Saturday, November 26, 2022

*இன்றைய சிந்தனை: பலவீனம்!*

 “எனக்கொரு வீக்னெஸ் இருக்கு. இல்லேன்னா நான் வாழ்க்கைல ஜெயிச்சு கொடி நாட்டியிருப்பேன்” எனும் உரையாடலை எல்லா இடங்களிலும் சகஜமாகக் கேட்கலாம்.

பலவீனங்கள் இல்லாத மனிதன் இல்லை. ஆனல் பலவீனத்தை முதலீடாய்க் கொண்டு வாழ்வில் வெற்றிபெற்றவர்களைப் பார்க்கும் போது தான் பலவீனங்கள் பலவற்றை நோக்கிய படிக்கட்டுகள் எனும் உண்மை புரியும்.
உலகைக் கலக்கிய பீட்டில்ஸ் இசைக்குழுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுடைய ஆரம்ப காலத்தில் ஒரு ரிக்கார்டிங் நிறுவனத்திடம் போய் ஆல்பம் போடுவதற்கான வாய்ப்பைக் கேட்டார்கள். பாட்டைக் கேட்ட நிறுவனத்தினர் “ பாட்டு பரவாயில்லை.
ஆனா உங்க கிட்டார் சவுண்ட் மண்டையைப் பொளக்குது. அதனால இதை தேர்வு செய்ய முடியாது” என அனுப்பி வைத்தனர். இன்றைக்கு பீட்டில்ஸ் குழுவினரின் பலமாகக் கருதப்படுவதே அந்த கிட்டார் இசை தான்!
அந்த அதிரடிக்கும் சத்தத்துக்காகவே அவர்கள் உலகம் முழுவதும் பிரபலமானார்கள் ! அந்த கிடார் இசையை கழித்துப் பார்த்தால் பீட்டில்ஸ் இன்று இல்லை !
“ஐயோ நாலு பேரு சொல்லிட்டாங்களே... இது ஒரு பெரிய குறை போல இருக்கு. இனிமே கிட்டார் இசையை கம்மியா வைச்சு மியூசிக் போடுவோம்” என்று அவர்கள் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அவர்களுக்கென ஒரு தனி அடையாளம் இல்லாமலேயே போயிருக்கும். எது பலவீனம் என்று மற்றவர்கள் நினைத்தார்களோ அதையே தங்களது பலம் என அவர்கள் நிரூபித்தார்கள் .!
நமது வாழ்க்கையிலும் பல விஷயங்களை நாம் பலவீனம் என நினைத்திருப்போம். ஆனால் அதே விஷயங்கள் தான் நமக்கு பலமான விஷயங்களாக மாறிவிடும். “சே என் பல்லு கொஞ்சம் அசிங்கமா இருக்கு” ​​என புலம்பிக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு திடீரென வாய்ப்பு வரும் “உங்க பல்லு ரொம்ப அழகா இருக்கு. மாடலா நடிக்க முடியுமா ?”. அல்லது காதலன் கசிந்துருகி சொல்வான், “உன் பல்லு தான் எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம்”.
எனக்கு பலவீனம் இருக்கிறது என புலம்புவதால் உண்மையில் எதையுமே சாதிக்க முடியாது. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன அறிமுகம். இயற்பியலுக்காக ஏகப்பட்ட பங்களிப்பைச் செய்தவர் அவர். அவருடைய “த பிரிஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” நூல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் “அதிகம் விற்பனையாகும்” புத்தகமாக இருந்தது. தமிழில் காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என வெளியான இந்த நூல் இன்றும் உலகின் சிறந்த நூல் என பாராட்டப்பட்டது.
இவர் உடலின் பெரும்பாலான பகுதிகள் செயலிழந்த நிலையில் இருப்பவர். வீல் சேரில் தான் வாழ்க்கை. உடல் பாகங்கள் ஏதும் அசையாது. பேசுவதற்குக் கூட ஒரு கணினி வேண்டும் எனும் நிலை ! ஆனாலும் இவருடைய சாதனைகளின் தாகம் மட்டும் குறையவே இல்லை. இந்த நோய் இருப்பதனால் முழு நேரத்தையும் சிந்தனையிலும், வாசிப்பிலும் செலவிடுகிறேன் என்கிறார் இவர் தன்னம்பிக்கையாக. பலவீனத்தை பலமாய்ப் பார்க்க மனம் பலமாய் இருக்க வேண்டும். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்டம் அந்த மனம் இருக்கிறது. அதனால் தான் அவர் இன்னும் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார்.
ஒருவருடைய பலம் இன்னொருவருக்கு பலவீனமாகும். ஒருவருடைய பலவீனம் இன்னொருவருக்கு பலமாய் இருக்கும். புல்லாங்குழலை எடுத்துக் கொள்ளுங்கள். துளைகள் இல்லையேல் அதில் இசை இல்லை. மிருதங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் துளைகள் இருந்தால் அதில் இசை இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம், அடுத்தவருடன் ஒப்பிட்டு நமது பலங்களை பலவீனமாகக் கருதாமல் இருக்க வேண்டியது முக்கியம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது. பலவேளைகளில் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அந்த வடிவமாகவே நாம் மாறிவிடுகிறோம். பிறருடைய விருப்பங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நமது இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் வேகத் தடையாக அமைந்து விடுகிறது. பல வேளைகளில் அந்த விமர்சனங்கள் பெரும் புதை குழிகளாய் மாறி நம்மை விழுங்கி விடுவதும் உண்டு.
பல வேளைகளில் நம்மால் எதைச் செய்ய முடியாது என்பதைப் பற்றியே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் அது சமூகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்களுடனான ஒப்பீடாகவே இருக்கும். பிறர் பலவீனமாய் நினைக்கும் விஷயம் தான் நம்மை உலகுக்கே கொண்டு போய் சேர்க்கும் பலமான விஷயமாய் இருக்கும்.
*இது என்னோட பலவீனம் என நாம் நம்பும் வரை அது நம்முடைய பலவீனமாய் தான் இருக்கும். இது பலவீனமல்ல பலம் என நாம் நம்பும் வினாடியில் நமது பலவீனமே நமது மிகப்பெரிய பலமாய் மாறிவிடும்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...