Sunday, June 26, 2011

கோமாளிகள் அல்ல என்பதைப் புரியவைத்த ஜெயலலிதா!

தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகள் என்று கிண்டலடித்திருந்தனர் சிறீலங்காவின் அரசியல் தலைவர்கள். கடந்த கருணாநிதியின் ஆட்சியைப் பார்த்து அவர்கள் இவ்வாறு சொல்லியிருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாதளவிற்கு சிறீலங்காவிற்கு பெரும் நெருக்கடியாக மாறியிருக்கின்றார் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா.

தேர்தலில் வெற்றி பெற்றபோது, இனப்படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்காவின் மீது பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரவேண்டும் என்பதையும், மகிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தவர் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் சிறீலங்கா மீதான விரோதப் போக்கை முளையிலேயே கிள்ளியெறிய நினைத்தது சிறீலங்கா. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தமது வலைக்குள் விழ வைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா இறங்கியிருந்ததாக செய்திகளும் வெளியாகியிருந்தன.

இதன் ஒரு முயற்சியாக முன்னாள் அமைச்சரும் தற்போது மகிந்த ராஜபக்சவிற்கு ஆலோசகராக இருப்பவருமான மிலிந்த மொறகொட தமிழக முதலமைச்சரை கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேச்சுநடத்தியதாகவும்செய்திகள்வெளியாகியிருந்தன.

மிலிந்த மொறகொட தெலுங்கு தேசக் கட்சியின் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நண்பனாக இருக்கின்றார். சந்திரபாபு நாயுடு ஜெயலலிதாவிற்கு நட்பாக இருக்கின்றார். இந்த உறவுப் பாலத்தைப் பயன்படுத்தி ஜெயலலிதாவுடன் இரகசியச் சந்திப்பை நடத்த சிறீலங்கா முயன்றது.

சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஜெயலலிதாவும் இந்தச் சந்திப்புக்கு இசைந்ததாகவும், இதனையடுத்து விசேட விமானத்தில் இந்தியாவுக்கு சென்ற மிலிந்த மொறகொட முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து சில நிமிடங்கள் கலந்துரையாடிதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் இக்கலந்துரையாடலின் விவரங்கள் வெளிவரவில்லை என்றும் ஆனால், சிறீலங்காவிற்கும் தமிழக அரசுக்கும் இடையிலான புதிய உறவுக்கு இந்தச் சந்திப்பு வழி வகுத்துள்ளதாகவும் செய்திகள்கசியவிடப்பட்டிருந்தன.

ஆனால், இந்தச் செய்தியை முறியடிக்கும் வகையில் அதுவும் பதவியேற்ற ஒரு சில வாரங்களுக்குள் சிறீலங்கா போர்க் குற்றவாளி என்றும் சிறீலங்கா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை ஜெயலலிதா நிறைவேற்றுவார் என்று சிறீலங்கா மட்டுமல்ல யாரும் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளுமே இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருக்கின்றன. எந்தவொரு கட்சியும் இந்தத் தீர்மானத்தை நிராகரிக்கமுடியாது ஆதரவு வழங்கவேண்டிய ஒரு நிலையை ஏற்படுத்தியது ஜெயலலிதாவின் வெற்றிதான்.

தான் முன்னெடுக்கும் காரியத்தில் எப்போதும் உறுதியாகவும், துணிச்சலாகவும் செயற்படுபவர் என்பதை ஜெயலலிதா கடந்த காலங்களில் நிரூபித்திருந்தவர். அதனை ஈழத் தமிழர் விடயத்திலும் காண்பிக்க வேண்டும் என்பதை அவர் வெற்றி பெற்று பதவியேற்றபோது எமது ஊடகத்தின் வாயிலாக கோரிக்கையாக விடுத்திருந்தோம். சட்டமன்றத்தில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் அதனை அவர்நிரூபித்திருக்கின்றார்.

ஜெயலலிதா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை சிறீலங்கா அசட்டையாக புறம்தள்ளியுள்ளபோதும், இந்தத் தீர்மானம் அவர்களுக்கு அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டபோது அதனை மௌனமாக வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, தமிழக மக்களின் உணர்வுபூர்வமான எழுச்சியையும் தனது அதிகாரத்தைக் கொண்டு தடுத்து நிறுத்தியவர் கலைஞர் கருணாநிதி. ஆனால், தற்போதைய முதல்வர் அதற்கு இடமளிக்கமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது.

ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டில் இருந்து இந்தியா தங்களைக் காப்பாற்றும் என்று சிறீலங்கா உறுதியாகக் கூறிவருகின்றது. ஆனால், இந்திய மத்திய அரசு, மாநில அரசுகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணம்போல் செயற்பட்டுவிட முடியாது என்பதை இந்தியாவின் கடந்தகால அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொண்டவர்களுக்கு புரியும். எனவே, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. இதன் தார்ப்பரியங்களை வரும் காலங்களில் தெரிந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...