Thursday, June 30, 2011

தயாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் விசாரணை: மந்திரி பதவியில் இன்னும் எத்தனை நாள்?

" ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது பற்றிய மர்மம் நீடிக்கிறது.


ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம், தி.மு.க., வின் முக்கிய முகங்களாக இருந்த ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரை சிறைக்குள் தள்ளி அக்கட்சியை பெரும் இக்கட்டில் தள்ளிவிட்டது. இந்த ஊழல் வழக்கின் மூன்றாவது குற்றப்பத்திரிகையை விரைவில் சி.பி.ஐ., தாக்கல் செய்யவுள்ளது.இதில் தயாநிதியின் பெயர் இடம்பெறலாம் என்று சி.பி.ஐ., வட்டாரங்கள்கூறுகின்றன. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். ஜனாதிபதியின் ஐதராபாத் பயணம் காரணமாக, வரும் 10 ம் தேதி வாக்கில் தான் அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளது. இந்த மாற்றத்தில் தயாநிதி தலை தப்புவது சிரமமே. இந்த சூழ்நிலையில்தான் நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தயாநிதி சந்தித்துப் பேசினார். ரேஸ்கோர்ஸ் சாலையின் பிரதமர் இல்லத்தில், மதியம் 12 மணியிலிருந்து 12.15மணிவரை இந்த சந்திப்பு நீடித்தது. பிரதமரை சந்தித்துவிட்டு வந்த தயாநிதி, நேராக தனது அமைச்சகத்திற்கு வந்தார். கடந்த சில நாட்களாகவே அமைச்சரவை பக்கம் வராமல் இருந்த அவர், பிரதமரை சந்தித்துவிட்டு உடனேயே அமைச்சகத்துக்கு வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


பிரதமருடனான சந்திப்பு குறித்து தயாநிதி தரப்பு கூறுகையில், "அமைச்சக ரீதியிலான விஷயங்கள்குறித்து பேசப்பட்டது. வழக்கமான சந்திப்பு தான் இது' என்று தெரிவிக்கப்பட்டது. இதே சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சந்திப்பு நடந்தது உண்மை' என்று மட்டும் கூறி நிறுத்திக் கொள்ளப்பட்டது. இருப்பினும்,"ராஜினாமா செய்யச் சொல்லி 10 நாட்களுக்கு முன்பே பிரதமர் தரப்பில் இருந்து தயாநிதிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தும், அதை செய்யாதது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்பதற்காக அழைக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. "தற்போது ராஜினாமா செய்யும்படி வலியுறுத்த வேண்டாம்; விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது தானாகவே பதவி போய் விடும்படி செய்து கொள்ளுங்கள்' என பிரதமரிடம், தயாநிதி கேட்டுக் கொண்டதாகவும் இன்னொரு செய்தி கூறுகிறது.


தயாநிதி மீது கூறப்படும் குற்றச்சாட்டு என்ன? ஸ்பெக்டரம் ஊழல் வழக்கின் மூன்றாவது குற்றப்பத்திரிகையை விரைவில் சி.பி.ஐ., தாக்கல் செய்யவுள்ளது.இதில் தயாநிதியின் பெயர் இடம்பெறலாம் என்று சி.பி.ஐ., வட்டாரங்கள்கூறுகின்றன.


தயாநிதி, முந்தைய ஆட்சியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அப்போது, ஏர்செல் நிறுவனம் சார்பில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. என்ன காரணத்தினாலோ இந்த ஒதுக்கீடு அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டது. பின், இந்த ஏர்செல் நிறுவனத்தை, மலேசிய கம்பெனி ஒன்று விலை பேசியது. அந்த குறிப்பிட்ட கம்பெனிக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டுமென மறைமுக நெருக்கடி தரப்பட்டது. இதையடுத்து, ஏர்செல் நிறுவனம் தனது பங்குகளை மலேசிய கம்பெனிக்கு விற்றது. அவ்வளவு நாட்களாக அளிக்கப்படாத ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, இந்த கம்பெனி விற்பனை நடந்து முடிந்ததும் அளிக்கப்பட்டது. இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்த உடனேயே தயாநிதியின் சகோதரரான கலாநிதிக்கு சொந்தமான, "சன் டைரக்ட்' குழுமத்தில், ரூ.600 கோடி வரையில் அந்த மலேசிய கம்பெனி முதலீடு செய்தது. ஸ்பெக்ட்ரம் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் வழங்காமல், வேண்டுமென்றே நெருக்கடி அளித்து கம்பெனியை விற்பனை செய்ய வைத்து, அதன் பிறகு உடனேயே ஸ்பெக்ட்ரத்தை வழங்கி, அதற்கு பிரதிபலனாக ரூ.600 கோடி பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தயாநிதி தரப்பு மறுத்து வந்தாலும், ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரன் தரப்பு உறுதியில் இருக்கிறது. நடந்த அனைத்து விவரங்களையும் சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் விரிவான வாக்குமூலமாக அளித்துவிட்டார். இதுதவிர, பி.எஸ்.என்.எல்., போன் இணைப்புகள் பலவற்றை தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதும் அம்பலமாகி தயாநிதிக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...