Saturday, November 26, 2022

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து மத்திய அரசு பேசுவதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தான்.

 'தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்'

என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணையின் போது
* தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து மத்திய அரசு பேசுவதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தான்.
* தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலத்தில் ஓய்வு பெறுவதை கருத்தில் கொண்டே மத்திய அரசு நியமனங்களை மேற்கொள்கிறது.
* தலைமை தேர்தல் ஆணையர்களின் அதிகாரத்தை வரையறுக்கும் தேர்தல் ஆணைய சட்டம் 1991ன் பிரிவு 4ல் அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அவர்கள் தேர்தல் ஆணையர்களாக நீடிக்கலாம் என சட்டம் கூறுகிறது.
* இந்த சட்டத்தின் 2வது அம்சமான 65 வயது வரை என்பதை கருத்தில் கொண்டே தலைமை தேர்தல் ஆணையர்களை அரசு நியமிக்கிறது. இதனால், தேர்தல் ஆணையம் பலவீனமாகவே இருக்கிறது.
* ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 8 ஆண்டுகளில் 6 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்துள்ளனர்.
* தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 2015ல் இருந்து 2022 வரையிலான 7 ஆண்டுகளில் 8 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாகி உள்ளனர்.
* தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட இருப்பவர்களின் பிறந்த தேதி அரசிடம் இருப்பதால், அதை அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இது மிக மிக மிக மோசமான நடவடிக்கை.
* 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்து தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட டி.என். சேஷன் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்திற்குத் தேவை.
* பலவீனமான தேர்தல் ஆணையர்களின் தோல்களில் அதிகப்படியான அதிகாரச் சுமை உள்ளது. எனவே, இந்த பொறுப்புக்கு மிகச் சரியான நபர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புகிறது.
என்றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் காட்டமாக தெரிவித்து உள்ளார்.
அதோடு
"புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி இடம்பெறும் வகையிலும், நியமனம் தொடர்பாக புதிய சட்டமும் கொண்டு வர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்."
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் உள்நோக்கம் உடையதாகவும், மத்திய அரசின் முடிவுகளில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த விரும்புவது போலவும் இருக்கிறது.
* ஏனெனில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனமும் வெளிப்படையாக நடப்பது கிடையாது.
'கொலீஜியம்' முறையில் நீதிபதிகள் நியமனம் மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பரிந்துரையின் பேரில் மட்டுமே செய்யவேண்டி இருக்கிறது.
* தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவி கால வரையறையும் 65 வயது என்பதே.
* இருவரும் நேரடியாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய, சுய அதிகாரங்களை கொண்ட ஆளுமைகள்.
* கடந்த ஏழு ஆண்டுகளில் எட்டு தலைமை தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருந்து உள்ளனர் என்று குறைபட்டு கொள்கின்றனர்.
ஆனால்
72 ஆண்டு கால உச்ச நீதிமன்ற வரலாற்றில் இப்போது இருப்பவர் 50 வது தலைமை நீதிபதி.
அது மட்டுமல்ல 2014 முதலான எட்டு ஆண்டுகளில் இப்போது இருக்கும் தலைமை நீதிபதி பத்தாவது ஆள்.
இவர்களால் மட்டும் எப்படி சரியாக, சுதந்திரமாக, சுமை இல்லாமல் செயல்பட்டிருக்க முடியும், என்று அவர்களுக்கு தோன்றி இருக்க வேண்டும் அல்லவா?
* 1990 - 96 வரை டிஎன் சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக சிறப்பாக செயல்பட்டது போல, இப்போது சிறந்த ஆணையரை தேர்ந்தெடுக்க உச்ச நீதிமன்றம் விரும்புகிறது என்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் .
* ஆனால் நீதித்துறை வரலாற்றில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திராசூட் அவர்களின் தந்தையான ஒய்வி சந்திராசூட் மட்டுமே 1978 முதல் 1985 வரை தலைமை நீதிபதியாக அதிக காலம் பதவியில் இருந்துள்ளார். சிலர் அதிகபட்சமாக இரண்டரை ஆண்டுகளும், சராசரியாக ஒன்றரை ஆண்டுகள் என்பதே.
* குறைந்த காலம் பணியாற்றியவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றோ, பெரும் சுமையுடன் பலவீனமாக பணியில் ஈடுபட்டனர் என்றோ அர்த்தம் ஆகிவிடுமா?
ஏனெனில் கடைசியாக ஓய்வு பெற்ற யு யு லலித் அவர்கள் 27/08/2022 முதல் 8/11/2022 வரையிலான 73 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
அவரது பணியில் ஏதேனும் பலவீனமான செயல்களை உச்ச நீதிமன்றம் கண்டிருக்குமா?
தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதியையும் இணைத்துக் கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு விரும்புகிறது.
ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்பதால்
'கொலீஜியத்திற்கு' மாற்றாக
2014 ம் ஆண்டில் 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம்' பாராளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் முழு ஆதரவோடும், குடியரசு தலைவரின் ஒப்புதலோடும் சட்டமாக்கப்பட்டது.
அந்த சட்டத்தின் படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனமானது வெளிப்படையாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த சட்டத்தை 'அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என்று தீர்ப்பளித்து, சட்ட திருத்தத்தை நிராகரித்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
காரணம்
'புதிய நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடன், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்கள் இடம்பெறுவார்கள்' என்பதாலேயே.
ஆனால் இதே உச்ச நீதிமன்றம்,
"தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில்
உச்ச நீதிமன்ற நீதிபதியும் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறது."
இது எப்படி நியாயம் ஆகும்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய மத்திய அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவுகளிலும் சந்தேக பார்வையுடன் உச்ச நீதிமன்றம் அணுகுவது முற்றிலும் முறையற்ற, சர்வாதிகார சிந்தனையாகவே தோன்றுகிறது.
தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரின் அதிகார வரம்புகள் மற்றும் செயல்பாடுகளின் எல்லைகள் அனைத்தும் ஏற்கனவே வகுக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் படியே சுதந்திரமான ஆளுமையாகவே உள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு சட்டம் இயற்றிய போது, நீதிமன்ற சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவது சரியானதல்ல என்று சொல்லும் உச்ச நீதிமன்றம்
தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு என்பது தகுதியின் அடிப்படையிலும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடும், குடியரசு தலைவரின் ஒப்புதலோடும் ஜனநாயக முறைப்படி நடைபெறுகின்ற பட்சத்தில்
மத்திய அரசு பலவீனமான தலைமையை உருவாக்குகிறதோ என்று உச்ச நீதிமன்றம் சந்தேகம் கொள்வது சரியான செயலா?
'உச்ச நீதிமன்றம் எல்லையற்ற அதிகாரத்தை கொண்ட சர்வாதிகார அமைப்பு அல்ல.
அதேநேரம்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பும் அல்ல.'
"உச்ச நீதிமன்றம் லட்சுமணன் ரேகையை தாண்டாமல் இருப்பதே ஜனநாயகத்திற்கு நல்லது."

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...