அ.ம.மு.க.வில் தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையிலான மோதல் பெரிதாக வெடித்துள்ளது. தினகரனை கடுமையாக விமர்சித்து தங்கதமிழ்செல்வன் பேசியதாக 'ஆடியோ' பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஓரம் கட்டப்பட்டதும் அவருக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் பகிரங்க ஆதரவு தெரிவித்தனர். அவர்களில் முக்கியமானவர் தங்க தமிழ்செல்வன்; தினகரனுக்கு பக்கபலமாக இருந்தார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து 18 பேரும் நீதிமன்றம் சென்றனர். அப்போதே தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அதிருப்தி அடைந்தார். தேர்தலில் நிற்பதற்காக தினகரன் தனிக்கட்சி துவக்கினார். அதிலும் தங்கதமிழ்செல்வனுக்கு விருப்பம் இல்லை. தினகரன் துவக்கிய கட்சியில் தங்கதமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலர் பதவி வழங்கப்பட்டது.
சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட தங்கதமிழ்செல்வன் ஆர்வமாக இருந்தார். அவரை தேனி லோக்சபா தொகுதி வேட்பாளராக தினகரன் நிறுத்தினார். தேர்தலில் அ.ம.மு.க. அனைத்துதொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. தேர்தலுக்கு பின் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது.இந்த சூழ்நிலையில் தினகரனின் உதவியாளரிடம் தங்கதமிழ்செல்வன் பேசிய ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. அதில் தினகரனை கடுமையான வார்த்தைகளால் தங்கதமிழ்செல்வன் திட்டியுள்ளார்.
ஆடியோவில் தங்க தமிழ்செல்வன் பேசியுள்ளதாவது: எங்கப்பா அவர் இருக்கிறாரா... உங்க அண்ணன் இருக்காரா... இந்த மாதிரி பேடித்தனமா அரசியல் செய்வதை நிறுத்தச் சொல்லுப்பா உங்க அண்ணனை.உண்மையில் நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போவீங்க... நீ உட்பட அழிந்து போவீங்க... நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுகிறாயா... நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன்; என்ன நடக்கிறது என்று பார்.இந்த மாதிரி ஒரு பேடித்தனமான அரசியல் பண்ண வேணாம்னு தினகரனிடம் சொல்லிடு. இந்த மாதிரி அரசியல் பண்ண வேண்டாம்... நீ தோத்துப் போயிடுவே... என்றைக்கும் ஜெயிக்க மாட்டனு சொல்லிடு. இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோ உண்மையா என்று அறிய தங்க தமிழ்செல்வனை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
நிர்வாகிகள் புறக்கணிப்பு
நேற்று மாலை தேனியில் மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகிகள் கூட்டத்திற்கு தங்கதமிழ்செல்வன் ஏற்பாடு செய்திருந்தார்.ஆனால் கட்சி தலைமை உத்தரவுப்படி தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை.ஆத்திரம் அடைந்த தங்க தமிழ்செல்வன் திண்டுக்கல் தொழிற்சங்க நிர்வாகியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் தினகரனை விமர்சித்து பேசியது தான் 'வாட்ஸ் ஆப்' ஆடியோவாக நேற்று வெளியானது.
No comments:
Post a Comment