Monday, November 13, 2023

இதுவொரு கண்துடைப்பு..

 ஜெகத்ரட்சகன் மற்றும் வேலு அவர்களின் வீடு மற்றும் அலுவலகம் சார்ந்த ரெய்டு என்பது தலா ஒரு வார பரபரப்பாக இருந்தது. ஒரு பக்கம் இவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். மறுபக்கம் இதுவொரு கண்துடைப்பு.. மொத்தத்தில் இவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்பது போன்ற வெகுஜனப் பார்வையை நண்பர்களிடம் பேசிய போது உணர்ந்து கொண்டேன். இந்தத் துறையில் இருக்கும் நண்பரிடம் கேட்ட போது வேறு சில தகவல்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

1. ஜெகத் மற்றும் வேலு சமாச்சாரங்களைக் கோப்பு வடிவில் அலுவலக ரீதியாக மாற்றுவதற்கு மட்டும் ஒரு வருடம் ஆகலாம். காரணம் நம்மிடம் ஆட்கள் இல்லை. புதிய ஆட்களை வருடந்தோறும் சேர்ப்பதும் இல்லை. பணி ஓய்வு என்றால் அந்தப் பதவியில் மாநில அரசு மத்திய அரசு எதுவாக இருந்தாலும் உடனே ஆட்களை நியமிப்பது இல்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட நேற்று மத்திய அரசு நோக்கி அலறினார்கள். மேலேயிருந்து கீழே வரை நீதித்துறையில் தேவையான ஆட்களை மத்திய அரசு நியமிக்கவில்லை. இதற்குள்ளும் அரசியல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு துறையிலும் ஆட்கள் பற்றாக்குறை என்பது வேலைகளைத் தாமதப்படுத்தும். குற்றம் செய்துள்ளவர்களுக்கு இவையெல்லாம் சாதக அம்சங்கள்.
2. கோப்பு முதல் அடுத்தடுத்து ஆறு கட்டங்கள் நகரும். இறுதியாக ட்ரிப்யூனல் (மேல் முறையீடு) வரைக்கும் செல்லும். இதற்குரிய காலகட்டம் குறைந்தபட்சம் 2 முதல் 4 ஆண்டு காலம். இதுவரையிலும் மொத்தம் 5 ஆண்டு காலம்.
3. பைன் கட்டச் சொல்லாம். கேஸ் வேறு வழியில் இழுக்கலாம். அரசியல் பேரங்கள் நடக்கலாம். ஆட்சி மாற்றங்கள் நிகழும் போது பாதை மாற வாய்ப்புண்டு. அதிகாரிகள் காத்திருக்கலாம். புதிய அதிகாரிகள் பொறுப்புக்கு வரலாம். எண்ணங்கள் நோக்கங்கள் மாறலாம். மேலும் சில வருடங்கள்.
4. ஓர் ஆட்சிக்கான ஐந்தாண்டு காலம் எப்படியும் இது இயல்பாக இழுத்துக் கொண்டு செல்லும்.
5. அப்படியெனில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆனந்தம் தானே என்று கேட்கலாம். இல்லை. சொத்துக்களை முடக்கும் போது அது துருப்பிடிக்கத் தொடங்கும். வங்கிக் கணக்கை முடக்கும் போது பரிவர்த்தனைகள் நிற்கும்.
தொழில் நிற்கும். நிறுவனங்கள் நிர்க்கதியாகும். வாடிக்கையாளர்கள் ஒதுங்கிச் சென்று விடுவார்கள். வருமான வரித்துறை தொடர்ந்து கேள்விக் கணைகளைத் தொடுக்கும் போது அது சார்ந்த விற்பனர்கள் பதில் அளிப்பார்கள் என்றாலும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டுத்தான் பதில் அளித்தாக வேண்டிய சூழலில் இவர்களுக்கு நாள்தோறும் இது பெரிய தலைவலியை உருவாக்கும். வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது. விதிக்கப்பட்ட தண்டத் தொகை கட்ட வேண்டும். தண்டத் தொகைக்கு கூடுதல் தண்டத் தொகை கட்ட வேண்டும். அதுவும் வெள்ளையில் கட்ட வேண்டும். அது வந்த வழி சரியாக கணக்கு காட்டியிருக்க வேண்டும். வேறு எவராவது கட்டினால் அவர்கள் ஜாதகம் நோண்டப்படும். சட்டதிட்டங்கள் அனைத்தையும் கடைப்பிடித்தாலும் அவ்வளவு சீக்கிரம் வியூகத்திலிருந்து வெளியே வந்து விட முடியாது.
சிறையிலிருந்து சசிகலா முதலில் எளிதாக வெளியே வந்து விட்டார். பிறகு குறிப்பிட்ட நாள் கழித்துத் தான் இளவரசி வெளியே வந்தார். ஆனால் சின்ன எம்ஜிஆர் உள்ளே தான் இருந்தார். ஒரு வருடம் இருக்கும் என்றே நினைக்கின்றேன். அந்த நீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியிருந்த தொகை கட்டப்பட்ட பின்பு தான் வெளியே வந்தார். அவர் குடும்பத்தில் உள்ள உறவுக்கூட்டத்தில் ஒரு நாதி கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை.
இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இனி வரும் காலகட்டத்தில் ஜெகத் மற்றும் வேலு இருவரும் சாகவும் முடியாது. வாழவும் வழியில்லை என்கிற தினசரி வாழ்க்கை கடந்தாகவேண்டிய கஷ்டமான காலகட்டம். கட்டங்களில் பகவான் தலையில் அமர்ந்து இருப்பார். கரூர் கோவை பக்கம் வேலு அய்யா ஓய்வு எடுக்க வர முடியாது. வந்தாலும் மூடு வேலை செய்ய முடியாது. அங்கிள் பற்றி யாரும் பேட்டியளிக்க மாட்டார்கள்.
6. செந்தில் பாலாஜியை இறுக்கியது போல இவர்கள் இருவரையும் கொப்பறையில் போட்டு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்திப் பார்க்கலாம் என்று மத்திய அரசு வேறு சில காரணங்களால் கொள்கை ரீதியான முடிவெடுக்கும் பட்சம் இறுதிக் கட்டத்தில் மொத்தக் கோப்புகளும் என்போர்ஸ்மெண்ட் துறை மக்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். அது ரோலர் கோஸ்டர் போல ஏற்றி விட்டு வேறு வகையில் வயிற்றில் உள்ளது என்னன்ன என்பதனை ஆராய்ச்சி செய்யத் தொடங்குவார்கள். வேகத்தைக் கூட்டும் போது அலறும் சப்தத்தில் எத்தனை டெசிபல் உள்ளது என்பதற்காகக் கோப்பு தயாரிப்பார்கள்.
அடுத்த ஐந்தாண்டு காலத்தில் மோடி எத்தனை ஆண்டு காலம் பதவியில் இருப்பார். அவருக்குப் பின்னால் இயற்கை யாரை அனுமதித்துள்ளது என்பது மில்லியன் டாலர் கேள்வி.
கோப்புகள் உறங்கும். ஆனால் இவர்களும் இனி வரும் காலங்களில் நிம்மதியாக உறங்க வாய்ப்பில்லை. இரத்தம் உறிஞ்சப்பட்ட உடம்பினை வெளியேயிருந்து பார்க்கும் போது ஆரோக்கியமாக இருப்பதாகவே தோன்றும்.
ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் அவஸ்த்தைகளை நீங்கள் ஐஆர்எஸ் படித்து அந்த துறையில் இருந்தால் புரிய வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...