Wednesday, June 29, 2011

கண்ணே, கனி அமுதே, கனி மொழியே....


மாநிலங்கள் அவை உறுப்பினரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் சிறைவாசம் ஆரம்பித்து ஏறத்தாழ நாற்பது நாட்கள் ஆகிவிட்டன. மகள் சிறைக்கு சென்றதில் இருந்து கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டுகிறார், கவிதைகளை எழுதுகிறார், அறிக்கைளில் அழுகிறார் கருணாநிதி. ‘உங்களுக்கு ஒரு மகள் இருந்து செய்யாத தவறுக்கு அம்மகள் தண்டிக்கப்பட்டால் உங்கள் மனநிலை எந்த நிலையில் இருக்குமோ அதே நிலையில் நான் உள்ளேன்’ என்ற கருணாநிதியின் வார்த்தைகள் இனி பல காலங்கள் மக்கள் மனதில் இருந்து மறைய வாய்ப்பில்லை.
ஏறத்தாழ ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களையும் தெளிவாக கூறும் கருணாநிதி அவர்களுக்கு பதினான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. 1997 நவம்பரில் நடைபெற்ற கோவை கலவரம் 1998-ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தமிழக முஸ்லிம் சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. அதுவரை தங்களின் நண்பனாக இருந்த கருணாநிதி இவ்வளவும் தூரம் மாறிச் செல்வார் என்று முஸ்லிம்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அவரது கழுத்தில் ஏறிய மஞ்சள் துண்டின் உண்மையான நிறத்தினை முஸ்லிம்கள் அன்று கண்டுகொண்டனர். பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை, குறிப்பாக இளைஞர்களையும் பெண்களையும் அரசாங்கமும், காவல்துறையும் நடத்திய விதங்களை எழுத ஏடுகள் தாங்காது. பேருந்துகள், ரயில்கள், பணியிடங்கள், மேன்சன்கள் என அனைத்து இடங்களிலும் முஸ்லிம்கள் தனிமைபடுத்தப்பட்டு கேவலப்படுத்தப்பட்டனர்.
1998 டிசம்பர் 6யை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே காவல்துறை செய்த கெடுபிடிகளை எவரும் மறப்பதற்கில்லை. இரவோடு இரவாக முஸ்லிம்கள் தங்கியிருக்கும் பணியிடங்களுக்கு சென்று எவ்வித காரணமும் இன்றி அப்பாவிகளை கைது செய்து சென்றனர். மறுநாள் விடிந்த பின்னர் தான், ஒரு கட்டிடத்திற்கு ஒருவர் என்ற கணக்கில் காவல்துறை முஸ்லிம்களை கைது செய்து சென்றுள்ளனர் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்.
செல்வாக்குமிக்கவர்களும், செல்வந்தர்களும், தாய்ச்சபையாம் முஸ்லிம் லீக்கின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து பார்த்தனர், கெஞ்சியும் பார்த்தனர். ‘எதுவும் செய்ய முடியாது, பத்து நாள் கழித்துதான் விடுவிப்போம்’ என்ற பதில்தான் கிடைத்தது.
குண்டுவெடிப்பை காரணம் காட்டி அப்பாவிகளை சிறையில் வைத்து அழகு பார்த்தீர்கள். பெற்றோர்களின் மரணத்திற்கும், மனைவியை பார்ப்பதற்கும்…ஏன் திருமணத்திற்கு கூட பரோலில் தானே வந்து சென்றார்கள் அந்த அப்பாவிகள். அன்று அவர்களின் குடும்பத்தினரும் இதே வார்த்தைகளை தானே சொல்லியிருப்பார்கள். நாற்பது நாட்கள் மகன் ஆதித்யாவை பார்க்க முடியாமல் கனிமொழி ஏங்குவதாக இன்று உங்கள் பரிவாரங்கள் கூறுகின்றனர்.
எத்தனையோ பெற்றோர்கள் பதினான்கு ஆண்டுகளாக இதே சோகத்தை அனுபவித்து வருகின்றனர் என்பது இப்போதாவது புரிகிறதா? உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறையில் மரணித்தவர்களின் குடும்பத்தினர் நிலை இப்போதாவது புரிகிறதா?
2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் உங்களை சிறையில் அடைத்தார். இரவில் லுங்கியுடனும் காலில் செருப்பில்லாமலும் அழைத்து செல்லப்பட்டீர்கள். அனைவரும் உங்களுக்காக பரிதவித்தனர். தவறுகளை உணர்ந்து நீதியை நிலைநாட்டுவீர்கள் என்று அனைவரும் நம்பி 2006-ல் உங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தார்கள். ஆனால் என்ன நடந்தது…அண்ணா நூற்றாண்டு விழா,செம்மொழி மாநாடு என பல நிகழ்வுகள் வந்த போது, இப்பொழுதாவது அப்பாவிகள் விடுவிக்கப்படுவார்களா? என ஏங்கிய பொழுது மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்திய உளவுத்துறையை சார்ந்த ரத்தின சபாபதிக்கு தண்டனையை வழங்காமல் பதவியை வழங்கி அழகு பார்த்தீர்கள். நீங்கள் இன்னும் பாடம் படிக்கவில்லை என்பதை தான் இச்சம்பவங்கள் உணர்த்தின.
உங்கள் குடும்பத்தினர் லட்சத்திலும் கோடியிலும் அடித்த ஊழல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன. அதற்காக அறுவடையும் ஆரம்பித்துள்ளது. தற்போது அழுது புலம்புகிறீர்கள். காலம் மிகவும் வேகமாக சுழல்கிறது. எவரும் அதே நிலையில் நிலைத்திருப்பதில்லை. இந்த இடத்தில் ஒரு சிறிய நினைவூட்டல், உங்களுக்கு.
உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் ஒரு அருமையான பொன்மொழியை கூறினார்கள். ‘அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவனுக்கும் படைத்தவனுக்கும் மத்தியில் திரைகள் ஏதுமில்லை’. படைத்தவன் உங்கள் ஆயுளை நீட்டியிருப்பது செம்மொழி மாநாடு நடத்துவதற்கும் கலைப்பணி செய்வதற்கும் அல்ல என்று நினைக்கிறோம். தவறுகளை களைந்து புதிய வாழ்க்கையை அமைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
படிப்பினை கருணாநிதிக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...