Sunday, November 27, 2022

இந்தியாவில் பிறந்த மாவீரர்களுக்கு அளைவில்லை.

 முகலாயர்கள் தில்லியை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் அஸ்ஸாமை அஹோம் அரசர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். அக்பரிலிருந்து அவுரங்கசீப் வரைக்கும் எல்லா முகலாய வந்தேறிக்கும் எப்படியாவது அஸ்ஸாமைக் கைப்பற்றிவிடத் துடித்தார்கள். ஆனால் அஹோம் அரசர்கள் சாதாரணமானவர்களில்லை. அஹோமியர்களின் வீரமும், போர்த் தந்திரங்களும் உலகம் அறிந்த ஒன்று. எனவே அஹோம்-முகலாயப் போர்கள் அனைத்துமே ரத்தக்களறியில்தான் முடிந்தன. சில நேரங்களில் பெரும் கூட்டமான முகலாயப்படைகள் அஹோம் பகுதிகளை ஆக்கிரமித்தாலும் சில நாட்களுக்குள்ளேயே அவர்களை விரட்டியடித்டுவிடுவார்கள் அஹோம்கள்.

இந்தியாவில் பிறந்த மாவீரர்களுக்கு அளைவில்லை என்றாலும் அதற்கினையாக துரோகிகளுக்கும் குறைவில்லை. அப்படியான துரோகிகள் சிலர் முகலாயர்களுக்கு உதவி செய்து அஹோமியர்களை வெல்ல அவர்களுக்கு உதவினார்கள். 1661-ஆம் வருடம் முகலாயர்கள் அஹோமியர்களின் தலைநகரமான கர்காவோனைக் கைப்பற்றினார்கள். இருந்தாலும் கொரில்லாப் போர்முறைகளைக் கையாண்ட அஹோம்கள் முகலாயர்களைத் தொடர்ந்து ரத்தம் சிந்த வைத்துக் கொண்டே இருந்தார்கள். இறுதியில் முகலாயர்கள் அஹோமிய அரசருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தின்படி முகலாயர்கள் அஹோமியர்களின் தலைநகரைவிட்டு விலகினாலும் ஏராளமான அஹோமிய அரச குடும்பத்துப் பெண்களையும், குழந்தைகளையும் முகலாய அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்கள். அதன்படியே அவர்கள் அனுப்பியும் வைக்கப்பட்டார்கள். அதற்கும் மேலாக முகலாயர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பல கேவலமான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த அவமானகரமான ஒப்பந்தங்களுக்கு கையொப்பம் இட்ட அஹோமிய அரசர் ஜெயத்வஜ்சிங் மனமுடைந்து இறந்துவிட்டார். அஹோமியர்களின் மன உறுதி குலைந்துவிட்டது. 1655-ஆம் வருடம் லச்சித் போர்புக்கன் அஹோம் படைத்தளபதியாக பதவியேற்கையில் முற்றிலும் மனச்சோர்வுக்கு ஆட்பட்ட, போரிடப் பயிற்சி எதுவுமில்லாத, உளவாளிகள் நிறைந்ததாக இருந்தன அஹோமியப் படைகள்.
எனவே லச்சித் அதனைச் சீர்படுத்த முனைந்து ஒவ்வொரு படைவீரனின் தரத்தையும், போர்க்குணத்தையும் உயர்த்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். அஹோமியர்களின் பாதுகாப்பை பலப்படுத்தத் தயங்கிய, தனது கடமையைச் சரிவரச் செய்யாத தனது சொந்த மாமனையே சிரச்சேதம் செய்கிறார் லச்சித். அதனைக் கண்டு மலைத்துப்போன அவனது படைவீரர்கள் லச்சித்துக்கு பிர் (வீரன்) எனப்பட்டம் சூட்டுகின்றனர்.
லச்சித் அடுத்த இரண்டு வருடங்கள் தனது படைகளுக்கு முறையான பயிற்சி அளிப்பதிலும், நவீன ஆயுதங்களையும், போர்த்தந்திரங்களை உபயோகிக்கவும் கற்றுக் கொடுக்கிறார். மெல்ல,மெல்ல அஹோமியப் படைகள் தங்களின் போர்க்குணத்தை மீட்டெடுக்கின்றன. முகலாயர்களை எதிர்கொள்ளத் தயாராகின்றன லச்சித்தின் படைகள். இருந்தாலும் அஹோமியப் படைகளுக்குள் பிளவுகளும், முகலாய ஒற்றர்களும் நிறைந்து இருக்கிறார்கள்.
1667-ஆம் வருடம் அஹோமியப் படைகள் பிரம்மபுத்டிரா நதியின் வழியாக கவுஹாத்தியை முகலாயர்களிடமிருந்து மீட்டெடுக்கப் பயணிக்கின்றன. அந்தப் போரில் முகலாயர்களை வெற்றிகரமாக விரட்டியடித்த லச்சித்தின் படைகள் அஸ்ஸாமைச் சுற்றியிருந்த முக்கியமான கோட்டைகளை மீட்டெடுக்கும் பணியில் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஈடுபடுகின்றன. இதனைக் கேள்விப்படும் அவுரங்கசீப் கோபத்தின் உச்சிக்கே சென்றான். எனவே லச்சித்தின் படைகளுக்கு எதிராக 70,000 முகலாயப்படைகளை அனுப்பி வைக்கிறான் அவன். லச்சித்தைக் கொன்று அஹோமை முற்றிலுமாக அழிக்கவேண்டும் என உத்தரவிடுகிறான் அவுரங்கசீப்.
1669-ஆம் வருடம் முகலாயப்படைகள் அஸ்ஸாமை அடைகின்றன. அதனைத் தொடர்ந்து போர் மூள்கிறது. ஏற்கனவே லச்சித்தினால் பயிற்சியளிக்கப்பட்ட அஹோமியர்கள் கொரில்லாப் போர்முறைகளிலும், கடற்போரிலும் சிறந்தவர்களா இருந்தார்கள். முகலாயர்களோ சமதளப் போரில் மட்டுமே வல்லவர்கள். எனவே இரண்டு படைகளும் தங்களுக்குச் சாதகமான பகுதிகளில் மட்டுமே போர்புரியத் தேர்ந்தெடுத்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்தப் போர்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. முகலாயர்கள் அவர்களுக்குக் கைவந்த கலையான எதிராளியின் துரோகிகளுக்குக் கையூட்டுக் கொடுத்து அஹோமியப் படைகளை வெல்ல முயன்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இருந்த படைகளுக்கும் குறைவில்லை. ஆட்சேதம் ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தை இட்டு நிரப்ப புதிய படைகள் வந்து கொண்டே இருந்தன. மெல்ல, மெல்ல முகலாயர்களின் கை ஓங்கத் துவங்கியது.
கடற்போரில் அல்லது நீர்வழிப் போரில் தங்களுக்கு வலிமை குறைந்திருப்பதனை உணர்ந்து கொண்ட முகலாயர்கள் அதனைச் சரிப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். அவர்களில் கப்பல்படையும் உறுதியடையத் துவங்கியது. 1671-ஆம் வருட காலத்தில் முகலாயர்களிடம் பெரும் கப்பல்கள் கொண்ட படை ஒன்று இருந்தது. அதற்கு எதிராக அஹோமியர்களிடமோ சின்னஞ்சிறு படகுகள் மட்டுமே இருந்தன.
தொடர்ச்சியான தோல்விகள் காரணமாக அஹோமியப் படையினர் மீண்டும் மனச்சோர்வு அடைந்திருந்தார்கள். குவஹாத்தியின் எல்லை வரை அவர்கள் விரட்டப்பட்டிருந்தார்கள். இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட லச்சித் படுத்த படுக்கையாக இருந்தான். அவனது மருத்துவர்கள் லச்சித்தின் நோயைக் குணப்படுத்தும் வழியை அறியாமல் தவித்தார்கள். லச்சித் இறந்து போவது உறுதி என்பதினை முகலாயர்கள் அவர்களின் ஒற்றர்களின் வாயிலாக அறிகிறார்கள். அஹோம்களை அழிக்க இதுவே சரியான சமயம் எனக் கருதும் முகலயப்படைகள் முனாவர்கானின் தலைமையில் பிரம்மபுத்திரா வழியாக பெரும் கப்பல்களில் வந்து இறங்கின.
தன்னுடைய கப்பலில் அமர்ந்து ஹுக்கா பிடித்துக் கொண்டிருந்த முனாவர்கான், தன்னிடம் பிடித்துவரப்பட்ட ஒரு அஹோமியப் பெண்ணைத் தடவிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தான். அங்கிருந்து சராய்கட் முழுமையையும் அவனால் பார்க்க இயலும். பிரம்மாண்டமான விரிவுடன் பாயும் பிரம்மபுத்திரா நதி சராய்கட்டில் மிகக் குறுகலாக பாய்ந்து கொண்டிருக்கும். அவனது கப்பல்களை சராய்காட்டின் வழியாக உள்ளே கொண்டு செல்ல முடிந்தால் அஹோம்கள் தப்பிக்கும் அத்தனை வழிகளையும் அடைத்துவிடலாம் என்பது அவன் எண்ணம். ஒவ்வொரு முகலாயக் கப்பலிலும் பதினாறு பீரங்கிகள் இருந்தன. முகலாய வெற்றி ஏற்கனவே நிச்சயமாகியிருந்தது.
"இன்றிரவு நான் பத்து அஹோமியப் பெண்களுடன் குலாவுவேன். அந்தப் பெண்கள் அனைவரும் அரச குடும்பத்துப் பெண்களாக இருப்பார்கள். நாளை அஹோம்களின் காமாக்யா ஆலயத்தை இடித்து அழிப்போம். அதனைக் கேள்விப்படும் அவுரங்கசீப் எனக்கு உயர்பதவிகள் அளிப்பான்" என எண்ணிப் பெருமகிழ்ச்சி கொள்கிறான் முனாவர்கான்.
இதற்கிடையே, நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் லச்சித்தின் அறைக்குள் அவனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதிகள் நுழைகிறார்கள். முகலாயர்களிடம் எப்படி அமைதியாகச் சரணடைவது என்பதினைக் குறித்து லச்சித்துடன் விவாதிப்பது அவர்களின் நோக்கம்.
அதைக் கேட்டுக் கோபமடையும் லச்சித் தன் மீது போர்த்தியிருந்த போர்வையைத் தூக்கியெறிகிறான், "இந்த தேசத்தின் பாதுகாப்பு என் கையில் இருக்கிறது. ஒரு கோழையைப் போல ஆக்கிரமிப்பாளர்களிடம் சரணடைந்து விட்டு நான் எப்படி என் மனைவி, பிள்ளைகளிடம் போவேன்?" என கர்ஜிக்கிறான்.
உடனடியாக ஏழு போர்ப்படகுகள் தயாராக்கப்படுகின்றன. ஒரு படகில் தாவியேறும் லச்சித் தனக்குப் பின்னால் அணிவகுத்துவரும்படி மற்ற ஆறுபடகுகளுக்கு உத்தரவிடுகிறான்.
அதனை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த முகலாயர்கள் குழப்பமடைகிறார்கள். திடீரென்று சூழ்ந்த பனிப்படலம் லச்சித்தின் பக்கத்தில் நடப்பதனை முழுமையாகப் பார்க்கவிடாமல் தடுக்கிறது. திடீரென அவர்களின் கப்பலை நோக்கி ஒரு படகு வேகமாக வருவதனைக் கவனிக்கிறார்கள். முகலாயப்படைகள் அந்தப் படகினை நோக்கி பீரங்கியால் தாக்குகிறார்கள். ஆனால் பீரங்கிக் குண்டிலிருந்து அந்தப் படகு தப்பிவிடுகிறது. திடீரென பக்கவாட்டில் திரும்பும் அந்தப் படகு நிற்காமல் கப்பலை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இன்னொரு படகும் அவர்களின் கப்பலை நோக்கி வருவதனைக் காண்கிறார்கள் முகலாயர்கள். அதனைத் தொடர்ந்து இன்னொன்று. அதன் பின்னால் இன்னுமொன்று...எல்லாப் படகுகளும் வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. பீரங்கிக் குண்டிலிருந்து தப்புவதற்காக எல்லாப்படகுகளும் வளைந்து, வளைந்து வந்து கொண்டிருக்கின்றன.
முதலாவது படகு முகலாயர்களின் படையணிக்குள் நுழைகிறது. அவ்வளவு அருகில் இருக்கும் படகினை நோக்கி முகலாய பீரங்கிகளால் சுடுகின்றன என்றாலும் படகுக்கு பாதிப்பு எதுவும் உண்டாகவில்லை.
கப்பலில் அமர்ந்து ஹுக்கா புகைத்துக் கொண்டிருந்த முனாவர்கான் மெல்ல எழுந்து உடைகளை அணிந்து கொள்ளத் துவங்குகிறான். அவனருகே உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணை மெல்லச் சீண்டுகிற நேரத்தில் லச்சித்தின் முதலாவது படகு அங்கு வந்தடைகிறது. சண்டை ஆரம்பமாகிறது. முனாவர்கானின் பின்னால் வந்து கொண்டிருந்த அந்த வேகமான படகினைப் பார்க்கும் அந்தப் பெண் கூச்சலிட்டு முனாவர்கானை உஷார்ப்படுத்துகிறாள். முனாவர் திரும்பிப் பார்க்கிறான்.
அவனுக்கு நேராக லச்சித்தின் படகு நின்று கொண்டிருக்கிறது. முனாவர்கான் குழப்பமடைகிறான். இவன் எப்படி இங்கு வந்தான்? கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு துப்பாக்கி குண்டு முனாவர்கானின் நெற்றியைத் துளைத்துக் கொண்டு செல்கிறது.
முகலாயக் கப்பல்படைத் தளபதி செத்து விழுந்தான்.
லச்சித்தின் வீரம் அவனுக்குப் பின்னால் வந்த மற்ற ஆறுபடகுகளில் வந்த அஹோமியர்களை உற்சாகப்படுத்துகிறது. லச்சித்தின் ஏழு படக்குகளுடன் மேலும் பல சிறுபடகுகள் சேர்ந்து கொள்கின்றன. வேகமாகச் செல்லக்கூடிய, சிறிய, கையாள்வதற்கு எளிதான அந்தப் படகுகளுக்கு முன்னால் மிகப் பெரிதான, ஆயுதங்கள் நிறைந்த ஆனால் மெதுவான முகலாயக் கப்பல்கள் தாக்குப் பிடிக்க இயலாமல் திணறுகின்றன. முகலாயப்படைகள் இதுமாதிரியான வேகமான தாக்குதல்களை எதிர்நோக்கியிருக்கவில்லை.
அஹோமியர்களின் படகுகள் முகலாயர்களின் கப்பல்களைச் சூழுகின்றன. பிரம்மபுத்திராவின் குறுக்கே ஒரு பாலத்தைப் போல பல படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன.
முனாவர்கானைத் தொடர்ந்து முகலாயர்களின் மூன்று பெரிய படைத்தளபதிகள் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த முகலாயப்படையினரை அஹோமியர்கள் தாக்கிக் கொல்ல ஆரம்பித்தார்கள்.
முகலாயப்படைகள் சின்னாபின்னமாக்கப்பட்டன. அங்கு நடந்த ஆற்றுப் போரில் அஹோமியர்கள் பெரும் வெற்றி பெற்றார்கள். நான்காயிரம் முகலாயப்படையினர் கொல்லப்பட மற்றவர்கள் உயிர் பிழைத்தால் போதுமென அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
கப்பல்படை வைக்க ஆசைப்பட்ட முகலாயர்களின் ஆசை மண்ணோடு மண்ணானது. அந்தப் போரினைத் தொடர்ந்து மொத்த அஸ்ஸாமும் முகலாயர்களின் பிடியிலிருந்து விடுதலை அடைந்தது. அஹோமியர்களின் கைகளால் கொல்லப்பட்ட முகலாயர்கள் காரணமாக முகலாயப்படைகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது. இந்தியாவின் பிற பகுதிகளில் ராஜபுத்திரர்களும், மராத்தாக்களும், சீக்கியர்களும் முகலாய வந்தேறிகளை ரத்தம் சிந்த வைத்துக் கொண்டிருந்தார்கள்.
சராய்கட் போரில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த லச்சித்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அடுத்த ஓராண்டில் இறந்துவிட்டான். ஆனால் அவன் இறப்பதற்கு முன்னர் இந்தியாவின் சுதந்திரப் போருக்குப் புது ரத்தம் பாய்ச்சிவிட்டே இறந்தான் என்பது நாமனைவரும் பெருமை கொள்ளத்தக்க ஒன்று.
சின்னஞ்சிறு படையை வைத்து, தங்களைத் தாக்க வந்த முகலாயர்களை வென்ற லச்சித்தின் வீரம் முகலாயர்களின் தலைவிதியைப் புரட்டிப் போட்டுவிட்டது. அதில் பெற்ற அடியிலிருந்து அவர்களால் மீளவே இயலவில்லை. அப்படிப்பட்ட மாவீரன் லச்சித் போர்புகானின் பிறந்ததினம் இன்று!
இந்தியர்கள் நாம் அனைவரும் இந்த வீர வரலாறுகளை ஒருபோதும் மறக்கலாகாது. இதனை அவர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லித் தரவேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...