Thursday, June 27, 2019

*நீங்கள் யோக்கியரா?*

மதுரையில் கௌசல்யா என்னும் பெண் காணாமல் போனதாகக் கொடுக்கப்பட்டப் புகாரை சரியாக விசாரிக்க வில்லை என்று சொல்ல உயர்நீதி மன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை நாம் மறுக்க முடியாது. அதற்காக, நடிகை நயன்தாரா காணாமல் போனால் தான் சரியாக விசாரிப்பீர்களா என்று போலீஸைப் பார்த்து பொத்தாம் பொதுவில் கேட்க, அதே நீதி மன்றத்துக்குத் தகுதி இருப்பதாக நான் கருத வில்லை.
அந்த நடிகை எவ்விதத்திலும் இப்புகாரில் சம்பந்தப் படாமல் இருக்க, அவரை நீதிபதி குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
குற்றங்கள் பல புரிந்த ஓர் அயோக்கிய முன்னாள் மந்திரியின் குடும்பத்துக்கு நீதி மன்றம் 20 க்கு மேற்பட்ட சமயங்களில் முன்ஜாமீன் வழங்கி இருப்பதைப் பார்க்கிறோம். அதே நீதி மன்றம், குப்பனுக்கும், சுப்பனுக்கும், அவ்வளவு தடவை முன்ஜாமீன் வழங்கிக் கண்டிருக்கிறோமா? இந்த ‘சிதம்பர ரகஸ்யத்தின்’ காரணம் என்ன? யாரிடம் இதைக் கேட்பது?
ஊழல் புரிந்தது நிரூபிக்கப்பட்டு, ஒரு முதலமைச்சர் ஜெயிலுக்குப் போனார். அதை விட 1000 மடங்கு ஊழல் புரிந்து, இன்னும் 10 தலைமுறைக்கு சொத்தினைக் குவித்து வைத்து இருந்த இன்னொரு முதல்வர் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து தப்பித்து உள்ளார். முயலுக்குத் தண்டனை கொடுத்த அதே கோர்ட் தான் முதலையைத் தப்ப விட்டு விட்டு விட்டது! இதை யாரிடம் சொல்வது?
ஓரிரு நாட்கள் சிறைக்குச் சென்றாலே, எந்த நிறுவனத்திலும் வேலை கொடுக்க மாட்டார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேச மாட்டார்கள்!
ஆனால் ‘தீஹார்’ சிறையில் மாதக் கணக்கில் பொழுதைக் கழித்த இருவர் இப்போது வெற்றி பெற்று பாராளுமன்றம் போய் விட்டனர். இதை யாரிடம் கேட்பது? எந்தக் கோர்ட் இவர்கள் ஜெயித்தது நாட்டுக்கே அவமானம் என்று அபிப்பிராயம் சொல்லியிருக்கிறது? இன்னொரு வழக்கில், நயன்தாராவை இழுத்த நீதிபதியே, தீஹார் பற்றியும் விமரிசனம் செய்வாரா? அதற்குரிய துணிவு இருக்கிறதா?
பசியை ஆற்றிக் கொள்ள செய்யப்பட்ட ஒரு சிறு திருட்டுக் குற்றத்துக்குத் தண்டனை கொடுக்கும் கோர்ட், ஹரியானா அரசை ஏமாற்றி, கோடி கோடியாக சம்பாதித்ததாக சொல்லப் படும் ராபர்ட் வாத்ராவை வெளியில் விட்டுள்ளதை யாரிடம் கேட்பது? எந்தக் கோர்ட் முன் வந்து, அவரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க சொல்லப் போகிறது? பணத்துக்கும், பதவிக்கும் ஒரு நீதி, பஞ்சத்துக்கும், பரம ஏழைக்கும் இன்னொரு நீதி! இது தானே இங்கு இருந்து வருகிறது!
முன்பு ஓர் உச்ச மன்ற நீதிபதி ஊழல் செய்ததாக பரவலாகப் பேசப் பட்டதே, அவர் மீது ஏதாவது நடவடிக்கை உண்டா? எத்தனை வழக்குகளில், 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக, போலீஸ்காரர்களை, கிராம நிர்வாகப் பணியாளர்களை, இதரக் கீழ்மட்ட அலுவலர்களை, உள்ளே தள்ளுகிறீர்கள்? ஏன் இவர் தப்பிக்க, மௌனம் சாதிக்கிறீர்கள்?
நானும் போலீஸ்காரனாக இருந்தவன். கூடுமானவரை நேர்மையாக உழைத்தவன். காவல்துறையில் , ஒரு சிறு தண்டனை கூட இல்லாமல், நூற்றுக்கணக்கான வெகுமதிகள் பெற்று நிம்மதியுடன் ஓய்வு பெற்றவன். இன்று 80 வயதில் நிற்கிறவன்.
போலீஸ் துறையில் உள்ளவர்கள் செய்யும் மக்கள் சேவையை நன்கு அறிந்தவன். சமுதாயத்தால், கோர்ட் இல்லாமல் பல ஆண்டுகள் வாழ முடியும்; ஆனால் போலீஸ் இல்லாமல் 5 நிமிஷம் கூட நிம்மதியாக வாழ முடியாது. ஜட்ஜ்கள் இதனை நினைவில் கொண்டு விமரிசனம் செய்ய வேண்டும்.
அதிகாரம் இருப்பதற்காகவும், ஊடகங்களின் துணை இருப்பதற்காகவும், பொத்தாம் பொதுவில், ஒரு நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு போலீஸை இழிவு படுத்துவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நீதி மன்றம் இந்த அபிப்பிராயத்தை ஆவணங்களிலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என் விண்ணப்பம்.
ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...