Saturday, June 11, 2011

ஐந்து ஆண்டுகளாக கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது போலீஸ்

"தமிழக போலீசின் இழந்த பெருமை விரைவில் மீட்கப்படும்,'' என முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் குறிப்பிட்டார்.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை:கடந்த ஐந்து ஆண்டுகள் தி.மு.க., ஆட்சியில் மக்கள் பட்ட வேதனை சொல்லி மாளாது. ரேஷன் பொருட்கள் கொள்ளை, மணல் கொள்ளை, நில ஆக்கிரமிப்பு என ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கித் தவித்தது. ஐந்து ஆண்டு கொடுங்கோல் ஆட்சி முடிந்து, அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பின், மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்கியுள்ளனர்.இந்த அரசு பொறுப்பேற்றதும், முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டேன். இதுவரை இல்லாத அளவு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளேன்.கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த முக்கிய பிரச்னை, சட்டம் ஒழுங்கு சீரழிவு தான். இந்தியாவிலேயே தலைசிறந்த போலீசாக தமிழக போலீஸ் இருந்தது. ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பெயர் பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்மானம் இழந்து, பரிதாபமாக காட்சியளித்தது.

நான் முதல்வராக பொறுப்பேற்றதும், போலீசார் தங்கள் கடமையை செய்வதில் எவ்வித குறுக்கீடும் இருக்கக் கூடாது என உத்தரவிட்டேன். குறுக்கீடுகள் இல்லாமல் போலீசார் செயல்பட்டால், சமூக விரோதிகள் அஞ்சும் நிலை ஏற்படும்; சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும். மக்கள் அமைதியாக வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். தேவையான அளவு போலீசார் எண்ணிக்கை இருப்பது அவசியம். போலீசாரை அதிகாரபூர்வமின்றி வேறு பணிகளுக்கு அனுப்பினால், சட்டம் ஒழுங்கை அவர்களால் எவ்வாறு நிலைநாட்ட முடியும்.

கருணாநிதி குடும்பத்தினர் வெளியே செல்லும்போதும், வரும்போதும் அவர்களது பாதுகாப்புக்கு போலீசார் அனுப்பப்பட்டனர்.கருணாநிதியின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள் என, பரந்து விரிந்த குடும்பத்தில் 135 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக, அதிகாரபூர்வமற்ற முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். 135 குடும்பங்களின் பாதுகாப்புக்கு போலீசார் சென்றுவிட்டால், சட்டம் ஒழுங்கை எவ்வாறு நிலைநாட்ட முடியும்; குற்றங்களை எவ்வாறு போலீசார் தடுக்க முடியும்.

மதுரையில் அழகிரியின் குடும்பத்துக்கு மட்டுமன்றி, அவரைச் சுற்றித் திரியும் சமூக விரோதிகளுக்கும் அதிகாரபூர்வமற்ற முறையில் போலீசார் நியமிக்கப்பட்டனர். வணிக நிறுவனங்களுக்கும் தவறான வழியில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.சென்னையில் போக்குவரத்து போலீசார், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்புக்கு என, அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதால், சென்னையில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கட்டப் பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, கள்ள நோட்டு, மணல் கொள்ளை போன்றவற்றில் எவ்வித பயமுமின்றி சமூக விரோதச் செயல்களில், கடந்த காலத்தில் ஈடுபட்டதை அனைவரும் நன்றாக அறிவர். தற்போது, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண் கூடாகப் பார்க்கிறீர்கள்.

கடந்த ஆட்சியில், போலீசார் முதல் போலீஸ் உயரதிகாரிகள் வரை, எங்கு நியமிக்க வேண்டும் என்பதை கருணாநிதியின் குடும்பத்தினரும், உள்ளூர் கட்சி பிரமுகர்களும் முடிவு செய்து உத்தரவிடும் நிலை இருந்தது. இதனால், போலீசாரின் கட்டுப்பாடு சீர்குலைந்தது. சமூக விரோதிகள் சிலர் அரசியல் ஆதரவுடன், கட்டப் பஞ்சாயத்து, சொத்துகள் பறிமுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். யாராவது தங்களது சொத்துகளை விற்க வேண்டுமென்றால், சில முக்கிய பிரமுகர்களின் அனுமதியை பெற்று தான் விற்க முடியும் நிலை இருந்தது. எனவே தான், கட்டாயப்படுத்தி பறிக்கப்பட்ட சொத்துகளை மீட்க, தனிச் சட்டம் விரைவில் நிறைவேற்ற உள்ளோம்.

இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளி, வேறு மாநிலங்களில் விற்கப்பட்டன. இந்த ஆட்சி வந்த பின், இரண்டு வாரங்களில் மணல் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளன. மணல் கொள்ளையில் ஈடுபட்ட 897 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, 810 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணல் கடத்திய 112 லாரிகள், 74 டிராக்டர்கள், நான்கு தானியங்கி பளு தூக்கும் இயந்திரங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசார் இழந்த பெருமை விரைவில் மீட்கப்படும். தமிழகம் விரைவில் முழு அமைதிப் பூங்காவாக மாறும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...