நாமெல்லாம் நான் தமிழன்டா, நான் சென்னைக்காரன்டா, நான் அந்த சாதிக்காரன்டா, அவன் வடக்கன்டா என்று மார்தட்டிக்கொண்டு இன்னும் நாமல்லாம் மனிதர்கள்டா என்று சொல்வதற்கு திராணியில்லாமல் இருந்து கொண்டிருக்க.......
தன் 18 வயதில் முதன் முதலில் ஆஸ்ட்ரியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் வெர்னர். வாரணாசியில் அங்கிருந்த லெப்ரசி நோயாளிகளையும் அவர்கள் சமுதாயத்திலிருந்து தனிமை படுத்தப்பட்ட நிலையில் இருப்பதையும், பார்த்தவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அது அவர் மனதிலேயே தேங்கிக்கிடக்க பல வருடங்களுக்கு பிறகு திரும்பவும் வாரணாசி வந்து அங்கு இருந்தவர்களை படம் பிடித்துச் சென்று தன் நாட்டில் இருந்தவர்களிடம் இவர்கள் நிலையை எடுத்துக் கூறி கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு திரும்ப இந்தியாவிற்கு வந்து, தமிழ் மாநிலத்தில் லெப்ரசி நோயால் அவதிப்பட்டுக்கொண்டு, அது தொற்று வியாதியில்லை என்று அறிவியல் பூர்வமாக அறிவித்த பின்னும் அவர்கள் மற்ற மனிதர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, உணவுக்கே வழியில்லாமல் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர்களை, இவர்களுக்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று 17 வருடங்களாக தன் மனைவியுடன் இங்கேயே தங்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கை கொடுத்து, அரசின் அனுமதி பெற்று, ஓவியக்கலையை கற்றுக்கொடுக்கிறோம், உங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தி விற்று அதிலிருந்து நீங்கள் உங்கள் வாழ்வுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வழிவகுக்குகிறோம் என்று நம்பிக்கையளித்து முதலில் இருவர், பிறகு எழுவர், அதன் பிறகு இருபது பேர் என வரத்தொடங்கி இன்று அவர்களில் யாருமே பிச்சையெடுக்க வேண்டிய அவசியமில்லாமல் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை புதிதாக வருபவர்கள் ஓவியம் கற்றுக்கொள்வதற்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியொரு மனிதரை எதிர்பாரா விதமாக மஹாபலிபுரம் Taccos Seafood Restaurant இல் சந்தித்தோம். எத்தனை அழகான மனிதர்? எத்தனை நேயம்? நாங்கள் உட்கார்ந்திருந்த 3 மணிநேரத்தில் அவர் அம்மா, ஆஸ்ட்ரியாவில் அவர் வீடு, அவர் பிள்ளகைள், பேரப் பிள்ளைகள் அத்தனை பேரின் புகைப்படமும் காட்டி, அன்றன்று அந்த நிமிடத்தில் வாழ்வதின் நிம்மதி பற்றி என பல விஷயங்களை பகிர்ந்து, சுபாவிற்கு அன்று பிறந்தநாள் என எங்கள் பேச்சிலிருந்து புரிந்து கொண்டு restaurant owner இடம் எங்களுக்குத் தெரியாமல் ஒரு குல்ஃபி வாங்க செய்து, மெழுகுவர்த்தியுடன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடித் தீர்த்தோம்.
கடல் கடந்து வந்து தன் 50 வயதிற்கு மேல் தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை விட்டு தொலைவில் வந்து அமர்ந்து துன்பத்தில் இருக்கும் இன்னொரு நாட்டு மனிதர்கள் மேல் கருணை கொண்டு தன் வாழ்நாளை அவர்களுக்காக செலவிடும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
இத்தனை ஏற்றத்தாழ்வுகளை புகுத்தி வாழ்ந்து வரும் வாழ்வின் பயணத்தில் இப்படிப்பட்ட மனிதர்களை சந்திப்பதென்பது ஒரு வரம் ! 

No comments:
Post a Comment