Monday, August 8, 2011

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு நன்மை என்று எதை குறிப்பிடுவீர்கள்?
-தினகரன், பாண்டிச்சேரி.
தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு இதுவரை எந்த நன்மையும் நிகழ்ததில்லை. தீமைதான் நிகழ்ந்திருக்கிறது.
மாறாக, ‘தமிழ் சினிமாவின் சிறப்பு எது?’ என்று கேட்டிருந்தால், என்னுடைய பதில் இப்படி இருந்திருக்கும்:
தமிழ் சினிமாவின் சிறப்பு,  பாடல்கள். பாடல்கள் என்றால் அதன் சிறப்புக்குரியவர்கள் பாடலாசிரியர்கள் அல்ல; இசையமைப்பாளர்கள்.
தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து சுப்பராமன், ஜி. ராமநாதன், சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், ராஜேஸ்வரராவ், சுதர்சனம், ஏ.எம். ராஜா, சி.ராமச்சந்திரா (வஞ்சிக்கோட்டை வாலிபன்) விஸ்வநாதன்-ராமமூர்த்தி, ஆர். கோவர்த்தனம்,  மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா.
பாடாவதி படங்களின் கதைகளைத் தாண்டி, அதன் கதாநாயகர்களின் பிம்பங்களை உடைத்து,  இன்னும் உயிர்ப்புடன் இருப்பது இந்த இசைமேதைகளின் பாடல்கள்தான். இன்றைக்கு அந்தப் படங்களின் கதாநாயகர்களாக உயர்ந்து நிற்பவர்கள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்.
தமிழ் சினிமாவின் அறிவாளிகள் என்றால், இவர்களைத்தான் நான் சொல்வேன். இவர்கள் இசையமைத்த பாடல்கள் அப்போது வெளியான காலத்தைவிடவும், இப்போதுதான் அதன் சிறப்புகள், இனிமைகள் கூடுதல் கவனம் பெறுகிறது.
கர்நாடக சங்கீதத்திற்கு இருக்கிற ஒரு ‘கிளாசிக்கல் அந்தஸ்தை’ தகர்த்து, இந்த மேதைகள் இசையமைத்த தமிழ் சினிமா பாடல்கள் அந்த இடத்தை கைப்பற்றும். கைப்பற்றிக் கொண்டிருக்கிறது.
பல இனிமையான பாடல்களை கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டே, எல்லா இசையமைப்பாளர்களும் தந்திருக்கிறார்கள். அதிலிருந்து அடுத்தக்  கட்டம் வளர்ந்தது எம்.எஸ். விஸ்வநாதன் காலத்தில்தான்.
வாத்தியக் கருவிகளின் இனிமையை, குறிப்பாக மேற்கத்திய வாத்தியக் கருவிகளான வயலின், கிட்டார், பியானோ மற்றும் வெஸ்டன் கோரஸ் (குரலிசை) இவைகளின் பங்களிப்பை சேர்த்து குழைத்து, தமிழ் சினிமாவின் பாடல்களை கூடுதல் இனிமையாக்கிவர் எம்.எஸ். விஸ்வநாதன். (‘பொன் மகள் வந்தாள்..’,  ‘எங்கே… நிம்மதி..’, ‘யார் அந்த நிலவு?..’, பார்த்த ஞாபகம் இல்லையோ?..’, அழகிய தமிழ்மகள் இவள்…’ இதுபோல் நிறைய)
தமிழ் சினிமாவின் இசையை இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர் எம்.எஸ். விஸ்வநாதன் என்றால், அதை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் இசைஞானி இளையராஜா.
நாட்டுப்புற இசை இவரின் ஊற்று என்றாலும், இவரின் உன்னதம் மேற்கத்திய கிளாசிகல். ‘கர்நாடாக இசையோ இவருக்கு சாதாரணம்’ என்பது என்னைப் போன்ற கேள்வி ஞானத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல… கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டவர்களே ஒத்துக் கொண்ட ஒன்று.
எந்தப் பொறுப்பும் அற்று எடுக்கப்பட்ட ஒரு சாதாரண ரஜினி படத்திற்குக்கூட, இவரின் பின்னணி இசை உலத் தரம் வாய்ந்த சிம்பொனியின் இசைக் கோர்வையை ஒத்து இருக்கும.
இவரின் மெட்டுகளில் உள்ள அசாத்தியமான கற்பனை, அதன் பின்னிணியில் இனிக்கும் வாத்தியக் கருவிகள், பாடல்களில் இடையில் வரும் இடையிசை (அதுஒரு உன்னத உலகம்) இப்படி ஒவ்வொரு பாடலையும், ஒரு தனி இசை ஆல்பம் போல் அவர் உருவாக்கியிருக்கிற பாடல்களைக் கேட்கும் போது, மனித மூளை இவ்வளவு ஆற்றல் உள்ளதா? என்ற வியப்புத்தான் ஏற்படுகிறது.
உலகின் அரிதான இசைஅறிஞர்களில் ஒருவர்தான் இசைஞானி இளையராஜா.
இவை எல்லாவற்றையும் விட அவரின் கூடுதல் சிறப்பாக நான் உணர்வது, இநதிய மற்றும் மேற்கத்திய கிளாசிக்கல் இண்ஸ்டுருமெண்ட்ஸ் என்று சொல்லப்படுகிற வீணை, டிரம்ஸ், வயலின், சித்தார், மிருதங்கம், கிட்டார், தபேலா, பியானோ மற்றும் வெஸ்டன் கோரஸ் (குரலிசை) இவைகளை எந்தத் தரத்தில் உபயோகப்படுத்தினாரோ,
அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவைகளுக்கு இணையாக;நாட்டுப்புற இசைக் கருவிகளான உடுக்கை, பறை, பம்பை போன்ற தோல் வாத்தியக் கருவிகளையும் மற்றும் கிராமிய மெட்டில் ஹம்மிங்,  குலவை(குரலிசை) கும்மி (கை தட்டல்) போன்றவைகளையும் பயன்படுத்தி இருக்கிறார். (‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே..’ ‘உச்சிவகுந்தெடுத்து..’ ‘ஆகாயத் தாமரை..அருகில் வந்ததோ..’ ‘வாங்கோண்ணா.. அட வாங்கோண்ணா..’ ‘ஏரியிலே எலந்தமரம்.. தங்கச்சி வைச்ச மரம்..’   இப்படி பல பாடல்கள்.)
அதேப்போல், பாடலின் இடையிசைக்கு பதிலாக நாட்டுப்புறப் பாடல் பாணியில் பாடல்களையும் பயன்படுத்தியிருக்கிறார். (பிள்ளை நிலா.. இரண்டும் வெள்ளை நிலா.. பாடலின் இடையில், ‘ஆவாரங் காட்டுகுள்ளே…’ என்று வருமே, அது போன்ற பாடல்கள்)
கர்நாடக மற்றும் இந்துஸ்தானிக்கு பயன்படுத்தப்படுகிற தபேலா, மிருதங்கம் போன்ற தோல் வாத்தியக் கருவிகள் எழுப்புகிற தாளத்தை, பறை, உடுக்கையிலும் எழுப்பி இவைகளை விட அவைகள் உயர்ந்ததில்லை என்றும் நிரூபித்திருக்கிறார்.
நாட்டுப்புற இசையை, கிராமிய சூழலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், மற்ற இசைகளைப் போல் பொதுதளத்திலும் பயன்படுத்தியது அவர் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று.
ஆக, தமிழ் சினிமாவின் சிறப்பு இசை; இசை உலகின் சிறப்பு இளையராஜா.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...