Wednesday, November 23, 2022

நிறைய வீடுகளில் உள்ளது....என்ன செய்வது...

 நான் மிகவும் உயர்வாக மதிக்கும் நபர் ஒருவர். மிகவும் அறிவு கூர்மையும் சிந்தனையும் உள்ளவர்.

எனது வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களிலேயே மதிப்பு மிக்க நபர்களில் ஒருவர்.
நான் ஒருமுறை அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது மனைவி நடந்து கொண்ட விதம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
அந்த பெண்மணி அவரை அத்தனை அலட்சியமாக கையாள்வதை கண்டதும் என்னால் எனது மன வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
"என்ன கொடுமை சரவணன் சார்!" என்ற பிரபுவைப்போலவே
அதன் பின் நான் எல்லா குடும்பங்களிலும் என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தேன்.
எனது இல்லம் உட்பட பல இடங்களிலும் இப்படித் தான் இருக்கிறது.
ஆண்கள் அனைவரும் இவளுக்கு என்ன தெரியும்?" என்று மனைவி யை அலட்சியமாக எண்ணுவதும்
"இவரெல்லாம் ஒரு ஆளுன்னு இந்த உலகம் நினைக்கிறதே"! என்று கணவனை மனைவி இளப்பமாக எண்ணுவதும் இயல்பாகவே இருக்கிறது.
கணவன் எதை சொன்னாலும் அதான் எனக்கு தெரியுமே! என்று மனைவியும் உனக்கு என்ன தெரியும்? என்று
மனைவியை கணவனும் ஒருவரை ஒருவர் அலட்சியப் படுத்திக் கொள்கிறார்கள்.
கணவனின் அறிவும் திறமையும் மனைவியின் கண்ணுக்குத் தெரிவதே இல்லை.
மனைவியின் அருமை பெருமை கணவனுக்கு தெரிவதில்லை.
ஏனென்றால் நம்ம கணவன் தானே என்று மனைவியும் நம்ம பெண்டாட்டிதானே என்று கணவனும் எண்ணுவது தான் காரணம்.
இதே தான் நம்மை பற்றியும் நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். நமக்கு நம்மிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல்கள் தெரிவதேயில்லை.
பொதுவாக நமக்கு மிகவும் ஆர்வம் அதிகம் இருக்கும் ஒரு பொருளை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று விரும்புவோம்.
அப்படி கஷ்டப்பட்டு அடைந்த பொருள் ஒன்று நம் கைக்கு வந்ததும் கிடைக்கும் மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்காது.
நம் கைக்கு வந்ததும் அதன் மீது இருந்த ஆர்வம் வடிந்து விடும். இது தான் நம் மனதின் வாடிக்கை. எதுவும் கிடைக்கும் வரை தான் ஆர்வம்.
நம்மிடம் இருக்கும் பல பொருட்களின் அருமை நமக்குத்தெரிவதேயில்லை.
இக்கரைக்கு அக்கறை பச்சை என்பார்களே அதுபோல் அருகில் இருப்பதன் அருமை தெரியாது.
சமயபுரத்தில் இளம்பருவ வாழ்வின்போது மாதத்தில் ஒருமுறை கோவிலுக்குள் போய் இருந்தால் அதிகம்...
உலகே மாரியம்மனை பார்க்க ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்...
எங்கள் ஊர் அமைச்சர் அண்ணன் கே என் நேரு போல கோபுரத்தைப் பார்த்து கும்பிடு போட்டாலும் கோயிலுக்கு
நான் போனது குறைவு....
இப்போது வீட்டின் மாடியிலிருந்து சத்தம்போட்டு கூப்பிட்டால்
மலைக்கோட்டை விநாயகருக்கு காது ஜவ்வு வலிக்கும்! அவ்வளவு அருகில் இருந்தும் மலைமேல் ஏறி மாமாங்கமாகிறது....
அருகாமை என்பது ஆர்வத்தை குறைத்து விடும்.
அதனால் தான் நமது மனைவி மக்களின் திறமைகளை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.ஈகோவா?
இல்லையில்லை!
நமது திறமைகளையே நம்மால் கண்டு கொள்ள முடிவதில்லை.
நம்முடையது என்று வரும் போதே அதை பற்றிய எல்லாம் நமக்குத் தெரியும் என்கின்ற அலட்சியம் நம்மை அறியாது ஆட்டோ மேட்டிக்காக வந்து விடும்.
இது மனித மனதின் இயல்பு.இதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
நாம் அலட்சியமாக காண்பதனால் நமக்கு நமது அருமைகள் தெரிவதில்லை.
நம்மை பற்றி, நமது மனம் ,நம் உடல் பற்றிய எந்த வித அறிவும் இல்லை.
அதை எப்படி கையாள்வது என்கின்ற புரிதலும் இல்லை.
இந்த அலட்சியம் பல உண்மைகளை நம் கண்ணில் இருந்து மறைத்து விடுகிறது.
நமக்கு வரும் போது ரத்தமாக தெரிவது அடுத்தவர்க்கு என்றால் தக்காளி சட்னி என்பது இதனால் தான்.
துயரமான நேரங்களில் "அப்படி செய்திருக்கலாம் இப்படி ஏன் நீ நடந்து கொள்ளவில்லை" என்று பிறருக்கு அறிவுரை கூறும் நம்மால் நமக்கு துன்பம் வருகையில் முன்கூட்டியே அறியாமல் துடிக்கிறோம்.
எதையும் நம்மால் சமநிலையோடு காண முடியவில்லை.
தேவையில்லாது எதையும் பெரிது படுத்துவதும் சிறுமை படுத்துவதுமாக நடந்து கொள்கிறோம்.
எதையும் எதிர் கொள்ளும் ஆற்றல் நமக்குள் இயல்பாகவே இருக்கிறது.
ஆனால் அதை நாம் அறிந்து கொள்ளாது இருக்கிறோம்.
அதற்கு காரணம் அறியாமை.அறிந்து கொள்ள முயலாமை. எனக்கு தெரியாதா? என்கின்ற அலட்சியம்.
இதில் இருந்து வெளி வர வேண்டும்.அது அத்தனை
எளிது இல்லைதான் ஆனாலும் அந்த அறிவை நாம் அடைந்தே ஆக வேண்டும்.
அப்போது தான் நாம் நம் அனைத்து துயரங்களில் இருந்தும் விடுபட முடியும்.
ஆகையினால் இந்த வாழ்வை அலட்சியமின்றி வாழ்ந்து அந்த மகத்தான அறிவை அறிந்து கொள்ள முயல வேண்டும்.
இதையெல்லாம் படித்தோ கேட்டோ தெரிந்து கொள்ள முடியாது.
வாழ்ந்து அனுபவித்து நாமே உணர்ந்து தான் புரிந்து கொள்ள முடியும்!
இனியாவது வாழ்வோமே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...