2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் பற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில், டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் மூலம் குசேகான் ஹெல்த்தி மற்றும் சினியுக் நிறுவனம் ஆகியவற்றின் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி போய் சேர்ந்ததாக கூறப்பட்டு இருந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் சுவான் டெலிகாம் நிறுவனம் பெற்ற ஆதாயத்துக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் பெயரும் இடம் பெற்று இருந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாகித் உஸ்மான் பல்வா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்ட ரூ.200 கோடிக்கு சமமான மதிப்புள்ள டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பதாகவும், இது தொடர்பாக அமலாக்கப் பிரிவுக்கு விரைவில் கடிதம் எழுத இருப்பதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
சி.பி.ஐ. நிறுவனமே நேரடியாக சொத்துக்களை முடக்க முடியாது என்பதாலும், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டு பணம் விதிமுறை மீறல் சட்டத்தின்படி, அமலாக்கப் பிரிவுதான் அந்த நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதாலும் அந்த அமைப்புக்கு கடிதம் எழுத இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறின.
No comments:
Post a Comment