அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது. கடந்த, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், அ.தி.மு.க., சார்பில் ராஜ கண்ணப்பன் மற்றும் பலர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், சிதம்பரம் வெற்றி பெற்றார். மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து, ஐகோர்ட்டில், ராஜ கண்ணப்பன் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை தள்ளுபடி செய்யக் கோரி, அமைச்சர் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் தாக்கல் செய்த தேர்தல் மனுவை ஆய்வு செய்ய எங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. தேர்தல் மனுவை பரிசீலித்த கோர்ட் அதிகாரி, சில குறிப்புகளை எழுதி, திருப்பி அளித்திருப்பதாக தெரிகிறது. முதலில் தாக்கல் செய்த மனுவை மாற்றி விட்டு, புதிய மனுவில் முன் தேதியிட்டு அளித்துள்ளனர். இதன் மூலம், கோர்ட்டை மோசடி செய்துள்ளார். குறைபாடுகளுடன் தாக்கல் செய்த தேர்தல் மனுவை நிவர்த்தி செய்ய முடியாது. தேர்தல் வழக்கை தாக்கல் செய்ய வேண்டிய கால அவகாசத்துக்குப் பின், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுக்கு முரணாக தேர்தல் வழக்கு உள்ளது. தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். ராஜ கண்ணப்பன் சார்பில் வழக்கறிஞர் ஜி.சரவணகுமார் ஆஜரானார். நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவு: தேர்தல் மனுவில் சில தவறுகளை அதிகாரி சுட்டிக் காட்டியதாகவும், அதை பின்னர் சரி செய்ததாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதை கோர்ட் அதிகாரி மறுத்து, அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் யூகமாக தான் இதை எடுத்துக் கொள்ள முடியும். தேர்தல் வழக்கை அப்படியே நிராகரித்து விட முடியாது. தேர்தல் வழக்கில் குறைபாடுகள் இருப்பதால், அவ்வாறு குறைபாடு உடைய ஒரு மனுவை தேர்தல் மனுவாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. குறைபாடுகள் உடைய மனுவை, தேர்தல் மனுவாக கருத முடியாது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவ்வழக்கில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் எல்லாம், மனுவை தள்ளுபடி செய்யப்படக் கூடிய அளவுக்கு நிவர்த்தி செய்ய முடியாத குறைபாடுகள் அல்ல. எனவே, தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டியதில்லை. மனுதாரரின் (சிதம்பரம்) கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment