Sunday, June 19, 2011

மகளிருக்கான தோட்டக்கலை கல்லூரி ஸ்ரீரங்கம் தொகுதியில் ரூ.190 கோடியில் திட்டப்பணிகள்; ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், தொகுதியில் பல்வேறு அரசு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நல உதவிகளை வழங்கவும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 10.30 மணிக்கு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
மகளிருக்கான தோட்டக்கலை கல்லூரி ஸ்ரீரங்கம் தொகுதியில் ரூ.190 கோடியில் திட்டப்பணிகள்; ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்
 
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஜெயலலிதாவை வரவேற்றனர்.   விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் புறப்பட்டார். அப்போது அங்கு அங்கு திரளாக கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இரு விரல்களை உயர்த்தியபடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.
 
ஜெயலலிதா அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் புன்முறுவல் செய்தபடி வணக்கம் தெரிவித்தார். பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வயதான பக்தர்களின் வசதிக்காக, 2 பேட்டரி கார்களை ஜெயலலிதா வழங்கினார்.   நேற்று மாலை ஸ்ரீரங்கத்தில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் மேலசித்திரை வீதி-தெற்கு சித்திரை வீதி சந்திப்பில் விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
 
விழா மேடைக்கு முன்பு இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா வந்தபோது அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் உற்சாகம் பொங்க கைகளை அசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர்களை நோக்கி ஜெயலலிதா சிரித்த முகத்துடன் கைகளை அசைத்தார்.   விழாவுக்கு தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்.ஆர் சிவபதி முன்னிலை வகித்து பேசினார்.
 
தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வரவேற்று பேசினார். பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரூ.190 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு சுமார் 430 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஜெயலலிதா பேசினார்.  
 
ரூ.36 கோடியே 40 லட்சம் செலவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோவிலுக்கு சொந்தமாக, கொள்ளிடக்கரையில் பஞ்சக்கரை சாலையில் உள்ள 8 ஏக்கர் 60 சென்ட் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி, ரூ.40 கோடி செலவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், மணிகண்டம் ஒன்றியம், நவலூர்குட்டப்பட்டு வேளாண்மை கல்லூரிக்கு அருகே மகளிருக்கென ஒரு புதிய தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்பட ஸ்ரீரங்கம் தொகுதியில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் பற்றி தனது பேச்சில் ஜெயலலிதா விரிவாக குறிப்பிட்டார்.
 
விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சியம்மாள் நன்றி கூறினார். முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் வழியில், மாம்பழச்சாலையில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார்.   ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இன்று முதல் 2 நாட்கள் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் ஜெயலலிதா நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
 
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். அப்போது 5 இடங்களில் அவர் வாகனத்தில் இருந்தபடியே பேசுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்த கிராமங்களில் நன்றி தெரிவிக்கிறார். மணிகண்டம் ஒன்றியத்தை சேர்ந்த 5 இடங்களில் ஜெயலலிதா வாகனத்தில் இருந்தபடியே பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி ஜெயலலிதா செல்லும் பாதை, பேச இருக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...