Tuesday, June 14, 2011

என்ன செய்திருக்க வேண்டும் கருணாநிதி!

 




கலைஞர் கருணாநிதி என்ற ஒரு பெயரின் மூலம், தமிழ்நாட்டின் 60 ஆண்டுகால வரலாற்றை ஓரளவு அல்ல பெருமளவு தெரிந்து கொள்ள முடியும்.


ஆற்றல், அறிவு, திறமை, ராஜதந்திரம், போராட்ட குணம், திட்டமிட்டபடி செயலாற்றுதல், எதிரிகளை வீழ்த்துதல் உள்ளிட்ட பல குணாதியங்களை கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தார் என்றால், அவர் கருணாநிதி என்று அடித்துச் சொல்லமுடியும். ஏன் இருந்தார் என்று சொல்கிறீர்கள்.. அவர்தான் இன்னும் இருக்கிறாரே… அப்படி இருக்கும் போது, இருந்தார் என்று சொல்வது சரியா என்று சிலர் வாதம் செய்யலாம்.

 ஆமாம். அந்த குணங்கள் எல்லாம் கொண்ட கருணாநிதி இருந்தார். இப்போதிருக்கும் கருணாநிதிக்கு அந்த குணங்கள் எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.


அவருக்கு இருப்பதெல்லாம் ஒரு குணம்தான். அது குடும்ப பாசம். குடும்ப பாசத்தால், ஒரு தலைவர் இன்று வீணாகிக் கொண்டிருக்கிறார். ஏன் இந்த குடும்ப பாசம்?


கனிமொழி சிறையில் இருப்பதால்.


தி.மு.க. தலைவருக்கு சிறை ஒன்றும் புதிதல்ல. சிறையில் தி.மு.க.வினர் இருந்தால், அதை பெருமையாக கருதிக்கொள்வதுதான் அவர்களது வாடிக்கை. அதே சிறையில் தான் கனிமொழி தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால், காரணம் தான்வேறு.


ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழி தள்ளப்பட்டிருக்கிறார். அதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.


கனிமொழி ஏன் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது ஊரறிந்த விஷயம். ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் முதலில் சிக்கியவர் தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரும், மத்திய அமைச்சராகவும் இருந்த ஆ.ராசா. இவர் ஊழல் செய்த வழக்கில் கனிமொழி கூட்டுச் சதியாளர் என்று சி.பிஐ. குற்றஞ்சாட்டியதோடு, கனிமொழியை கைது செய்து இருக்கிறது.

 
கைது செய்யப்பட்ட பிறகு, இரண்டு முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் செஷன்ஸ் கோர்ட்டில், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

 
அடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

 
இரண்டாவது முறையாக ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட போது, ஐகோர்ட் என்ன சொல்லியது?

1. இந்த வழக்கில், கனிமொழி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன.

2. ஸ்பெக்டரம் ஊழல் மூலமாக கிடைத்த பணத்தில் கனிமொழி பயனடைந்து இருப்பதற்கான ஆதாரங்களை சி.பி.ஐ. கொடுத்து இருக்கிறது.

3. இவர் பலமிக்க அரசியல் கட்சித் தலைவரின் மகள். இவரை வெளியே விட்டால், சாட்சிகளை கலைத்துவிடுவார்.

4. இப்படிப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கப்பட முடியாது.

இவ்வாறு ஐகோர்ட் நீதிபதி சொல்லிவிட்ட பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தால் கூட கிடைக்காது என்று தி.மு.க.வின்  மூத்த வ.க்கீல்களே அடித்து சொல்கிறார்கள்.

 
இதன் பின்னரும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல, என் மகள் கனிமொழி குற்றமற்றவள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் கருணாநிதி உண்மையில் அறிவார்ந்தவரா… ஆற்றல் மிக்கவரா… திறமைக்காரரா…

என்னதான் மகள் என்றாலும், அவரை டெல்லியில் பிடித்து வைத்திருப்பது கேடி ரங்காவா… கில்லாடி பில்லாவா… அல்லது உ.பி.யில் இருக்கும் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களா…



சி.பி.ஐ.தானே பிடித்து கைது செய்து சிறையில் தள்ளி இருக்கிறது. குற்றமே செய்யாமல், ஒருவரை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது என்றால், கருணாநிதி என்ன செய்வார் என்று தெரியாதா? இந்தியாவையே போராட்டத்தால் உலுக்கி இருப்பாரே?

 

நேற்று, அதாவது ஜூன் 10ம் தேதி அறிவாலயத்தில் தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூடியது. அதில், சி.பி.ஐ.-யை கண்டித்து தீர்மானம் போட்டிருக்கிறார்.

 

”கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனர் ஷரத்குமார், பங்குதாரர் கனிமொழி எம்.பி. ஆகியோரை அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றவாளியாக சி.ஐ.பி. சித்தரித்திருப்பது முற்றிலும் தவறு. ஸ்பெக்டரம் வழக்கில், கடன் பரிவர்த்தனை விவகாரத்தை சேர்த்தது தவறு.

 

சி.பி.ஐ. தங்கள் புலன் விசாரணையில், கைது செய்யாத ஒருவரை, அவர் நீதிமன்ற சம்மன்படி ஆஜராகும் போது, அவரை சிறையில் அடைக்க வாதாடுவது சட்டத்துக்கு முரணானது. இந்த நிலையை கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது”

 

-இவ்வாறு தீர்மானம் போகிறாரே கருணாநிதி. இது சரியா?

 

அப்படி என்றால், கனிமொழி குற்றமற்றவர் என்று சொல்லும் போது, ஆ.ராசாவைப் பற்றி இதுவரை ஏன் எந்த தீர்மானமும் போடவில்லை. ராசாவும் குற்றமற்றவர். அவரது கைதும் சட்டத்துக்கு முரணனானது என்று சொல்லி இருக்கலாமே.

 

அப்படியென்றால், ராசா ஊழல் செய்திருக்கிறார் என்று தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா?

 

கனிமொழியை காப்பாற்ற முயற்சிக்கும் ராசாவை ஏன் காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

 

உண்மையில் கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்?

 

கனிமொழி மற்றும் ஷரத்குமாரை காப்பாற்றும் தீர்மானம் போடும் கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்?

 

-இதுவரை நாம் கனிமொழிக்காக எத்தனையோ முறை போராடி விட்டோம். இந்த நிலையில் நாம் கட்சியையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

 

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வரும் வரை, அவரை கட்சியிலிருந்து நீக்கி வைக்கலாம். அதே போல ராசவையும் கட்சியிலிருந்து நீக்கி வைக்கலாம்.


இறுதி தீர்ப்பு வந்த பிறகு அவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்து பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.


-இப்படித்தானே தீர்மானம் போட்டி இருக்க வேண்டும்.


இதுதானே சரியான தீர்மானம்.



கொஞ்சமாவது கட்சியை பற்றி நினைத்திருந்தால், இப்படி ஒரு தீர்மானத்தை கருணாநிதி கொண்டு வந்திருப்பார்.

கட்சியைவிட குடும்பமே முக்கியமாகப்படுகிறது. அதன் விளைவுதான், சி,.பி.ஐ-யை கண்டித்து தீர்மானம் போடுவதை நினைத்தால் கருணாநிதி மீது பரிதாபம்தான் மேலிடுகிறது.

 

கருணாநிதி ஓர் ஊழல்வாதி என்று முத்திரை குத்தியவர் எம்.ஜி.ஆர்.

 

அந்த முத்திரை அழிந்துபோய், கருணாநிதி ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்ற அளவுக்கு 2006 வரை மக்கள் நினைத்திருந்தார்கள். மேலும், அந்த ஊழல் விவகாரங்களை எல்லாம், மக்கள் மறந்தேவிட்டார்கள்.

 

ஆனால், ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் தி.மு.க. மீது முத்திரை குத்தப்பட்டது. இதைவிட, கருணாநிதி மீது குத்தப்பட்ட முத்திரை, அவரது முகத்திரையாகவே மாறிவிட்டது.

 

தனது அந்திமக் காலத்தில், ஊழல்  முத்திரை, முகத்திரையோடு வாழ வேண்டுமா?

கொஞ்சம் யோசியுங்கள் கலைஞர் கருணாநிதியே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...