Friday, August 5, 2011

தமிழக பட்ஜெட் : அரசியற் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்..?

தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் அதிமுக அரசின் முதலாவதும், 2011-12ம் ஆண்டுக்கானதுமான பட்ஜெட்டை, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்


நேற்றுச் சட்டசபையில் தாக்கல் செய்திருந்தார். இந்த நிதி நிலை அறிக்கை குறித்து ஆட்சேபனைகள் சில தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பலரும் வரவேற்புத் தெரிவிதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சித் தலைவர்களின் கருத்துக்களை ஒரே பார்வையில் இங்கு காணலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன்:
தமிழகத்தின் தொழில்வளர்ச்சி, விரைவான முன்னேற்றம் அடைய நீண்ட காலத் திட்டம் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. வேலை வாய்ப்புகளை விரிவாக்கு வதற்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இல்லை.
அதிமுக அரசினுடைய ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உள்ள பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில், சில அம்சங்களில் மேலும் சில மாற்றங்கள் தேவை என்பதை தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசு அதனைக் கவனத்திற் கொள்ளும் என நம்புகின்றோம்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு:
தமிழகத்தின் வளர்ச்சிக்கான பணிகள் தெளிவான நிலையில் செல்லத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், தண்ணீர் பாசனத்திற்கான தேசிய இயக்கம் ஆகியவற்றின் வெற்றிக்கு தமிழக அரசு ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற கருத்து விவசாயத்துறை வளர்ச்சிக்கு திருப்புமுனையாக அமையும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
இலவச அரிசி, திருமண உதவித் திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள், இலவச லேப்-டாப், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல், கால்நடைகள் வழங்குதல் ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நடமாடும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துதல், 100 நாள் வேலைத் திட்டத்தை விவசாயம் சார்ந்ததாக மாற்றுதல், கேபிள் டிவி சேவையை அரசுடைமை ஆக்குதல், மீனவர் நலத் திட்டங்கள் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் இன்றியமையாத மக்கள் நலப் பிரச்னைகள் குறித்து எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
பி.டி. கத்தரி பரவலாக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க அறிவிப்புகள் இல்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் எந்தத் திட்டமும் இல்லை. சமச்சீர் கல்வி விஷயத்தில் வீண் பிடிவாதம் தொடருவதையே நிதிநிலை அறிக்கை காட்டுகிறது
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:
சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தத் திட்டமும் இல்லை. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, அதிக சீருடை வழங்குவது ஆகியவை வரவேற்கத்தக்கது. ஆனால், ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளை தரம் உயர்த்துவது ஆகியவை குறித்து எதுவும் இல்லை.
மகப்பேறு உதவித் தொகை ரூ. 12 ஆயிரமாக உயர்வு, விவசாயிகளுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன், நடமாடும் மருத்துவமனை ஆகியவை வரவேற்கத்தக்கவை. ஒரு தரப்பினருக்கு ரூ. 1.8 லட்சத்தில் பசுமை வீடுகளையும், இன்னொரு தரப்பினருக்கு இந்திரா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்தில் சாதாரண வீடுகளையும் கட்டித் தருவது சமத்துவக் கொள்கைக்கு எதிரானது. சென்னைக்கு சற்றும் ஒத்துவராத மோனோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்ற விவரம் இல்லாததைப் பார்க்கும்போது அரசு எதனையோ மறைக்க முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி :
மின் உற்பத்திக்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அதற்கான உத்தரவை நேரில் வழங்கியதாகவும் செய்தி வந்துள்ளது. இந்தத் தனியார் நிறுவனம் எப்படி முடிவு செய்யப்பட்டது. அதற்கான டெண்டர் கோரப்பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் பட்ஜெட்டில் விளக்கம் இல்லை.
முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டுவதைப் பற்றி திமுக அரசில் படிக்கப்பட்ட பட்ஜெட்டில் விளக்கமாகச் சொல்லவில்லை என்று அப்போது கருத்து தெரிவித்த ஜெயலலிதா இப்போது படிக்கப்பட்ட பட்ஜெட்டில் அதைப்பற்றி விளக்கமாக எதுவும் கூறவில்லை. இதிலிருந்து ஊருக்குத்தான் உபதேசமோ என்று கேட்கத் தோன்றுகிறது.
சமச்சீர் கல்வி பள்ளிக் கல்வித் துறை பற்றி வெளியிடும்போது மாணவர்களின் முக்கிய பிரச்னையாக உள்ள சமச்சீர் கல்வி முறை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தமிழ் வளர்ச்சி பற்றி ஒரு சிறிய பத்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் செம்மொழி மையத்தை இடம் மாற்றியது பற்றியோ,பாவேந்தர் செம்மொழி நூலகத்தை இரவோடு இரவாக இடம் மாற்றியது பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பக்கங்கள் நிறைந்திருக்கிறதே தவிர, திட்டங்களோ, நோக்கங்களோ எதுவும் இந்தப் பட்ஜெட்டில் இருப்பதாகத் தெரியவில்லை
மு.க. ஸ்டாலின் முன்னாள் துணைமுதல்வர்:
பட்ஜெட்டுக்கு முன்பாகவே சுமார் 4ஆயிரம் கோடி ரூபாய் வரியை உயர்த்தி விட்டு, பிறகு அவசர அவசர மாக ஒரே ஒரு துறைக்கு மட்டும் வரியை குறைத்தி ருப்பது மரபுகளுக்கும், ஜன நாயக கோட்பாடுகளுக்கும் முரண்பாடாகும். இந்த அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் :
தமிழக மக்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த இந்த நிதிநிலை அறிக்கை மாமருந்தாக அமைந்துள்ளதை பாராட்டுவதோடு வரவேற்கிறோம்.
மத்திய அரசு தமிழகத் திற்கு வழங்க வேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியிருந்தால் இந்த வரிச் சுமை இருந்திருக் காது. வரியை உயர்த்துவதில் தவறில்லை என்றும் அது ஏழை மக்களுக்கு பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டுமென்றும் அண்ணா தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி:
பெண்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியது. மலைப்பகுதி, சாலை அமைப்பு உள்ளிட்ட கட்டுமான பணிகளையும் உடனடியாக செய்து முடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அ.இ.ச.ம.க தலைவர் சரத்குமார்:
மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம் தொலை நோக்கு சிந்தனையோடு அளித்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையை வரவேற்று பாராட்டுகிறேன்.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி:
தமிழ் வளர்ச்சிக்கு ஆளுநர் உரையில் கூறிய அளவுக்கு போதிய அளவு நிதிநிலை அறிக்கை யில் முக்கியத்துவம் தரப் படவில்லை. ஆனாலும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...