உணவே மருந்து, மருந்தே உணவு. ஆனால், இந்த 50 ஆண்டுகால இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக்கொண்டிருக்கிறோம். இன்றைய அவசர வாழ்க்கைமுறை, நம் வயிற்றை இறுக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிட நேரமின்றி கண்டதையும் அள்ளிப்போட்டுக் வயிற்றை குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று மளிகைக்கடை, காய்கறி கடை, பழக்கடைகளில் கிடைக்கும் அனைத்து இயற்கையான பொருட்களும்கூட பேக்டு முறையில் விற்கப்படுவதுதான் வேதனை.
முறையற்ற உணவுப் பழக்கத்தால், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நோய்களின் பிடியில் அவதிப்படுகின்றோம்.
இயற்கைப் பிரியன் ரத்தின சக்திவேல் தரும் சமைக்காத இயற்கை உணவு வகைகளும், சித்த மருத்துவர் சிவராமன் சொல்லும் உடல் உபாதைகளைப் போக்கும் உன்னத உணவு முறைகளும் இணைந்து தரப்பட்டுள்ள இந்த சத்தான கையேடு, உங்களை ஈடில்லா ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுவதுடன், நிச்சயம் உடலுக்கு வலுவூட்டுபவையாகவும் இருக்கும்.
சமைக்காத இயற்கை உணவுகள்
''சூரிய சக்தி இயற்கையாக சமைத்து தரும் இனிய கனிகள், காய்கறிகள், கீரைகள் மனிதன் மறுபடியும் வேகவைக்காமல் சாப்பிட்டு உயரிய ஆற்றல் மற்றும் மருத்துவ குணங்களைப் பெற்று ஆரோக்கியம் காக்க உயிர் உள்ள இயற்கை உணவுகள் வழிகாட்டுகின்றன.
இந்த இயற்கை உணவுகள் மிகுந்த காரத்தன்மை உடையன. இவை நோய்களை விரட்டும் சஞ்சீவன உணவுகள். வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் எளிதில் ஜீரணமாகும் எளிய உணவுகள்.
நமது உடலின் தேவையான உணவின் மூலக்கூறுகள் 80% காரத்தன்மையாகவும், 20% அமிலத்தன்மையாகவும் இருக்க வேண்டும். சமைத்த உணவுகள் முழுவதும் அமில உணவுகளாகவே உள்ளன. சுவைக்காக உண்ணும் சமையல் உணவு மட்டும் நமது உடலின் சத்துக்கள் மற்றும் தேவையைப் பூர்த்தி செய்வது இல்லை. எனவே, இனியும் இயற்கை உணவுக்கு மாற தயங்க வேண்டாம்.'' என்கிற இயற்கைப் பிரியன் இரத்தின சக்திவேல், இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை வைத்து சமைக்காமல் சாப்பிடும் முறைகளையும், பலன்களையும் பட்டியலிடுகிறார்.
கீர் வகைகள்
முளை கோதுமை தேங்காய்பால்
விதைக் கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியால் கட்டி முளைக்கவிடவும். இதைக் காயவைத்து வறுத்து அரைக்கவும். அரைத்த மாவை சலிக்காமல் பாட்டிலில் பத்திரப்படுத்தவும். தேவையானபோது ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து, அதனுடன் இனிப்புக்கு வெல்லம், தேன், ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம். இதனுடன் தேங்காய் பால் சேர்த்தும் பருகலாம். அற்புதமான சுவையுடன் இருக்கும்.
பலன்கள்: புற்றுநோய்க்கு நல்ல மருந்து. உடனடியாக ஜீரணமாகும். எலும்பு உறுதியாகும். உடல் பலம் பெருகும். உயர் ரத்த அழுத்தம் குறையும். உடல் பருமன், தொப்பை, ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் அருந்தலாம்.
பேரீட்சை கீர்
200 கிராம் பேரீட்சைப் பழங்களை ஊறவைத்து கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து, தேவையான நீர் கலந்து ஏலக்காய்த்தூள், பேரீட்சைச் சாறை சேர்க்கவும்.
பலன்கள்: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இதை காலை டிஃபனாக சாப்பிடலாம். ரத்தம் விருத்தியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், தெம்பும் கூடும்.
காரட் கீர்
500 கிராம் காரட்டை கழுவிச் சுத்தம் செய்து துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து தேங்காய்ப்பால் எடுக்கவும். இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து, 200 கிராம் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்து பருகலாம்.
பலன்கள்: கண்ணுக்கு மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் கொடுக்கலாம். தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் விலகும். குடல் புண் சரியாகும்.
முளை தானிய பயிறு வகைகள்!
எட்டு மணி நேரம் ஊறவைத்து, முளைகட்டி ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், பலரும் சோம்பலின் காரணமாக இதைச் சாப்பிடுவதில்லை. ஆனால், சத்தான முளை தானியப் பயறுகளை சாப்பிடுவதால், குறைந்த தானியத்தில் அதிக இயற்கை உணவைப் பெற முடியும். சமைக்காமல் அப்படியே சாப்பிடும் போது ஒரு வேளைக்கு 50 கிராம் அளவே போதுமானது. முளைப்புத் திறனும் சிலசமயம் மாறுபடும். கூடிய வரையில் ஃப்ரிட்ஜில் வைக்காத முளை தானியங்களைப் பயன்படுத்துவது நல்லது.
பச்சைப்பயறு
நல்ல குடிநீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, ஈரமான பருத்தித் துணியில் கட்டி முளைக்கவிடவும். காலையில் ஊறவைத்து மாலையில் நீரை வடித்துக் கட்டினால், மறுநாள் அதிகாலை வெள்ளை முளை எட்டிப் பார்க்கும். தினமும் ஒரு நபருக்கு 50 முதல் 100 கிராம் வரை தேவைப்படும்.பல்லால் கடிக்க முடியாதவர்கள், இந்த முளைப் பயறை நீர் சேர்த்து அரைத்து அதில் வெல்லம், தேன், தேங்காய் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை டிஃபனுக்கு பதிலாக சாப்பிடலாம்.
பலன்கள்: அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முளைக்கட்டிய வெந்தயம்
சிறிது நேரம் ஊறவைத்து, ஈரப் பருத்தித் துணியில் முளைக்கட்டி சாப்பிடலாம்.
பலன்கள்: கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
கொள்ளு முளைப்பயறு
நன்றாக அலசி, நீர் சேர்த்து முளைக்கவிட்டுப் பயன்படுத்தவேண்டும்.
பலன்கள்: அதிக உடல்சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரழிவு நோய், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு முளைப்பயறு மிகவும் நல்லது.
முளைவிட்ட எள், வேர்க்கடலை
பலன்கள்: மிகவும் மெலிந்த உடல் இருப்பவர்கள் முளைக்கட்டிய எள், வேர்க்கடலையைத் தினமும் 100 கிராம் அளவுக்கு சாப்பிடலாம். அகோரப் பசியை போக்கி, ஊட்டச்சத்தையும் தரும். கடின உழைப்பாளிகளுக்கும், துள்ளித் திரியும் வளரும் பிள்ளைகளுக்கும் மிக நல்லது.
கம்பு முளைப்பயறு
கம்பை 8 மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைக்கவிடவும். அடிக்கடி ஒரு கைப்பிடி சாப்பிட்டு வரலாம். அரைத்துப் பாலாகவும் அருந்தலாம். கூழாக்கி, கஞ்சியாகவும் சாப்பிடலாம்.
பலன்கள்: பலம் கூடும். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள், தினமும் சாப்பிட உடல் உறுதிப்படும்.
லட்டு வகைகள்
எள்ளு லட்டு
400 கிராம் வறுத்த எள், 300 கிராம் கொட்டை நீக்கிய பேரீட்சை அல்லது வெல்லம், உலர் திராட்சை 100 கிராம், முந்திரி 50 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.
எள்ளை மிக்சியில் அரைத்து அதனுடன் உலர் திராட்சையும் பேரீட்சையையும் கழுவி வெல்லம் சேர்த்து அரைக்கவும். விருப்பப்பட்டால், பனங்கற்கண்டு சேர்க்கலாம். ஏலத்தூள், முந்திரி கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பலன்கள்: நல்ல சத்தான உணவு. உடல் இளைத்தவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் தேறும். நல்ல தெம்பு கிடைக்கும். பசி தாங்கும் உணவு இது. மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் தாய்ப்பால் அதிகம் சுரக்க எள்ளு லட்டை சாப்பிடலாம்.
இயற்கை இனிப்பு லட்டு
முந்திரி, பாதாம், பேரீட்சை தலா 100 கிராம், உலர் திராட்சை, வெள்ளரி விதை தலா 50 கிராம், பிஸ்தா 20 கிராம், ஏலக்காய்த்தூள்.
பேரீட்சைப் பழங்களின் கொட்டைகளை நீக்கி சுத்தப்படுத்தி எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கலாம். லட்டு போல் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். விருப்பப்பட்டால், தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்: ஊட்டச்சத்தான லட்டு. நோஞ்சான் குழந்தைகளுக்கு காலை டிஃபனுக்கு பதிலாகத் தரலாம். ரத்த சோகையைப் போக்கும். அதிகத் தூரப் பயணம், வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் தினமும் இரண்டு லட்டுகள் சாப்பிடலாம். பசியைப் போக்கும் உன்னத உணவு.
வேர்க்கடலை - பொட்டுக்கடலை லட்டு
300 கிராம் வறுத்த வேர்க்கடலை, 150 கிராம் பொட்டுக்கடலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, பேரீட்சை, உலர் திராட்சை சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பைக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம். தேவைப்பட்டால், தேன் அல்லது நெய் சேர்க்கலாம்.
பலன்கள்: பசியைப் போக்கும். உடலுக்கு தெம்பைக்கூட்டும். உரமாய் வைத்திடும். உடல் உழைப்பாளர்கள் அடிக்கடி சாப்பிடலாம். போஷாக்கு நிறைந்த உணவு.
துவையல் வகைகள்
பீட்ரூட் துவையல்
250 கிராம் பீட்ரூடைக் கழுவி தோல் சீவி, நைஸாகத் துருவிக்கொள்ளவும். 100 கிராம் இஞ்சியை தோல் சீவி நறுக்கிச் சாறு எடுக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கலாம். சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும். தேவைப்பட்டால் பிளாக்சால்ட் சேர்க்கலாம்.
பலன்கள்: அனைவரும் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அமிலத்தன்மை, மலச்சிக்கல், பசியின்மையைப் போக்கும். தொப்பையைக் குறைக்கும். ஜீரணக் கோளாறு, வயிற்றுவலி, வாயுப் பொருமல் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். கேன்சரைக் குணப்படுத்தும் உணவுகளில் பீட்ரூட் முக்கியப் பங்கு வகிக்கிறது. தயிரில் கலந்தும், சாதத்துடன் பிசைந்துச் சாப்பிடலாம்.
கொத்தமல்லித் துவையல்
500 கிராம் கொத்தமல்லித்தழை, 100 கிராம் கருவேப்பிலை இரண்டையும் கழுவி, பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 மூடி தேங்காய் துருவல், கழுவிய 2 குடமிளகாய் சேர்த்து அரைத்து சிறிது பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்க்கவும்.
பலன்கள்: மூட்டுவலி, வாயுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். தொப்பை குறையும். தேமல் மறையும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்த நோய்கள் குறையும். ரத்தம் விருத்தியடையும்.
நெல்லிக்காய் துவையல்
250 முழு நெல்லிக்காய்களை நறுக்கி கொட்டைகளை நீக்கவும். சிறிது நேரம் நறுக்கிய நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறவைத்து, 5 பல் பூண்டின் தோலை நீக்கவும். 20 கிராம் இஞ்சித் தோலை நீக்கி நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இதனுடன் மிளகுத்தூள், பிளாக்சால்ட் சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.
பலன்கள்: ஊறுகாய்க்கு பதில் பயன்படுத்தலாம். சகல நோய்களையும் தீர்க்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நன்றாகப் பசியெடுக்கும். அஜீரணக் கோளாறு விலகும். இளமையைத் தக்கவைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
சாலட் வகைகள்
காய்கறி சாலட்
காரட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கோஸ், வெண்பூசணி, புடலை, பீர்க்கை, சௌசௌ, முள்ளங்கி, சுரை இவற்றை தீக்குச்சி வடிவில் சிறியதாக நீட்டமாக நறுக்கவும். இந்தக் கலவை 200 கிராம் இருக்கட்டும். கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து நறுக்கிய காய்கறிகளுடன் கலக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைசாறு, பிளாக் சால்ட், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் கலந்தால், அருமையான சாலட் தயார். பல் இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்தும் சாப்பிடலாம். இதனுடன் முளை தானியங்களும் சிறிது சேர்க்கலாம். இனிப்புக் காய்கறி கலவைத் தேவைப்படுபவர்கள், வெல்லம் சிறிது கலந்து கொள்ளலாம்.
பலன்கள்: சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தொப்பை உள்ளவர்கள் தினமும் அவசியம் 50 கிராம் முதல் 100 கிராம் வரை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். உடல் சூடு, மூல நோய் மறையும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்பப்பை கோளாறுகள் குறையும். அஜீரணக் கோளாறு இரண்டே நாட்களில் சரியாகும். மூட்டுவலி குறையும். நரம்புகள் வலுப்பெறும்.
ஃப்ரூட் சாலட்
ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரீட்சை, மாம்பழம், பாப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, கொய்யா இவை கலந்த கலவை தலா 500 கிராம் எடுத்து நன்றாகக் கழுவவும். தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொட்டைகளை நீக்கவும். மாதுளை முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். எல்லாப் பழங்களையும் கலந்து அத்துடன் தேன் அல்லது வெல்லம் தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் கலந்து சாப்பிடலாம். இதை உணவுக்கு முன் சாப்பிடலாம்.
பலன்கள்: மலச்சிக்கல், குடல்புண், பசியின்மை விலகும். உடலுக்கு உடனடி சக்தி தரும். சிறுநீர் எரிச்சல், நீர் பிரியாமை உடலின் மூலச்சூடு குறையும்.
வெள்ளரிப் பச்சடி
வெள்ளரி, காரட்டை நீளவாக்கில் நறுக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் சேர்க்கவும். இதனுடன் தயிர், பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
No comments:
Post a Comment