Saturday, October 15, 2016

பாத்திரமறிந்து பிச்சையிடு என நம் முன்னோர்கள் ஏன் சொல்லி வைத்தார்கள்..?

'பாத்திரமறிந்து பிச்சையிடு'
என்ற ஒரு பழமொழி வழக்கத்தில் உபயோகப்படுத்துவதன் காரணம்... 
தானம் கொடுப்பது, பிச்சையிடுவது
என்பதெல்லாம் புண்ணியம் கிடைப்பதற்காக செய்வது. அதனால், நாம் கொடுக்கும் பணம், பொருள் எதுவானாலும், அது எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்து செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்பழமொழிகள் உருவாகின.
தானம், பிச்சையெல்லாம், சத் பாத்திரத்துக்கு ( அட்சய பாத்திரத்திற்கு) கொடு என்றனர்.
யாராவது ஒருவர் வந்து, கும்பாபிஷேகத்துக்காக பணம் கேட்டால், அவர் யார், நிஜமாகவே கும்பாபிஷேகம் நடக்கப் போகிறதா என்பதை தெரிந்து கொடுக்கலாம். யாராவது கள்ளுக்கடை திறக்கப் போகிறேன் அதற்கு உதவி செய்யுங்கள்... என்று கேட்டால், அதற்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. நாம் கொடுக்கும் பணம், புண்ணிய காரியங்களுக்கு பயன்பட வேண்டும், பாவ காரியங்களுக்கு பயன்பட்டு விடக்கூடாது.
ஒரு ஊரில், ஒரு பணக்காரன் இருந்தான். அவனிடம் வந்து பிச்சை கேட்டான் ஒரு பிச்சைக்காரன். அவனுக்கு, ஒரு ரூபாய் கொடுத்தான் பணக்காரன். அதை வாங்கிப் போய், ஒரு மீன் பிடிக்கும் தூண்டில் வாங்கி, மீன் பிடித்தான் பிச்சைக்காரன். தூண்டில் மூலம் மீன் பிடித்து, விற்று கொஞ்சம் பணம் சேர்த்தான். பிறகு, அந்த பணத்தைக் கொண்டு, ஒரு மீன் பிடிக்கும் படகு வாங்கினான். படகில் போய் பெரிய மீன், சின்ன மீன் என்று நிறைய பிடித்து விற்றான். அதன் மூலம் அவன் பெரிய பணக்காரனாகி விட்டான்.
முக்கியமான தெருவில் ஒரு பெரிய மாடி வீட்டையும் வாங்கி, அதில் வசித்து வந்தான். இப்படியாக மீன் பிடிபடகுகளையும் நிறைய வாங்கி மீன் வியாபாரத்தில் முக்கிய புள்ளியானான்.
இவனுக்கு, ஒரு ரூபாய் பிச்சை போட்ட பணக்காரன், ஏழையாகி வந்தான்.
நாளடைவில், அவனது மாடி வீட்டையும் விற்க நேர்ந்தது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, எல்லாமே போய் விட்டது. அவனே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டான். தெரு, தெருவாக போய் பிச்சை எடுத்தான். ஒரு நாள், மீன் வியாபாரியின் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டான்.
முன்பு ஒரு ரூபாய் பிச்சை வாங்கினவன் தான் இந்த மீன் வியாபாரி என்று தெரியாது. வாசலுக்கு வந்து பிச்சை கேட்டவனை பார்த்ததும் அடையாளம் தெரிந்து கொண்டான் மீன் வியாபாரி.
ஐயா... நீங்கள் ஏன் இந்த நிலைக்கு வந்தீர்கள்? என்று கேட்டான். அதற்கு, அவன்,என்னவோ நான் செய்த பாவம். இந்த கதிக்கு வந்து விட்டேன்... என்றான்.
அதற்கு அந்த மீன் வியாபாரி, ஐயா... என்னை தெரிகிறதா... முன் ஒரு சமயம் நான் உங்கள் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டேன். நீங்கள் ஒரு ரூபாய் தர்மம் செய்தீர்கள்... ஞாபகமிருக்கிறதா? என்றான்.
ஞாபகப்படுத்தி, ஆமாம்... ஞாபகம் வருகிறது ஆனால், நீ எப்படி இவ்வளவு பெரிய பணக்காரனாக முடிந்தது? என்று கேட்டான். அப்போது, நடந்த விஷயங்களை விவரித்தான்.
அப்போது தான், ஒரு ரூபாய் தர்மம் செய்ததின் தவறு அவருக்கு புரிந்தது. இந்த ஒரு ரூபாயைக் கொண்டு, எவ்வளவு மீன்களை பிடித்திருப்பான்? அவ்வளவு மீன்களை பிடித்து கொன்ற பாவம் அவனை சேராமல், என்னை சேர்ந்து விட்டது.
அதனால்தான் நான் இப்படி பிச்சைக்காரனாகி விட்டேன்... என்று மனம் நொந்தபடியே அடுத்த வீட்டுக்குப் போனான்.
நாம் செய்யும் தான, தர்மம் நல்ல காரியத்துக்கு பயன்படுகிறதா, பாவ காரியத்துக்கு பயன்படுகிறதா என்று கவனித்து கொடுக்க வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் பாத்திரமறிந்து பிச்சையிடு...என்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...