கேபிள் ரெய்டு அதிரடிகள்!
போகிற போக்கைப் பார்த்தால், அழகிரி வட்டாரத்தில் யாரையும் விட்டு வைக்க மாட்டார்களோ?
அழகிரி மகன் துரை தயாநிதியால் நடத்தப்படும் ராயல் கேபிள் விஷனில் (ஆர்.சி.வி.) அதிரடி ரெய்டு அடித்த போலீஸார், அங்கு உருப்படியாக எதுவும் சிக்காததால், வேறு ரூட்டில் துரை தயாநிதிக்கு செக் வைக்கத் தயாராகிறார்கள்!
மூன்று வருடங்களுக்கு முன்பு மாறன் சகோதரர்களோடு மோதல் வெடித்த போது, சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக மதுரையில் ஆர்.சி.வி-யை ஆரம்பித்தார் அழகிரி. அவர் மகன் துரை தயாநிதி, நெருங்கிய நண்பர் ராஜபிரபு உள்ளிட்ட மூவர் பொறுப்பில் உள்ளனர்.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைப் பொறுத்த வரை எஸ்.சி.வி. மற்றும் ஆர்.சி.வி. கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலான கேபிள் ஆபரேட்டர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, அண்மையில் அரசு கேபிள் கார்ப்பரேஷனின் தலைவர் ராதாகிருஷ்ணன் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதைப் புறக்கணிக்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் நெருக்கப்பட்டார்கள்.
இதனால், மதுரையில் சுமார் 400 ஆபரேட்டர்கள் இருந்தும் 20-க்கும் குறைவானவர்களே கூட்டத்துக்கு (தைரியமாக) வந்தனர். கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் இதே நிலைதான். ராதாகிருஷ்ணன் இதை அரசுக்கு அறிக்கையாகக் கொடுத்ததால்தான், ரெய்டு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ''போஸ்ட் ஆபீஸில் 500 கட்டிட்டா, யார் வேணும்னாலும் கேபிள் டி.வி. நடத்தலாம்னு சொல்றாங்க. லைசென்ஸ் இருந்தாலுமே லோக்கல் சேனல்களில் செய்தி வாசிக்கக் கூடாது, ஒரு நேஷனல் சேனல் உள்பட தூர்தர்ஷனின் மூன்று சேனல்களைக் கட்டாயமாக ஒளிபரப்பு செய்யணும், விளம்பரங்களை ஒளிபரப்புவது சம்பந்தமாக சில விதி முறைகளைப் பின்பற்றணும்னு ஏகப்பட்ட நிபந்தனைகள் இருக்குது. இவை எல்லாமே மீறப்படுவதாகத் தகவல்கள் வந்ததால் தான், ரெய்டுக்குப் போனோம். ஆனால், அழகிரிக்கு விசுவாசமான போலீஸ் அதிகாரிகள் சிலர், ரெய்டு விஷயத்தை முன்கூட்டியே சிக்னல் கொடுத்து விட்டதால், முதல் நாள் இரவே ஒரு ஆம்னி வேனிலும், டெம்போ டிராவலரிலும், ஆட்டோவிலும் எல்லாத்தையும் கடத்திட்டாங்க.
தாசில்தார் சகிதம் ஆர்.சி.வி. அலுவலகத்துக்கு நாங்க போனப்ப, போலீஸ் வரும்னு எதிர்பார்த்தே காத்து இருந்தாங்க. லைசென்ஸ் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி எல்லாத்தையும் பக்காவா எடுத்து வெச்சிட்டாங்க. துரை தயாநிதி பெயரில் இயங்கி வந்த, 'தயா டி.வி’-க்கான ரூமில் இருந்த ஒளிபரப்பு சாதனங்களை சமீபத்தில்தான் ரிமூவ் பண்ணியிருக்காங்க. அந்த ரூமே காலியாக் கிடந்தது. லைசென்ஸ் காப்பி உள்ளிட்ட சில ஆவணங்களை மட்டும் வாங்கிட்டு வந்துட்டோம்...'' என்றார்கள்.
மறுநாள் காலையில் ஆர்.சி.வி. அலுவலகத்துக்கு விசிட் அடித்த போலீஸார், அங்கும் சில விவரங்களைக் கேட்டு வாங்கிச் சென்றார்களாம். அன்றைய தினமே மதுரையில் இருந்து பாளையங்கோட்டைக்குப் பறந்த கேபிள் ஆபரேட்டர்கள் சிலர், சிறையில் உள்ள பொட்டு சுரேஷிடம் அடுத்த கட்ட மூவ் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் சொல்கிறார்கள். அதே சமயம், ரெய்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் லோக்கல் சேனல்கள் அனைத்தும் ஒளிபரப்பை நிறுத்திவிட்டன. கோவை, திருச்சி, உள்ளிட்ட இடங்களில் லைசென்ஸ் புதுப்பிக்காமல் கேபிள் நடத்தியதாக சிலர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கரன் டி.வி-யின் நெல்லை அலுவலகத்திலும், 'அனுமதி இல்லாத பாடல்கள் மற்றும் படக் காட்சிகளை ஒளிபரப்பியதாக புகார் வந்திருப்பதால் சர்ச் பண்ண வேண்டும்’ என்று வந்தவர்களிடம், 'எந்த ஆதாரத்தில் சோதனைக்கு வந்தீர்கள்?’ என்று கேட்டார்களாம். சேலத்தைச் சேர்ந்த 'வெல் மீடியா’ என்ற நிறுவனத்தின் நிர்வாகியான காயத்ரி என்பவர், 'நாங்கள் உரிமம் பெற்றுள்ள படம் மற்றும் பாடல் காட்சிகளை கரன் டி.வி அத்துமீறி ஒளிபரப்பு செய்கிறது’ என்று கலெக்டருக்குக் கொடுத்திருந்த புகாரின் நகலை படித்துக் காட்டியது போலீஸ். ஆனாலும், 'தங்களிடம் இருக்கும் ஆவணங்களைக் காட்டுவதற்கு அவகாசம் தேவை’ என கரன் டி.வி. நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதால், எதையும் கைப்பற்றவில்லை. அன்று நள்ளிரவில் கரன் டி.வி நிர்வாகத்தின் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்கும் பதிவு செய்தனர்.
ரெய்டு நடவடிக்கைகள் குறித்து மதுரை போலீஸ்கமிஷனர் கண்ணப்பனிடம் பேசினோம். ''போஸ்ட் ஆபீஸில் லைசென்ஸ்கொடுத்தாலும், கேபிள்
டி.வி-க்களைக் கண்காணிக்கும் அதிகாரம்,போலீஸுக்கும் வருவாய்த் துறைக்கும் தான் இருக்கிறது. கேபிள் டி.வி. நெட்வொர்க் ரெகுலேஷன் ஆக்ட் 1995-ல் ஏகப்பட்ட விதிமுறைகளை சொல்லி இருக்காங்க. ஆனால், அதை யாருமே பின்பற்றுவதாகத் தெரியவில்லை. அதை ஒழுங்கு படுத்தத் தான் ரெய்டு நடத்தினோம். சில ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறோம். அவற்றை ஆராய்ந்து பார்த்து, விரைவில் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு துரை தயாநிதி எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத நிலையில், அவரையும் அழகிரியின் வலது கரமான ராஜ பிரபுவையும் குறிவைத்தே கேபிள் விவகாரத்தைக் கையில் எடுத்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மதுரைக்குள் கேபிள் தொழிலில் இருக்கும் சிலர் தி.மு.க. பெரும்புள்ளிகளின் பினாமிகளாகவும் இருப்பதால், இந்த விவகாரத்தை அவ்வளவு லேசில் விடாது போலீஸ்!
- குள.சண்முகசுந்தரம், ஆண்டனிராஜ்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எல்.ராஜேந்திரன்
நன்றி: ஜூனியர் விகடன் 14-08-2011 இதழ்.
இப்படி ஜூனியர் விகடனிலும், குமுதம் ரிபோர்டரிலும் படித்து விட்டு அதோடு திருப்தி அடைந்து விட வேண்டியதுதானா? குற்றவாளிகள், ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதைத் தெலுங்கு சினிமாவில் பார்ப்பதோடு திருப்தி அடைந்து விட வேண்டியதுதானா?
உப்புத்தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பது பழமொழிதான்! நடைமுறை மொழியாவது எப்போது?
இந்த சாதாரண கேபிள் விவகாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்!
தபாலாபீஸில் வெறும் ஐநூறு ரூபாய் மட்டும் கட்டி, கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்துவிட்டால் போதும்! யார் வேண்டுமானாலும் கேபிள் தொழில் ஆரம்பித்துவிடலாம்!என்ன, சூரிய குடும்பம் அல்லது தாத்தாவின் பேரன்கள் குடும்பம் இரண்டில் ஏதோ ஒன்றின் தயவு, கடாட்சம் இருந்தால் போதும்! கேபிள் ஆரம்பித்துப் பாக்கெட் செலவுக்குத் தேற்றிக் கொண்டே, இந்தக் குடும்பங்களுக்கு ஆல் இன் ஆல் ஆக இருந்து விட்டால், அவர்கள் நானூறு-நாலாயிரம் தலைமுறைக்குச் சேர்த்து வைத்தால், இவர்கள் நாலு தலைமுறைக்கு சேர்த்து வைக்க முடியாதா என்ன!!
நெல்லையில் நடத்திய ஒரே ரெய்டில்,மாநிலம் முழுவதும் இப்படித் திமுக பினாமிகள் நடத்திவந்த தனியார் கேபிள் தொலைக் காட்சிகள் காணாமல் போய் விட்டன!
சூரியக் குடும்பம், சூரியக் குழுமம் இரண்டில் ஏதோ ஒன்றை அண்டிப் பிழைத்த அடிவருடிகள் கேபிளை வைத்து எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள்,அதற்காக என்னென்ன செய்திருப்பார்கள் என்பதெல்லாம் கண் முன்னாலேயே நிகழ்ந்ததுதான்! மானாட மயிலாடப் பார்த்துக் கொண்டு, குண்டு நமீதா மச்சான்ஸ் என்று அழைத்ததில் புளகாங்கிதம் அடைந்த தமிழக மக்கள், கேபிளை வைத்துத் தங்களுடைய கோவணம் உருவப்பட்டதைக் கூட அறியாமல், திறந்த வாய் மூடாமல் ஒருவித மயக்க நிலையில் இருந்தார்களே, இப்போது மட்டும் விழித்துக் கொண்டு விட்டார்களா?
கலாநிதிமாறன்-தயாநிதி மாறன் பற்றி,செய்தித் தாட்களில் இப்போதெல்லாம் எதுவுமே வருவதில்லை!
ஆனாலும், அவர்கள் மீது கிரிமினல், மோசடிப் புகார் கொடுத்தவர்கள், அவர்களாகவே எங்களுக்குள் சமரசமாகத் தீர்த்துக் கொண்டு விட்டோம் என்று நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதில், கேடி பிரதர்ஸ் மீது, அவர்கள் நிறுவனத்தின் சாக்சேனா மீது தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.ஜூலை கடைசிக்குள், ஆகஸ்ட் முதல்வாரத்தில் என்று சிபிஐ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மூன்றாவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வது தள்ளிப்போய்க் கொண்டே போகிறது.
குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்தால், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் விவகாரம் முதற் கொண்டு பல வழக்குகளிலும், கிடைத்த ஆதாரங்களையும் சிபிஐ காணாமல் போக விட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. ஸ்பெக்ட்ரம் வழக்கையே எடுத்துக் கொண்டால்,ஆ. ராசா சதி செய்தார், கனிமொழி கூட்டுச் சதி செய்தார், ஸ்வான், டிபி ரியாலிடி நிறுவனங்கள் இருநூற்றுப் பதினாலு கோடி ரூபாய் லஞ்சப் பணத்தைக் கலைஞர் தொலைக் காட்சிக்குத் திருப்பிவிட்டார்கள், விவகாரமானதும் கடன் என்று மழுப்பிவிட்டார்கள் என்று மட்டும் எண்பதாயிரம் பக்கத்துக்குக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தால் மட்டும் போதுமா?
ஆ.ராசா,சித்தார்த் பெஹுரா,ஆர்கே சந்தோலியா,ஷாஹிட் பால்வா என்று வரிசையாக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள், குற்றங்களைப் பட்டியலிடும் ஆரம்ப நிலையிலேயே, அதில் உள்ள ஓட்டைகளைக் கிழித்துத் தோரணம் கட்டியிருக்கிறார்கள். கிழித்துத் தோரணம் கட்டும் வேலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அரசுக்கு சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று சிபிஐ ஒரு குத்துமதிப்பாகச்சொல்லப்போக, "அதில் பாதிக்குமேல் ஆதாயம் பார்த்த டாட்டாவை விட்டு விட்டு எங்களைப் பிடித்தது ஏன்" என்று கேட்டிருக்கிறார்கள். பிரதமர் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னதில் உண்மை இல்லை என்பது பிரதமர் அலுவலகக் குறிப்பு ஒன்றினாலேயே வெளிப்பட்டிருக்கிறது.
நிதியமைச்சராக இருந்த பானாசீனா, ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்குப் பங்கேதும் இல்லை, தன்னுடைய அமைச்சகம் சம்பந்தப்படவே இல்லை என்று சாதித்துக் கொண்டிருக்கிறார்.டம்மிப் பீஸ் கம் ஊமைக் குசும்பனாக மன்மோகன் சிங் தொடர்ந்து தனக்கு எதுவுமே தெரியாது என்றே சாதித்துக் கொண்டிருக்கிறார்.
ஆ.ராசா லைசன்ஸ் வழங்கிய ஒரு சிலமணி நேரத்துக்குள்ளாகவே அதை வைத்து சில நிறுவனங்கள் அரசு வங்கிகளில் ஆயிரக் கணக்கான கோடிகளைக் கடனாகப் பெற்றது எப்படி?பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே பதினோராயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கியது எப்படி? இது கூடக் கண்டனூர்ப் பானா சீனாவுக்குத் தெரியாமல் நடந்ததாமா? நிதியமைச்சருக்குத் தெரியாமலேயே அரசு வங்கிகள் செயல்படத் தொடங்கி விட்டதா என்ன ? வங்கி அதிகாரிகளை சிபிஐ விசாரித்ததா?
காங்கிரசுக்கு உண்மையே பேசத்தெரியாது என்ற நிலையில்,எவர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்வதாம்?
இந்த அரசு ஒன்றுக்கும் ஆகாதது ஒன்றுமே செய்யப்போவதில்லை என்று நன்றாகவே தெரிகிறது.
தெய்வம் நின்று கொல்லும் என்று நம்பிக் காத்திருப்பதா?
அல்லது
இந்த தேசத்தின் ஜனங்கள் நமக்கும் கொஞ்சம் பொறுப்பிருக்கிறது, ஊழலுக்கெதிரான இந்தியாவாகத் தலை நிமிர்ந்து அணிதிரள்வதா?
என்ன செய்யப் போகிறோம்?கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!
No comments:
Post a Comment