று நிறைய பாத்திரங்கள்.
மூத்த பெண்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு வெள்ளிப் பாத்திரங்கள் பெண்களுக்கு தான் என்று அம்மாவிடம் சொல்லி விடலாம் என்று திட்டமிட்டனர்.
கடைசி பெண் நிர்மலாவுக்கு பாத்திரங்களிலோ புடவையிலோ ஆசையே இல்லை அவள் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
பாத்திரங்களைப் பற்றி பேச்சு வந்த பொழுது அம்மா தீர்மானமாக சொல்லிவிட்டாள் இந்த பாத்திரங்கள் வீட்டின் மருமகள் இருவருக்கும் பெண்கள் உங்களுக்கும் சேர்த்து தான் அதனால் சரி சமமாக ஓரளவிற்கு பிரித்துக் கொள்ளலாம் இதைக் கேட்டவுடன் பெண்கள் இருவருக்கும் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது இருந்தாலும் என்ன செய்யவது அண்ணிகளுக்கும் கொடுத்து தான் ஆக வேண்டும்.
உருப்படியாக எல்லாம் சுமுகமாக பிரித்தாகி விட்டது. கடைசியில் அம்மா நிர்மலாவிடம் உனக்கு எதுவுமே வேண்டாமா? ஏன் அப்படி சொல்கிறாய் என்று கேட்டாள்.
அதற்கு நிர்மலா சொன்னது வேண்டும் எனக்கும் ஒரு சில பொருட்கள் வேண்டும் என்ற உடன் எல்லோரும் ஆவலாக அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
நிர்மலா சொன்னது அம்மா எனக்கு அப்பாவுடைய ஸ்லோகப் புத்தகங்கள் அவர் கைப்பட எழுதிய நோட்டுகள் எல்லாம் வேண்டும் நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் அதனால் இவையெல்லாம் பெரிய பொக்கிஷமாக எனக்குத் தோன்றுகிறது நான் என் குழந்தைகளுக்கு இந்த புத்தகங்களை வைத்து எல்லா சத்தி விஷயங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்றாள் அவள் இவ்வாறு கேட்டவுடன் அம்மாவுக்கு மிகவும் பெருமிதமாக ஆகிவிட்டது.
எவ்வளவு உயர்ந்த மனசு உனக்கு நிர்மலா நாங்கள் இருவரும் உபயோகித்த பெரிய ட்ரங்க் பெட்டியில் எல்லா புத்தகங்களையும் அடுக்கி வைத்திருக்கிறேன் அப்படியே நீ எடுத்துக் கொண்டு போ உன் பசங்கள் இவையெல்லாம் நன்றாக படித்து முன்னுக்கு வரட்டும் என்னுடைய ஆசீர்வாதங்கள் என்று மனநிறைவோடு சொன்னாள்.
மற்ற நால்வருக்கும் ஒன்றுமே பேசத் தோன்றவில்லை.
அம்மாவும் சிரித்துக் கொண்டே அவரவர் விருப்பம் நிறைவேறியதா என்று கேட்டால் யாரும் பதிலே பேசவில்லை. பேசுவதற்கு என்ன இருக்கிறது எல்லோருடைய மனதும் தான் தெரிந்து விட்டது.
நிர்மலாவுக்கு ஒரே சந்தோஷம் தன் அப்பாவின் நினைவுகளை சுமந்தபடி புத்தகங்கள் வைத்திருந்த ட்ரங்க் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். அவள் விருப்பமும் நிறைவேறி விட்டதல்லவா?

No comments:
Post a Comment