Sunday, June 19, 2011

அரசு கேபிள், இலவச அரிசி, மிக்சி, கிரைண்டர் ஜெயலலிதா ஆட்சிக்கு அமோக ஆதரவு; லயோலா கல்லூரி கருத்து கணிப்பு

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 20-ந்தேதி அ.தி. மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முதல் ஒரு மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி சென்னை லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு நடத்தியது.
அரசு கேபிள், இலவச அரிசி, மிக்சி, கிரைண்டர்
 
 ஜெயலலிதா ஆட்சிக்கு
 
 அமோக ஆதரவு;
 
 லயோலா கல்லூரி கருத்து கணிப்பு
 
தமிழ்நாடு முழுவதும் 3132 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை இன்று காலை பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் வெளியிட்டார்.   அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று 74.8 சதவீதம் பேர் எதிர்பார்த்ததாக கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.
 
ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகியவையே ஆட்சி மாற்றத்துக்கான முக்கிய காரணங்கள் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். புதிய தலைமை செயலகம் கட்டும் பணியை கைவிட 66.1 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யும் சட்ட திருத்தத்துக்கு 62.3 சதவீதம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தி, அந்த அனுபவத்தின் பின்னணியில் அடுத்த ஆண்டு திருத்தம் செய்து கொள்ளலாம் என்று நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
அண்ணா பல்கலைக் கழகத்தை ஒரே பல்கலைக் கழகமாக மாற்ற 46.3 சத வீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.   தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டத்துக்கு ஏகோ பித்தபடி 80 சதவீத மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
முதியோர் உதவித் தொகையை வங்கி வழியாக கொடுப்பதற்கு 85.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை இலவசமாக வழங்கும் திட்டத்தை 54.4 சதவீதம் பேர் வரவேற்றுள்ளனர். 33 சதவீதம் பேர் இந்த திட்டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்துள்ளனர்.
 
இலவச அரிசி திட்டத்துக்கு மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் (67.5) ஆதரவு கிடைத்துள்ளது. அது போல மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் கொடுக்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
 
இலவச லேப்-டாப் திட்டத்தை 84.7 சதவீதம் பேர் வரவேற்றுள்ளனர். கலர் டி.வி.   இலவச டி.வி. திட்டம் ரத்து செய்யப்படுவதையும், மீதமுள்ள கலர் டி.வி.க்களை தொண்டு அமைப்புகளுக்கு கொடுக்கவும் 34.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
கலைஞர் காப்பீட்டு திட்டம், கைவிடப்படுவதற்கு ஒருமித்த கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை. கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை கைவிட 24.3 சதவீதம் ஆதரவு கொடுத்துள்ளனர். அதற்கு பதில் புதிய வீடு கட்டும் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று 43.7 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.
 
கேபிள் டி.வி. அரசுடமையை ஆக்கும் திட்டத்தை உடனே செயல் படுத்த வேண்டும் என்று கருத்து கணிப்பில் மக்கள் கூறியுள்ளனர். 91.3 சத வீதம் பேர் கேபிள் டி.வி. அரசுடமை ஆவதை ஆதரிக்கிறார்கள். இந்த சர்வேயில் கேபிள் டி.வி. அரசுடமை ஆவதைத் தான் மக்கள் அதிக அளவில் வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டாஸ்மாக் விற்பனை நேரத்தை அதிகரிக்க கூடாது என்று 73.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.   தமிழ்நாட்டில் மேல்-சபை வேண்டாம் என்று அரசு எடுத்த முடிவு சரியானது தான் என்று 46.7 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.
 
பொதுவாக அ.தி.மு.க. ஆட்சி கடந்த ஒரு மாதத்தில் மிகச் சிறப்பாக செயல் படுவதாக 72.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. அறிவித்துள்ள இலவச திட்டங்கள் அனைத்தையும் ஜெயலலிதா 1 1/2 ஆண்டுக்குள் நிறைவேற்றி விடுவார் என்று 54.5 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
கச்சத்தீவை மீட்கும் தமிழக அரசின் தீர்மானத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 62.9 சதவீதம் பேர் வரவேற்றுள்ளனர். அது போல ராஜபக்சேயை போர் குற்ற வாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்கவும், இலங்கை மீது பொருளாதார தடை எடுக்கவும் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு 81.5 சதவீதம் பேர் ஏகோ பித்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று 69.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழம் காண்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று 64.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
தமிழ்நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளில் மின் வெட்டு முதல் இடத்தில் இருப்பதாக 76 சதவீதம் பேர் கூறி உள்ளனர். விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளதாக 71.2 சதவீதம் பேர் கூறி உள்ளனர். மற்றபடி அ.தி.மு.க. ஆட்சி சிறப்பான தொடக்கத்துடன் இருப்பதாக பெரும்பாலானவர்கள் திருப்தி தெரிவித்து கருத்து கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...